இதழ் 18 - ஜூன் 2010   செம்மொழி மாநாடும் செம்மறி ஆடுகளும் – கலைஞர் தாத்தாவுக்குக்
கண்ணீர் விடாத கடிதம்
சு. யுவராஜன்
 
 
 
  நேர்காணல்:

இன்று பெண்ணியம் கொச்சைப் படுத்தப்படுகின்றது!
க. பாக்கியம்

பத்தி:

நண்பரின் பரிசு

அ. முத்துலிங்கம்

இயற்கை (3) - வனம்
எம். ரிஷான் ஷெரீப்

கிர்கிஸ்தானில் ஒரு கல்யாண பட்டுப்புடவை
சீ. முத்துசாமி

செம்மொழி மாநாடும் செம்மறி ஆடுகளும் – கலைஞர் தாத்தாவுக்குக் கண்ணீர் விடாத கடிதம்
சு. யுவராஜன்

கட்டுரை:

கல்விக் கடைகள் - வியாபாரம் ஜோர்
நெடுவை தவத்திருமணி

சர்கீ மிக்கைலோவிச் ஐசென்ஸ்டைன் (Sergei Mikhailovich Eisenstein)
சு. காளிதாஸ்

உரிமைதான் புரட்சியின் எல்லை
கா. ஆறுமுகம்

ஒரு சிறுகதை ஒரு நாவல்
கிரகம்

சிங்கப்பூரின் தமிழ்க் கவிதைச் சூழல் (90-களுக்குப் பிறகு)
முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி

சிறுகதை:

குழந்தையின் தாய்
செல்வராஜ் ஜெகதீசன்


இரண்டாவது முகம்
ராம்ப்ரசாத்

தொடர்:


ப‌ல வேடிக்கை ம‌னித‌ர்க‌ள் போல‌ ...6
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...11
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...6
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...8

ஏ. தேவராஜன்

தர்மினி

லதா

ம‌. க‌விதா

பூங்குழலி வீரன்

தினேசுவரி

ரேணுகா


புத்தகப்பார்வை:


மனக்கரையில் "லங்காட் நதிக்கரை"
க. ராஜம்ரஞ்சனி

எதிர்வினை:


இது பாடாவதிகளின் காலம்
சு. யுவராஜன்

"இலக்கிய மோசடி" விவாதத்தில் நான்...
மனஹரன்
     
     
 

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு
சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி
-பாரதி

மு.க தாத்தாவுக்கு முத்தமிழ் வணக்கம்,

அரசு, அரசியல், பாராட்டு விழா, பிள்ளைகளிடையே அதிகார பகிர்வு, முரசொலிக்குக் கடிதம், திரைக்கதைகள், செம்மொழி மாநாட்டு ஆயத்தங்கள் என இந்த வயதிலும் பல அலுவல்களை தலையில் தாங்கி சக்கரமாய் சுழன்று கொண்டிருக்கும் உங்களுக்கு இக்கடிதத்தை படிக்க நிச்சயம் நேரமோ விருப்பமோ இருக்காது. தவிர நீங்கள் பொருட்படுத்தும் அளவுக்கு நான் திரைப்படம் சார்ந்த எந்த தகுதிகளும் இல்லாதவன். இருந்தும் உங்களிடம் சொல்ல சில மனக்குறைகள் உள்ளதால் ஆர்வத்தின் உந்துதலால் இக்கடிதம் வரைய முற்பட்டேன்.

தாத்தா,

உங்கள் பேரப்பிள்ளைகளே உங்களைத் தலைவர் என்றுதான் அழைப்பதாக அறிந்தேன். நானும் உங்களை அப்படி அழைக்க ஒரு தடங்கல் இருக்கிறது. என்னைப் பொருத்தவரை தலைவன் என்பவன் சமுகத்தை தன்னலம் கருதாது, நேர்மையுடனும், ஒளி மிகுந்த எதிர்கால திட்டங்களுடன் வழிநடத்திச் செல்பவனாக இருப்பான். உங்களை இருபதாண்டுகளாக கவனித்து வரும் வகையில் அப்படி உங்களை அழைக்க மிகவும் கூச்சமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது. மற்றபடி உங்களை தாத்தா என அழைப்பதற்கான காரணத்தை சொல்லிவிடுகிறேன்.

