இதழ் 18 - ஜூன் 2010   இயற்கை (3) - வனம்
எம். ரிஷான் ஷெரீப்
 
 
 
  நேர்காணல்:

இன்று பெண்ணியம் கொச்சைப் படுத்தப்படுகின்றது!
க. பாக்கியம்

பத்தி:

நண்பரின் பரிசு

அ. முத்துலிங்கம்

இயற்கை (3) - வனம்
எம். ரிஷான் ஷெரீப்

கிர்கிஸ்தானில் ஒரு கல்யாண பட்டுப்புடவை
சீ. முத்துசாமி

செம்மொழி மாநாடும் செம்மறி ஆடுகளும் – கலைஞர் தாத்தாவுக்குக் கண்ணீர் விடாத கடிதம்
சு. யுவராஜன்

கட்டுரை:

கல்விக் கடைகள் - வியாபாரம் ஜோர்
நெடுவை தவத்திருமணி

சர்கீ மிக்கைலோவிச் ஐசென்ஸ்டைன் (Sergei Mikhailovich Eisenstein)
சு. காளிதாஸ்

உரிமைதான் புரட்சியின் எல்லை
கா. ஆறுமுகம்

ஒரு சிறுகதை ஒரு நாவல்
கிரகம்

சிங்கப்பூரின் தமிழ்க் கவிதைச் சூழல் (90-களுக்குப் பிறகு)
முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி

சிறுகதை:

குழந்தையின் தாய்
செல்வராஜ் ஜெகதீசன்


இரண்டாவது முகம்
ராம்ப்ரசாத்

தொடர்:


ப‌ல வேடிக்கை ம‌னித‌ர்க‌ள் போல‌ ...6
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...11
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...6
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...8

ஏ. தேவராஜன்

தர்மினி

லதா

ம‌. க‌விதா

பூங்குழலி வீரன்

தினேசுவரி

ரேணுகா


புத்தகப்பார்வை:


மனக்கரையில் "லங்காட் நதிக்கரை"
க. ராஜம்ரஞ்சனி

எதிர்வினை:


இது பாடாவதிகளின் காலம்
சு. யுவராஜன்

"இலக்கிய மோசடி" விவாதத்தில் நான்...
மனஹரன்
     
     
 

வனங்களின் பாடல்களை இரவுகளில் கேட்கலாம். ஏதேதோ பூச்சிகளின் ரீங்கார பிண்ணனி இசையில் அவை இரவுகள் தோறும் பாடுகின்றன. காலம் அழித்துச் செல்லும் தன் இருப்புப்பற்றிய ஏக்கங்கள் நிறைந்ததாக அப்பாடல்கள் இருக்கலாம். நாம் எதையும் கேட்காமல் உறங்கிவிடுகிறோம். இல்லாவிடில் வனத்தின் பாடல்கள் எம்மை எட்டாவண்ணம் அவ் வனங்களை அழித்துப் பரந்தவெளியாக்கி அன்றேல் கட்டடங்கள் கட்டி வனங்களை ஊமையாக்கி விடுகிறோம்.

வனத்துடனான தொடர்பு எனது ஆறு, ஏழு வயதுகளிலேயே ஆரம்பித்தது. எனது வீட்டுக்கருகில் ஒரு காடு இருந்தது. உண்மையில் அது காடு அல்ல. ஊரில் ஒருவருக்குக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் அளவு பரந்தவொரு காணிப்பரப்பு. அது ஊரின் எல்லைகளிரண்டையும் இணைக்குமளவுக்குப் பரந்தது. அதனுள் கொக்கோ மரங்களும், பலா மரங்களும், மாமரங்களும், மூங்கில்களும், தென்னைகளும், கோப்பிச் செடிகளும், இன்னும் பெயர் தெரியாத மரங்களும் சேர்ந்து எங்களுக்கான அடர்ந்த காடொன்றாக மாறியிருந்தது. அடர்த்தியான நிழல் எப்பொழுதும் அதனுள் வசித்தது. அந்தச் சிறு காட்டின் நடுவே தெளிந்த நீருடனான வற்றாத ஒரு சின்ன வாய்க்கால் சலசலத்து ஓடிக்கொண்டே இருந்தது. எனது வீட்டைச் சுற்றி என் வயதொத்த சிறுவர்கள், வகுப்புத் தோழர்கள் பதினைந்து பேராவது இருப்போம். எல்லோரினதும் விளையாடு களம் அந்தக் காடுதான்.

