இதழ் 15
மார்ச் 2010
  ஆன்மீக அயோக்கியத்தனங்கள்
நெடுவை தவத்திருமணி
 
     
  நேர்காணல்

"வ‌ங்க‌ம், குஜராத்தி, மலையாளம், கன்னடம் போல சிறந்த எழுத்தாளர்கள் தமிழில் இருப்பதாக‌ச் சொல்லமுடியாது!"

கடலோடி நரசையா

பத்தி:

ஏ ஆர் ரஹ்மான் : வெற்றியின் செய்தி

அகிலன்

அக்காவின் சிவப்பு புலோட்
சு.யுவ‌ராஜ‌ன்


ம‌ற‌க்கும் க‌லை!
ம. நவீன்

பேயும் பயப்படும்
அ.ரெங்கசாமி

கட்டுரை:

இடைநிலைப் பள்ளியில் தமிழுக்கொரு சோதனை காண்டம் ‘அடா பூன் செரூப்பா, தடா பூன் செரூப்பா’!
ஏ.தேவராஜன்

வாசிப்பு : சில பதிவுகள்
ப. மணி ஜெகதீசன்

ஆன்மீக அயோக்கியத்தனங்கள்
நெடுவை தவத்திருமணி

சிறுகதை:

புலவர் வேந்தர்கோனின் வரலாறிலிருந்து பிரிக்க இயலாத இன்னும் சில பக்கங்கள்
கோ. புண்ணியவான்


அழைப்பு
சு. யுவராஜன்

தொடர்:


எனது நங்கூரங்கள் ...8
இளைய அப்துல்லாஹ்


நடந்து வந்த பாதையில் ...3
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...5


நட்சத்திரவாசி


எம். ரிஷான் ஷெரீப்

செல்வராஜ் ஜெகதீசன்

ஏ. தேவராஜன்

பா. அ. சிவம்

சந்துரு

ரேணுகா

புத்தகப்பார்வை:


தேடியிருக்கும் தருணங்கள்… 17 ஆண்டுகளுக்குப் பின்னர்
இள‌ஞ்செழிய‌ன்
     
     
 

விஜயகுமார் என்ற நாமம் பெற்ற முன்னாள் யெல்லைசி ஏஜெண்ட் தன்னை மஞ்சள் உடைக்குள் மறைத்துக் கொண்டு கல்கி பகவான் நானென்று சொன்னார். கல்கி பகவான் போட்டோவிலிருந்து விபூதியாய் கொட்டுகிறது என்ற புரளிகள் எல்லாம் அந்தக் காலத்தில் மிகப் பிரபலம். பக்தர்கள் குழுமினர். விஷ்ணுவின் அவதாரம் நான் என்றார் விஜயகுமார். கல்கி பகவானைச் சந்திக்க ரூபாய் 50,000, அவரது மனைவியைச் சந்திக்க ரூபாய் 25,000 கொடுக்க வேண்டுமாம். அவரைச் சந்திக்க ஏன் பணம் கொடுக்க வேண்டுமென்று தெரியவில்லை. அவதாரம் – பணம், பேச்சு ஒரு மாதிரியும் செயல் ஒரு மாதிரியாகவும் இருக்கும் அவலத்தைக் கவனியுங்கள். பணம் கொட்டத் தொடங்கியது. பாலிவுட் பிரபலங்கள் கல்கி பகவானின் பக்தர்களாம்.

2002, டிசம்பர் மாதம் 17ம் தேதி விஷ்வநாத் சுவாமி என்பவர் சென்னை ஹைஹோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். கல்கி டிரஸ்ட் ஆஃப் ரூரல் சர்வீஸ், கல்கி யக்னாஸ் டிரஸ்ட் மற்றும் கல்கி ஹீலிங்க் மிஷன் ஆகிய டிரஸ்டுகளுக்கு வரும் நன்கொடைகள் பொது மக்களுக்குச் செலவிடாமல் தன் குடும்பத்தாரால் நடத்தப்படும் கம்பெனிகளுக்கு டைவர்ட் செய்யப்படுகிறது என்றும் கல்கி பகவானின் பிசினஸ் ஆக்டிவிட்டீஸ்கள், அவரின் சொந்த சொத்துக்கள் மற்றும் சோர்ஸ் ஆஃப் ஃபண்ட்ஸ் பற்றி விசாரிக்க வேண்டுமென்றும் கேட்டிருந்தார். அந்த வழக்கு டிஸ்மிஸ்ஸாகி பின்னர் சுப்ரீம் கோர்டு சென்று மீண்டும் ஏதேதோ நடந்தது. (செய்தி உதவி - ஹிந்து).