எங்கள் குடும்பமும் திராவிட பாரம்பரியத்தைப் பின்னணியாகக் கொண்டதுதான். எங்கள் தோட்டத்து வீட்டில் பெரியார், அண்ணாதுரை போன்றவர்களின் படங்களைச் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். என் சின்ன தாத்தா ஒருவர் சுயமரியாதை திருமணம் செய்தவர். பிள்ளைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை வைத்தவர். திராவிட பாரம்பரியத்தின் மற்றொரு முகமான பிள்ளைகளை மலாய்ப் பள்ளியில் (தமிழ்நாட்டில் ஆங்கிலம்) படிக்க வைத்தவர். என்னே ஒரு கொள்கை பிடிப்பு.

தாத்தா,

நீங்கள் மிகவும் உற்சாகமாக இருப்பதாக கேள்விப்பட்டேன். உங்கள் அரசியல் எதிரிகள் அனைவரும் பலவீனமாக இருப்பது உங்களுக்கு மகிழ்ச்சியாகதானே இருக்கும். இராமதாஸ் உங்களோடு மீண்டும் ஏழாவது முறையாக? (சரியாக சொல்பவர்களுக்கு ஒரு குச்சி ஐஸ்) மீண்டும் இணைவதற்குக் காத்துக் கொண்டிருக்கிறார். வைகோவின் தொல்லை இனி இல்லை. ஜெ. வை தமிழக மக்களே மறந்துவிடும் அளவுக்கு கொடாநாட்டில் வனவாசமிருக்கிறார். அடுத்தத் தேர்தலை திறம்பட சந்திக்கும் பணப்பலம் உங்கள் கட்சிக்கு மட்டும்தான் இருக்கிறது. உங்கள் ஆட்சியின் போதே பல்வேறு சாதனைகளை ஏற்படுத்திவிடும் உங்கள் நோக்கம் பல மறத்தமிழர்களைப் புல்லரிக்கச் செய்துள்ளது.

ஐயனுக்குக் கன்னியாகுமரியில் சிலை எடுத்து திருவள்ளுவரை உலகறிய செய்தீர்கள். உங்கள் கட்சியிலும் குடும்பத்திலும் பாதிபேருக்குத் தெரியாத தமிழை செம்மொழி தரத்திற்கு உயர்த்த ஆவணச் செய்தீர். ஐந்தாம் ஆண்டு வரையே தமிழ்க் கட்டாயப்பாடமாக உள்ள தமிழ்நாட்டில் (இதற்கே திராவிட கட்சிகளுக்கு ஐம்பது வருடம் தேவைப்படுகிறது) செம்மொழி மாநாடு நடத்த இப்போது தயாரிப்பு நிலைகள் மும்முரமாக நடக்க வழி செய்திருக்கிறீர். வாரத்தில் ஏழு நாட்களும் உங்களுக்குப் பாராட்டு விழா நடத்துவதற்கே தலையைப் பிய்த்துக் கொண்டு அலையும் உங்கள் எடுபிடிகளுக்குச் செம்மொழி மாநாடு உட்சபட்ச திருநாளாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமில்லை. அன்று உங்களுக்கு உயர்ந்தபட்ச விருதான ‘செம்மொழிக் கடவுள்’ என்ற புதிய விருதை வழங்க உங்களின் தலையாய ‘கவிவருடி’ வைரமுத்துவுக்கு வழிமொழிகிறேன்.