அந்தக் காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் டார்ஸன் (TARZAN), ரொபின்ஹூட் (ROBINHOOD) ஆகியன சிறுவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தன. நாங்களும் எங்கள் காட்டை அதில் வரும் காடுகளென எண்ணிக்கொண்டு, எங்கள் காட்டுக்குள் அந் நாயகர்களாக இலைகளையும் ஓலைகளையும் உடுத்திக்கொண்டு விளையாடுவோம். அவர்களைப் போலக் கதைத்துக் கொள்வோம். டார்ஸனைப் போல ஊளையிடுவோம். எங்கெங்கோ ஒளிந்துகொண்டிருக்கும் நண்பர்கள் அச் சத்தம் கேட்டதும் டார்ஸனை நோக்கி ஓடிவருவார்கள். எவனோ ஒருவனை உயர்ந்த மரமொன்றில் ஏற்றி அதன் உச்சியில் கட்டிய கயிற்றைப் பற்றியபடி, டார்ஸனைப் போல அங்குமிங்கும் தாவுவோம். இதே டார்ஸன் கதைக்குள் கோப்பிக் கம்புகளை வளைத்துச் செய்த அம்புகளும், உதிர்ந்த கோழி இறகுகளைச் சேர்த்துப் பின்னால் கட்டிய வில்லுகளும் கொண்டு ரொபின்ஹூட்டும் அவரது சகாக்களும் வருவார்கள். நாம் அவர்களாகக் கற்பனை செய்துகொண்டு அப் பிற்பகல்வேளைகளில் அக் காட்டுடன் விளையாடுவோம். அக் காடும் மிகக் குதூகலமாக எங்களுடன் விளையாடியிருக்கும்.

காடுகள் பெருநகரங்களுக்கு நேரெதிரானவை. பெருநகரங்களிடம் இரகசியங்கள் இருப்பதில்லை. எப்பொழுதும் வெயிலுக்கும், நிலவுக்கும், மழைக்கும், மனிதருக்கும் இடையூறின்றி வழிவிடும் மனப்பாங்கு பெருநகரங்களிடம் உண்டு. மனிதர்களின் காலடி ஓசையை எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்கும் பெருநகரங்கள் மிகப் பெரும் ஊதாரிகளை ஒத்தவை. அவை தன்னோடு எதையும் தக்கவைத்துக் கொள்வதில்லை. ஆனாலும் அதற்கு வசதிகள் வந்துகொண்டே இருக்கும். இன்றைய காலத்தில் உலகின் நவீனங்கள் எல்லாம் பெருநகரங்களில்தான் முதலில் வேரூன்றுகின்றன. தோளிலிருக்கும் தூசியைத் தட்டிவிடுவதுபோல அவை பழையனவற்றை வெகு இயல்பாக ஒதுக்கிவிடுகின்றன.

காடுகள் அப்படியானவையல்ல. அவை இரகசியங்களின் களஞ்சியம். தான் காணும், கேட்கும் எதையும் அது பிறருடன் பகிர்ந்துகொள்வதில்லை. யாரிடமாவது சொன்னால் ஆறிவிடுமென நீங்கள் எண்ணும், யாரிடமும் சொல்லமுடியாத் துயரங்களை, குறைகளை காடொன்றுக்குள் போய் தனியாக அழுது சொல்லிவிட்டு வரலாம். அது அத் துயரையெல்லாம் தனக்குள்ளே புதைத்துக்கொண்டு விருட்சங்களின் வேர்களையும், கிளைகளையும், அதன் விலங்குகளையும் வளரவிடுமே தவிர எவரிடமும் பகிர்ந்துவிடாது. அதனால்தான் பண்டைய மன்னர்களும், முனிவர்களும் வனவாசம் செய்யவும் தியானிக்கவும் தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ளவும் காடுகளுக்குள் போயிருந்திருக்கின்றனர். காலம் காலமாகக் காடுகள் எத்தனை எத்தனை இரகசியங்களைக் கண்டிருக்கும்? அவற்றின் ஞாபக அடுக்குகளுக்குள் எத்தனை உயிர்கள் வந்துபோயிருக்கும்? எத்தனை சலனங்களின் ஓசைகளைக் கேட்டிருக்கும்?