ஆரம்பகாலம் தொட்டே அவருடன் நண்பராக இருந்த வந்த விஷ்வ நாத், கல்கி மக்களையும், அரசினையும் ஏமாற்றி வருகிறார் என்று அவர் மீது பல வழக்குகளையும், பத்திரிக்கைகளில் கல்கியின் மீதான குற்றச்சாட்டுச் செய்திகளையும் கொடுத்து வந்திருக்கிறார், வந்து கொண்டுமிருக்கின்றார். இவரின் கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக, சமீபத்தில் கல்கி பகவானின் மகன் தன் தந்தைக்கு எதிராய் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தார். தொடர்ந்து தனி அமைப்பு ஒன்றினை ஆரம்பிக்க போவதாகவும் சொல்லி இருக்கின்றார். உடனே கல்கி இனிமேல் பக்தர்களுக்கு நடத்தப்படும் வகுப்புகள் இலவசம் என்றும், நிர்வாகச் செலவுகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்று அவசர அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.

'கல்கி டிரஸ்ட் ஃபார் ரூரல் சர்வீஸ்' என்று ஒரு டிரஸ்ட் வைத்துள்ளனர். ஏழைகளின் உதவிக்கு என டிரஸ்ட் மூலம் பல கோடி ரூபாய் நன்கொடை வசூலாகிறது! அதில் சொற்ப அளவே ஏழைகளுக்குப் போகிறது. மீதிப் பணத்தை கல்கி பகவானின் மகன், தன் கட்டுமான கம்பெனியான 'கோல்டன் ஷெல்டர் பிரைவேட் லிமிடெட்'டில் கொட்டி, கோடிகோடியாகச் சம்பாதிக்கிறார். இதற்கு பேர்தான் டிரஸ்ட்டா?! அதே போல 'காஸ்மிக் மியூசிக் கம்பெனி' என்ற பெயரில் 10-க்கும் மேற்பட்ட சினிமா படங்களுக்கு மறைமுக ஃபைனான்ஸ் போகிறது! இதெல்லாம் அறிந்து பல பக்தர்கள் அதிருப்தியடைந்தனர். அவர்களை மீண்டும் தக்க வைத்துக்கொள்ளவே இரண்டு அணியாகப் பிரிவதுபோல் இந்தப் பிளவு நாடகம்! வெளி உலகத்துக்கு 'மகன் என் பேச்சைக் கேட்கவில்லை. பிரிந்து போகிறான்' என்று சொல்லி விட்டு தன் மகனின் பிஸினஸ் வளர்ச்சியை ரசிக்கிறார் கல்கி பகவான்!''

ஒன்னெஸ் குடும்பம் என்ற பெயரை வைத்துக் கொண்டு, டிரஸ்ட் மூலம் வரும் பணத்திற்காக தனி அமைப்புகளை உருவாக்க முனைவதாக குற்றம் சாட்டுகிறார் சுவாமி. (செய்தி ஆதாரம் – ஜூவி)

பணம் சம்பாதிக்காமல், நிறுவனம் நடத்தாமல் இத்தகைய சாமியார்களால் உபதேசம் செய்யவே முடியாதா என்று கேட்டால் அதற்குமொரு விளக்கம் சொல்வார்கள். இன்றைக்கும் திருவண்ணாமலையில் தான் தோன்றித்தனமாக திரியும் எத்தனையோ மகான்களை நாம் பார்க்கலாமே. யோகத்தின் பெயராலே, யோகாவின் பெயராலே ஆன்மீகத்தினை முன்னிருத்தி கோடி கோடியாய் மக்களின் பணத்தை நன்கொடை என்ற பெயராலே உறிஞ்சிக் கொண்டிருக்கும் அட்டைக் காளான்களாய் ஆன்மீகவாதிகள் இருக்கின்றனர். மதத்தின் பெயரால் மதக் கம்பெனி நடத்துகிறார்கள். உபதேசம், பயிற்சி என்ற பெயரில் நிலையாமை பற்றியெல்லாம் பேசி விட்டு தன்னை நாடி வரும் டிவோட்டியின் சொத்துக்களை எல்லாம் தனது ட்ரஸ்டுக்கு எழுதி வாங்கி விடுவார்கள். ஆன்மீகத்தின் பெயராலும், அரசியலின் பெயராலும் மக்களை முட்டாளாக்கி, அவர்களின் உழைப்பினை உறிஞ்சிக் கொள்ளையடிக்கும் இத்தகைய ஆன்மீக திருடர்களை யார் தண்டிப்பது? தெரியவில்லை.