தாத்தா,

உங்களிடம் கொஞ்சம் மனம் விட்டு பேச வேண்டும். கடந்த ஒரு வருடமாகவே தமிழுலகம் வேதனையும் வலியையும் விழுங்க இயலாமல் நடைப்பிணமாக அலைந்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும். ஈழத்தின் தார்மீகமான போராட்டத்தைச் சிங்கள அரசு பல நாடுகளின் துணையோடு வெற்றிகரமாக வீழ்த்தியது அனைவரும் அறிந்ததே. அந்த நட்பு நாடுகளில் உங்கள் கட்சி அங்கம் வகிக்கும் இந்திய அரசு தலையாயது என்பதையும் அனைவரும் அறிவர். குறைந்தபட்சம் அதைக் கண்டித்து அரசிற்கான ஆதரவை நீங்கள் மீட்டுக் கொண்டிருந்தால் உங்களை தமிழினத் தலைவர் என இன்னும் சில தற்குறிகள் சொல்லிக் கொண்டிருப்பது உண்மையாகக் கூட ஆகியிருக்கலாம். உங்கள் ஆட்சியின் பின்புலத்தில் வலிமையாக இயங்கும் குடும்பப் பொருளாதார நலன்கள் அதை விரும்பாதென தெரியாத அளவுக்கு தமிழ்மக்கள் முட்டாள்கள் அல்ல.

உங்களுக்கு விடுதலைப்புலிகளைப் பிடிக்காதென்பது பலரும் அறிந்ததுதான். ஆனால் உங்களுக்கு ஈழ மக்களையே பிடிக்காதென்பதுதான் புதிய செய்தியாக இருக்கிறது. போர் முடிந்து புனர்வாழ்விற்கான வேலைதிட்டங்களைச் சிங்கள அரசு மேற்கொள்வதற்கான அழுத்தத்தை வழங்க வேண்டிய பணி மற்றவர்களை விட தமிழக அரசிற்கு அதிகம் உள்ளது. அதை உங்கள் அரசு செய்ததா? ஒரு பொம்மை குழுவை அனுப்பி ஒப்புச் செய்துக் கொண்டதோடு சரி. இதோ செம்மொழி மாநாட்டு கொண்டாட்ட ஆயத்தங்களில் உங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறீர்.

தாத்தா,

கொஞ்சம் மனசாட்சியோடு இதைக் கேளுங்கள். இன்று தமிழ்ச் சூழலைப் பற்றியிருக்கும் அவலநிலையில் செம்மொழி மாநாடு அவசியமானது என்று நினைக்கிறீர்களா? கோடிக் கணக்கில் செலவு செய்து தமிழைக் கொண்டாடும் மனநிலையில் தமிழுலகம் இருப்பதாக நீங்கள் எண்ணுகிறீர்களா? ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறிக்கொடுத்து தாங்கள் வாழ்ந்த வீடுகளையும் உழுது பயிரிட்ட நிலங்களையும் கன்னிவெடிகளுக்கு தாரைவார்த்துவிட்டு சொந்த நாட்டிலேயே அகதிமுகாம்களிலும் திறந்த வெளிகளிலும் இருண்ட எதிர்காலத்தை எண்ணி நித்தம் நித்தம் உயிருடன் செத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு, உலக முழுவதும் விரிந்திருக்கும் தமிழ்க்கரங்களை ஒன்றிணைத்து உதவ முனைய வேண்டிய நேரம் அல்லவா இது. இந்த அவல நேரத்தில் எப்படி கொண்டாட்ட மனநிலையில் உங்களால் இருக்க முடிகிறது?