காடு தாய்மையைக் கொண்டது. அது பரந்திருக்கும் பரப்பை வானத்திடமிருந்து காத்துக் கொண்டிருக்கின்றது. வெப்பம் கமழும் கோடைகாலத்தில் அது இலைகளைத் தன் நிலமெங்கும் பரப்பி அதன் குளிர்ச்சியைப் பேணுகின்றது. மழைக்காலங்களின் நீர்த்துளிகள் நேராகக் காட்டின் நிலத்தில் விழுவதில்லை. இரவுகளில் உறங்கும் காடுகளின் நிலத்தைக் கிளைகளுக்கூடாகத்தான் நிலவும் எட்டிப்பார்க்கமுடியும். நாம் நூதனசாலையில் பொக்கிஷங்களைப் பேணிக் காத்துவருவதைப் போல, இயற்கை தன் புராதனங்களைக் காடுகளில் சேமித்துவருகிறது. எந்த நாகரீகங்களும் காடுகளுக்குள் எட்டிப்பார்க்க அஞ்சுபவையாகவே இருக்கின்றன.

இலங்கையின் இரண்டாம் தலைநகரான கண்டி எனும் பெருநகரத்தின் மத்தியில் ஒரு வனம் இருக்கிறது. நகரத்தின் சந்தடிகளிலிருந்து ஒதுங்கிப்போய் அது மேலே இருந்து நகரத்தில் நடக்கும் அனைத்தையும் பார்த்திருக்கிறது. புத்தரின் பற்களையும், தலைமுடிகளையும் பாதுகாக்கும் தங்க விகாரையான தலதா மாளிகைக்குப் பின்னாலிருக்கும் அக் காட்டுக்குள் நான் நண்பர்களுடன் பல தடவைகள் போயிருக்கிறேன். அந்த விகாரை பற்களையும், தலைமுடிகளையும் பாதுகாப்பதுபோல அந்தக் காடு பழமையைப் பாதுகாக்கிறது. பழைய மன்னர்களும், ஆங்கிலேய இளவரசிகளும் மாலைவேளைகளில் உலாப்போக பயன்பட்ட காடு என்பதால் அக் காடும், ஆங்காங்கே சீரான ஒற்றையடிப் பாதைகளும், ஓய்வெடுக்க வைக்கப்பட்டிருக்கும் நீளச் சீமெந்துக் கதிரைகளும் வனத்துறையினரால் பேணப்பட்டு வருகின்றன. அதன் பாதைகளில் காலடி வைத்ததும் குரங்குகள் வரவேற்கின்றன. அங்குதான் நான் முதன்முதல் மரங்கொத்திப் பறவையைக் கண்டேன்.

நானும் நண்பனும் போன நாளொன்றில் காட்டுக்குள் மழை இலேசாகத் தூறிக் கொண்டிருந்தது. மிகவும் இரம்மியமான மனநிலை இருவருக்கும் வாய்த்தது. அந்தக் காட்டுக்குள் முழு நகரத்திற்கும் தேவையான குளிர்ச்சியும், சுத்தக் காற்றும் தேங்கிக் கிடக்கின்றன. அதற்குள் நுழையும் எல்லோரையும் அவை மிகப்பெரும் அன்போடு தடவிக்கொடுக்கின்றன. அது கொண்டிருக்கும் விதவிதமான மரங்கள் தங்கள் மிகப்பெரும் அகலத்தைக் காட்டி ஆச்சரியப்படுத்துகின்றன. அதன் பாதைகள் தோறும் இயற்கையான கொடிகள் பெரும் ஊஞ்சல்களைப் போலத் திரண்டு கிடக்கின்றன. காடு முழுவதும் இருட்டு, பிறந்து சில நாட்களேயான கைக்குழந்தையின் உறக்கம்போல அமைதியாகக் கவிழ்ந்திருக்கிறது. அந்தக் காட்டுக்குள் ஓரழகிய குளம் இருக்கின்றது. தெளிந்த நீர் கொண்ட அக் குளத்தின் மீன்கள் எவராலும் பிடிக்கப்படாமல் மிகத் தைரியமாக நீந்திக் களிக்கின்றன.