படித்தவனாக இருந்தாலும், படிக்காதவனாக இருந்தாலும் முட்டாள் தனமாக யோசிப்பதில் மனிதருக்கு நிகர் மனிதர்கள் தான். தனி மனிதனொருவன் எப்படிக் கடவுளுக்குச் சமமாவான்?

கடவுள் என்பது வேறு. மனிதன் என்பவன் வேறு. கடவுள் என்பது ஒரு சக்தி. அந்தச் சக்தி மனிதனின் மனத்தில் இருக்கிறது. அன்பே கடவுள் என்றெல்லாம் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதையெல்லாம் விட்டு விட்டு சாமியார்களைப் போற்றுவதும், கால்களில் விழுவதும் கடைந்தெடுத்த முட்டாள்களின் செயல்கள். தனி மனித சாமியார் ஆராதனைகள், போற்றுதல்கள் அனைத்தும் கேவலமானது. ஆண்டான் அடிமை பாவனைகளுக்குரியது. சாமியார்களின் கால்களில் விழுவது, நமஸ்கரிப்பது என்பதெல்லாம் மடச்சாம்பிராணிகள் செய்யும் காரியம். அல்லது அந்தச் சாமியார் மூலம் காரியம் சாதிக்க விரும்பும் அயோக்கிய சிகாமணிகள் சாமியாரின் கால்களில் விழுந்தால் காரியம் ஆகிவிடும் என்பதற்காக விழுவார்கள்.

அமைதி வேண்டும், சந்தோஷம் வேண்டும் என்றால் அது தன் மனத்திடம் இருக்கிறது என்பதை அறியாமல் மானிடர்கள் சாமியார்களின் கால்களில் விழுந்து கிடப்பது அறியாமையே. படித்தவனும் விழுகிறான், படிக்காதவனும் விழுகிறான்.

பாரதியின் கீழ்க்கண்ட பாடலைப் படித்துப் பாருங்கள்.

ஆயிரந் தெய்வங்க ளுண்டென்று தேடி
அலையு மறிவிலிகாள் - பல்
லாயிரம் வேத மறிவோன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கு மதியிலிகாள் - எத
னூடுநின்றோங்கு மறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ ?

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ ? - பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ ?

வேடம்பல் கோடியோ ருண்மைக் குளவென்று
வேதம், புகன்றிடுமே - ஆங்கோர்
வேடத்தை நீருண்மையென்று கொள்வீரென்றவ்
வேத மறியாதே.

நாமம்பல் கோடியோ ருண்மைக் குளவென்று
நான் மறை கூறிடுமே - ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே

போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே - உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே

கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டு மறைகளெலாம் - நீவிர்
அவல நினைந்துமி மெல்லுதல் போலிங்
கவங்கள் புரிவீரோ?

மெள்ளப் பலதெய்வம் கூடி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப் - பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ?

ஒன்று பிரமமுள துண்மை யதுன்
உணர் வெனும் வேதமெலாம் - என்றும்
ஒன்று பிரம முள துண்மை யதுன்
உணர்வெனக் கொள்வாயே.

எத்தனை பாரதிகள் வந்தாலும் மக்கள் கேட்கவா போகின்றார்கள். மனிதர்கள் தங்களது பிரச்சினைகளுக்கு உடனடி நிவாரணம் தேடி அலைகின்றார்கள். பிரச்சினைக்கு காரணம் என்னவென்று அறிந்து கொள்ள முயலாமல் வேறு எவராவது உதவி செய்வார்களா என்று தேடுகின்றார்கள். தங்களின் பிரச்சினைகளை மற்றவர்களிடம் தினித்து அவர்களின் அறிவுரையினையோ அல்லது உதவியையோ எதிர்பார்க்கின்றார்கள். தலைவலிக்கு மருந்து சாப்பிட்டால் உடனே வலி நிற்க வேண்டுமென நினைப்பவர் போல வாழ்வியல் சிக்கல்களையும் நினைக்கின்றனர். வாழ்வியல் குடும்பச் சிக்கல்கள் அரசியலை விட சிக்கலானது. பொறுமையும், அன்பும், கூரிய அறிவும் கொண்டவர்களால்தான் வாழ்வியல் சிக்கல்களைச் சீர்படுத்த் முடியும். சாதாரண மேம்போக்கு குணமுடையவர்களுக்கு குடும்பமே பிரச்சினையாய் மாறி விடுகிறது. பிரச்சினையைத் தீர்க்க வழி தேடாமல் அதிலிருந்து விடுபட முயல்கின்ற போது, அவர்களின் கவனத்தில் விழுவது இப்போதைய சாமியார்கள்.