தாத்தா,

இலங்கையில் கிட்டதட்ட தமிழ் வாழ்வு வலுக்கட்டாயமாக பிடுங்கியெறியப்பட்டுள்ளது. ஐரோப்பா நாடுகளில் புலம் பெயர்ந்தவர்களில் சந்ததிகளுக்குத் தமிழ் சீக்கிரம் மறக்கப்படும் ஒரு மொழி. தமிழ்நாட்டில் கூட தமிழ் ஐந்தாம் ஆண்டு வரைதான் கட்டாயப்பாடம். சிங்கபூரில் புதிதாக இலக்கியம் படைக்கும் ஒரு முக்கியமான புதிய தலைமுறை தமிழ் இளம் எழுத்தாளன் இல்லை. மலேசியாவில் 523 தமிழ்ப்பள்ளிகள் இருந்தும் 200 மாணவர்களுக்கு அதிகமாக படிக்கும் பள்ளிகள் வெறும் 150தான். இப்படி தமிழ்க்கல்வியின் நிலை எல்லா இடங்களிலும் அவலமாக இருக்கும்பொழுது எந்த தைரியத்தில் செம்மொழி மாநாடு கூட்டுகிறீர்? இப்போது நமக்கு தேவை செம்மொழி மாநாடல்ல… உலகத் தமிழர் பிரச்சனைகளைக் களையும் விவாத மாநாடுதான்.

தாத்தா,

வருடாவருடம் பணத்தை வாங்கிக் கொண்டு செம்மறி ஆடுகளைப் போல் மலேசிய தமிழ் எழுத்தாளர்களை இலக்கியச் சுற்றுலா என்ற பெயரில் ஓட்டிவரும் மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் இம்முறை உங்கள் தயவால் இலவசமாக 86 ஜீவன்களோடு மாநாட்டுக்குப் புடைச்சூழ வருவதாக கேள்விப்பட்டேன். அதென்ன 86 என்று கேட்டதற்கு உங்கள் வயதின் எண்ணிக்கையில் பேராளர்கள் அழைத்துச் செல்லப்படுவதாக அறிந்தேன். இந்த செய்தி உங்களுக்கு நிச்சயம் பெருமகிழ்வை அளித்திருக்கும். அதென்னவோ தெரியவில்லை, உலகம் முழுவதும் அரசியல்வாதிகளுக்கு வால் பிடிக்கவும், கூழைக் கும்பிடு போடவும் மட்டும் இந்த செம்மறி ஆட்டு எழுத்தாளர்கள் சரியாக ஒரே அணியில் திரண்டு விடுகிறார்கள். வாழ்க செம்மறி ஆடுகள்!

தாத்தா,

என்ன எழுதினாலும் தமிழ் சமுகத்தை உடும்பு பிடியாய் பீடித்து விட்ட philistine கும்பல் கலாச்சாரத்தின் ஒரு மயிரைக் கூட அசைக்க இயலாது என்பது நான் அறியாமல் இல்லை. இன்னும் இரு வாரங்களில் எப்போதோ செத்துவிட்ட தமிழ் உணர்வு மீண்டும் செயற்கையாய் ஊதி எழுப்பப்படும். தங்கள் பிள்ளைகளை தமிழின் நிழல் கூட தொடாமல் வளர்த்து விட்ட பலர், தமிழின் பெருமையை வாய் முதல் இன்னும் பல உறுப்புகள் வலிக்க வெட்கமோ மானமோ இல்லாமல் பேசுவர். நீங்களே ஒரு வினாடி கூச்சப்படும் ஏதாவது அடைமொழி விருதை இந்த செம்மறி ஆடுகள் உங்களுக்கு தரத் துடிப்பார்கள். அரியணையில் புன்னகையோடு அமர்ந்திருக்கும் உங்களுக்கு ஒரு துரோக நாடகத்தின் திரைக்கதையை வெற்றிக்கரமாக எழுதி முடித்தவர் என்ற பட்டத்தை நாளைய வரலாறு நிச்சயம் எழுதும் என்பதை மட்டும் இப்போது என்னால் உறுதியாக சொல்ல முடிகிறது.

பின்குறிப்பு: ஒர் உவமைக்கு செம்மறி ஆடுகளைக் குறிப்பிட வேண்டியதாகிவிட்டதற்காக செம்மறி ஆடுகளிடம் தலை குனிந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த முறை எந்த உயர்ந்த உயிர்களையும் இந்தப் பதர்களோடு ஒப்பிடமாட்டேன் என உறுதிக் கூறுகிறேன்.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768