அந்தக் காட்டின் நடுவே ஒரு கண்காட்சிசாலையும், ஒரு தியானக் கட்டிடமும் இருக்கின்றன. காட்சிசாலையில் அந்த வனத்திலிருந்து இறந்த விலங்குகள், பாம்புகள் பாடம் பண்ணப்பட்டு நமது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அழகழகான மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சிகளும் பறக்கமுடியாமல் காலத்தோடு உறைந்துபோய் அப்படியே இருக்கின்றன. தவமிருக்கும் தியானிகளை சலனமற்றுத் தாண்டும்படியாகக் காட்டின் மத்தியில்தான் தியான மண்டபம் இருக்கின்றது. அதில் வனத்திடம் ஒரு இரகசியம் போலத் தன் துயர் சொல்லவந்த அல்லது வன வாழ்வை இரசிக்க வந்த தியானிகளைக் காவியுடைகளோடு காணலாம். அனைவருமே பிற தேசத்தவர்கள். ஆண்கள். நாங்கள் போயிருந்த காலை, பிற்பகல் வேளைகளில் எந்தச் சலனங்களையும் காட்டாது சிலைபோல அமர்ந்து தியானித்துக்கொண்டிந்தார்கள். காடும் அப்படியானதுதான். ஆனால் அதன் தியானம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அது அப் பெருநகரத்தின் மத்தியிலிருந்து பல காலங்களாகத் தியானத்திலிருக்கிறது.

இலங்கையின் 'யால' காடு பல விலங்குகளைத் தன்னுள்ளே உள்ளடக்கியிருக்கிறது. சிறு வயதில் 'யால' காட்டுக்கும், பல்கலைக்கழக வகுப்புச் சுற்றுலாவாக 'சிங்கராஜ' வனத்துக்கும் சென்றிருக்கின்றேன். 'யால' காடு சிறுத்தை, யானை போன்ற இன்னும் பல விலங்குகளை தன்னுள்ளே கொண்டது. அதனுள்ளே நமது வாகனத்துடனேயே சென்று பார்க்கலாம். படங்களின் மூலம் இன்று குழந்தைகளுக்கு நாம் காட்டிக்கொண்டிருக்கும் மயில்கள், மான்கள், காட்டுமாடுகள், முள்ளம்பன்றிகள் எனப் பலவற்றை நேரில் பார்த்து வரலாம். 2004 சுனாமியின் போது அதன் ஒரு பாகத்தைக் கடல் தாகத்தோடு விழுங்கிக்கொண்ட அக் காட்டின் மரங்கள் நெருக்கமானவையல்ல.

நான் அதுவரையில் பாடப்புத்தகங்களில் மட்டும் படித்திருந்த, எங்களூரை விட்டும் மிகத் தொலைவில் இருந்த இலங்கையின் புராதன நகரங்களில் ஒன்றான அனுராதபுரத்தின் பற்றைக்காடுகளுக்குள் நண்பர்களுடன் போய் இருபது நாட்கள் தங்கியிருந்திருக்கிறேன். மின்சார வசதியோ, குழாய்நீர் வசதியோ அதுவரையில் எட்டிப்பார்க்காத பிரதேசங்களாக அவை இருந்தன. அங்கு நதிகளைக் காணவில்லை. பழைய மன்னர்களால் கட்டப்பட்ட குளங்கள் மட்டுமே பரந்து விரிந்திருக்கின்றன. அந்தக் காட்டுக்குள் மயில்கள் மிகச் சமீபமாகப் பறந்துதிரிந்தன. மயிலிறகுகள், அவை வந்துபோன வெளியெங்கும் உதிர்ந்துகிடந்தன. பாடப்புத்தகங்களுக்குள் ஒளித்துவைத்து வளருமெனக் காத்திருந்த சிறு இறகுத் துண்டுகள் போலன்றிக் கை நிறைய அள்ளிக் கொள்ள முடியுமாக அவை நிறைந்திருந்தன. ஆனாலும் எடுத்துச் சேமிக்கத் தோன்றவில்லை. நண்பன் ஒருவன் காட்டுக்குள்ளிருந்து இறந்துபோய் எலும்புகளாக மட்டும் எஞ்சியிருந்த ஒரு யானையின் எலும்புத்துண்டுகளைச் சேகரித்துத் தன்னோடு வைத்துக் கொண்டான். உண்மையில் அவன் இப்பொழுதும் யானையின் எலும்புகளை விடவும், அதன் மூலம் அக் காட்டின் ஞாபகங்களைத்தான் சேமித்து வைத்திருக்கிறான்.