மனத்தின் சக்தியை நன்கு உணர்ந்து கொண்ட இவ்வகைச் சாமியார்கள் தன்னிடம் பிரச்சினைக்கு வழி தேடி வரும் பக்தர்களை தன் வார்த்தை பலிக்கும், உன் பிரச்சினை தீரும் என்று சொல்லி அதீத நம்பிக்கையை ஏற்படுத்துகின்றார்கள். என்னால் தான் உன் பிரச்சினை தீருகிறது என்பது போன்று தோற்றத்தினை ஏற்படுத்துகிறார்கள். பக்தர்கள் கொள்ளும் அந்த அதீத நம்பிக்கையினால் பிரச்சினை தீருகிறது. உண்மையில் பிரச்சினையைக் கொண்டு வந்தவரின் மனச்சக்தியினால் தான் அவரது பிரச்சினை தீருகிறது என்பதை அவர்கள் அறிந்து கொள்வதே இல்லை. இவ்விடத்தில் தான் ஏமாந்து போகிறார்கள் மனிதர்கள்.

எனது நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயத்தை இங்கு சொல்வது சாலச்சிறந்தது என்று நினைக்கிறேன். நண்பருக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு சாமியாரை அடிக்கடி சந்திப்பாராம். அந்த சாமியாருக்கு கிட்டத்தட்ட 120 கோடிக்கு சொத்துபத்துகள் இருக்கின்றனவாம். இதையெல்லாம் நீங்கள் இருந்த இடத்திலிருந்தே எப்படி சாமி பெற்றீர்கள் என்று கேட்டிருக்கிறார் நண்பர். நண்பரிடம் அந்த சாமியார் ஒரு புக்கை எடுத்துக் கொடுத்திருக்கிறார். இந்த புத்தகம் தான் காரணம் என்று சொல்லி இருக்கிறார். நண்பரும் ஆவலோடு அப்புத்தகத்தைப் படித்திருக்கிறார். நண்பருக்கு அந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பது உண்மையா என்று ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்ள விரும்பி மருத்துவம் பயின்ற தோழியிடம் அப்புத்தகத்தைப் படிக்குமாறு கொடுத்திருக்கிறார். அந்த தோழி சற்றே சோம்பலான மனதுடையவர். டிஜிஓ படிக்க வேண்டுமென்று நண்பரிடம் அடிக்கடி சொல்லுவாராம். ஆனால் படிப்பதற்கு எந்த முயற்சியையும் செய்யவில்லை. நண்பர் கொடுத்த புத்தகத்தைப் படித்து முடித்த தோழி, திடீரென்று டிஜிஓ படிக்கச் சென்று விட்டாராம். அதற்கு அந்த புத்தகம் தான் காரணம் என்றும், தனக்கு அப்புத்தகத்தை பரிசளித்தமைக்கு மிக்க நன்றி என்றும் சொல்லுவாராம். இன்றைக்கு என் நண்பரும் தான் நினைப்பதை எல்லாம் அடைந்து கொண்டுதான் இருக்கிறார். என்ன வேண்டுமோ அது கிடைத்தே விடும். எப்படிக் கிடைக்கும் எப்போது கிடைக்கும் என்பதெல்லாம் என்ன வேண்டுமென்று நினைப்பவரின் மனச் சக்தியின் வீரியத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. நான் சொல்வது உண்மையா என்பதை அறிய மனம் துடிக்கிறதா? அப்படிப்பட்ட புத்தகத்தின் பெயர் என்ன என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறதா? சொல்கிறேன்.

அப்துற் றஹீம் எழுதிய வாழ்க்கையில் வெற்றி மற்றும் எண்ணமே வாழ்வு என்ற புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். நிச்சயம் நீங்கள் கோவிலையோ, சாமியாரையோ தேடிப்போக மாட்டீர்கள் என்பதை நான் அறுதியிட்டுச் சொல்கிறேன். ஆன்மீகம், கடவுள் என்ற பெயரால் அயோக்கியத்தனம் செய்யும் திருட்டுப் பயல்களைப் பற்றி நீங்கள் நன்றாக புரிந்து கொள்வீர்கள்.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768