அந்தக் காட்டுப்பிரதேசத்து மக்களது பிரதான தொழிலாக காடுகளை அழித்துச் செய்யும் சேனைப் பயிர்ச்செய்கை இருந்தது. காடுகளுக்குள் மிக விரைவாக இருள் கவிழ்ந்துவிடுகிறது. மாலையாகும்போது காட்டுக்குள் இருக்கவேண்டாமென அறிவுருத்தப்பட்டோம். மூர்க்கம் பிடித்த யானைகள் வந்து மிதித்துவிடுமாம். உண்மையில் நாம் அவ் விலங்குகளுக்குச் சொந்தமான வனத்தினை எமது சுய இலாபங்களுக்காக அழித்துவிடுகிறோம். எதிர்த்துக் கேள்வி கேட்கவேண்டிய, தம் உரிமை பறிபோகும் கோபத்தை அவை மூர்க்கத்துடன் நகரங்களுக்குள் வந்து அட்டகாசம் பண்ணிக் கேள்விகளாகக் கேட்கின்றன.

இந்திய எழுத்தாளர் சா.கந்தசாமியின் 'சாயாவனம்' கதையில் வரும் சிதம்பரம், ஊரே மெச்ச ஊருக்குள் ஒரு கரும்பு ஆலை கட்டுவதற்காக அந்த ஊருக்கே பிரதானமான ஒரு காட்டை அழித்து விடுகின்றான். அதன் மரங்களை வெட்டி அழித்தும் முடியாமல் பின்னால் தீயில் எரிக்கின்றான். விலங்குகள், பறவைகள் எனப்பல அத் தீயில் அழிந்துவிடுகின்றன. காட்டை அழித்து ஊரில் நிலைபெற்ற பின்பு அவன் விற்கும் புளியின் சுவையில் குறை சொல்லும் ஆச்சியொருத்தியைச் சந்திக்கின்றான். அவ்வளவு நாளும் ஊரே பாராட்டியவனிடம் ஆச்சி, முன்னைய நாட்களின் நல்ல புளியமரங்களை அவன் கருக்கிவிட்டதாகக் குறைபட்டுக்கொள்கிறாள். அவனைப் பாராட்டிப் பழகிய ஊரில் எல்லோரும் அவனிடம் எதிரே சொல்ல முடியாத மனக்குறையை அம் மூதாட்டி எளிதாகக் கொட்டிவிட்டுப் போகிறாள். காடு, ஊரின் ஒவ்வொருவர் வாயின் மூலமும் இனி அவனைக் குறை சொல்ல ஆரம்பிக்கும்.

இன்றைய காலத்தில் அழிவுக்குள்ளாகிக்கொண்டிருக்கும் காடுகள் எல்லாம் இதுபோலத்தானே தீராத மனக்குறைகளைக் கொண்டிருக்கும் ? இப்பொழுதெல்லாம் காடுகளை நாம் கொண்டாடாதவர்களாக மாறிவிட்டோம். பேணப்படாத காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறோம். காடுகளைத் தொலைக்காட்சிகளிலும், இணையத்திலும், புகைப்படங்களிலுமே குழந்தைகளுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறோம். காடு நமது தோழன் என்பது அறியாமல் காடு என்பது எங்கோ தொலைவிலிருக்கும் வேறொரு உலகமாகக் குழந்தைகள் கற்பனை செய்துகொள்கிறார்கள். அவர்களது கனவுகளில் வரும் காடுகள் என்பவை, டைனோசர் போன்ற கொடிய விலங்குகளைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் நரகக் கூடுகள்.

இனி வரும் நாட்களில் வனங்களின் படங்களைக் கொண்டே காடென்பது யாதென, வரும் சந்ததியினருக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டியிருக்கும்போல இருக்கிறது. விடுமுறை நாட்களில் ஏதேதோ விளையாட்டு உலகங்களுக்கு நம் குழந்தைகளை அழைத்துச் செல்லும் நாம் காடுகளுக்கும் அழைத்துச் சென்று காடென்பதைக் காட்டிவருவோம். காடுகளின் அழகிய பாடல்கள் நமது வீடுகளிலும் ஒலிக்கும்படியாக வீடுகளில், தோட்டங்களில் செடிகளை, மரங்களை நட்டுப் பேணி வளர்க்க ஊக்குவிப்போம். அவை சின்னஞ்சிறு காடுகளெனச் சொல்லி அக்காடுகளை நேசிக்கச் சொல்லிக்கொடுப்போம். காடுகள் ஏராளமான அமைதியைத் தன்னுள்ளே கொண்டவை. அவற்றை நேசிப்பவர்களுக்கு மட்டும் அள்ள அள்ளக் குறையாமல் அமைதியைக் கொடுப்பவை.

வனச்சிறுவனின் அந்தகன்

சூழ்ந்த நீருக்குள் மீனென அறியப்பட்டதை
செவிட்டூமை அந்தகனுக்குணர்த்திடும் படி
மிகக்கடின பணியொன்று
வனச்சிறுவனுக்கிடப்பட்டது

எந்தக் கொம்பிலும்
ஏறித் தேனெடுப்பவன்
கொடிய விலங்கினையும் தனியே வேட்டையாடி
ராசாவுக்குத் தோல்/ள் கொடுப்பவன்
வனாந்தரத்தின் அத்தனை மூலைகளுக்கும்
அமாவாசை நிசியிலும்
அச்சமின்றிப் போய்வருபவன்
முதன்முதலில் அயர்ந்து நின்றான்
கட்டளையை மறுக்க வழியற்றும்
மேற்கொண்டு ஏதும் செய்யும் நிலையற்றும்
விதிர்த்துநின்றான்

செய்வதறியாச் சிறுவன்
நடுங்குமந்தகனின் விரல்கள் பிடித்து
வனத்தின் மத்திக்கு வழிகூட்டிப் போனான்
அல்லிப் பெருங்குளத்தினுள்ளவன்
கரங்களை நுழையச் செய்திவன் 'தண்ணீர்' என்றான்
காலங்காலமாய்க் கடந்துவந்த வாழ்வின் சோர்வு தீரவெனவோ
வற்றாத் தேகத்தின் எல்லாத்தாகங்களுந் தீரவெனவோ
கரங்களைக் குழிவாக்கி உள்ளங்கையில் நீரேந்தி
அள்ளியள்ளிக் குடித்தான் அந்தகன்
சிறுவனின் பார்வைக்கு மட்டுமென
நீரின் எல்லாச் சுழிகளிலும் நழுவி நீந்தின
வண்ண வண்ண மீன்கள்

கற்றுக் கொடுக்கவேண்டிய
கால எல்லை முடிந்ததெனச் சொல்லி
அரச பரிவாரங்கள் சேதியனுப்பிய நாளில்
விடியலின் கீற்றுக்கள்
மலைகளின் கீழால் புதையுண்டு போக
விருட்ச இலைகள் நீரைச் சிதறிட
மழை தூவிற்று

வீற்றிருந்த அரசனை முன்னிருத்தி
செவிட்டூமைக் குருடனை
மீன்கள் பற்றிக் கேள்விகள் கேட்டான் மந்திரி
தாமரைக்குளத்துத் தண்ணீரில்
எண்ணங்கள் மிதக்குமவனது மொழிபெயர்ப்பாளனாகி
எல்லாக் கேள்விகளுக்கும்
மிகச் சரியாய்ப் பதில் சொன்னான் வனச்சிறுவன்

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768