இதழ் 18 - ஜூன் 2010   எதிர்வினை : இது பாடாவதிகளின் காலம்
சு. யுவராஜன்
 
 
 
  நேர்காணல்:

இன்று பெண்ணியம் கொச்சைப் படுத்தப்படுகின்றது!
க. பாக்கியம்

பத்தி:

நண்பரின் பரிசு

அ. முத்துலிங்கம்

இயற்கை (3) - வனம்
எம். ரிஷான் ஷெரீப்

கிர்கிஸ்தானில் ஒரு கல்யாண பட்டுப்புடவை
சீ. முத்துசாமி

செம்மொழி மாநாடும் செம்மறி ஆடுகளும் – கலைஞர் தாத்தாவுக்குக் கண்ணீர் விடாத கடிதம்
சு. யுவராஜன்

கட்டுரை:

கல்விக் கடைகள் - வியாபாரம் ஜோர்
நெடுவை தவத்திருமணி

சர்கீ மிக்கைலோவிச் ஐசென்ஸ்டைன் (Sergei Mikhailovich Eisenstein)
சு. காளிதாஸ்

உரிமைதான் புரட்சியின் எல்லை
கா. ஆறுமுகம்

ஒரு சிறுகதை ஒரு நாவல்
கிரகம்

சிங்கப்பூரின் தமிழ்க் கவிதைச் சூழல் (90-களுக்குப் பிறகு)
முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி

சிறுகதை:

குழந்தையின் தாய்
செல்வராஜ் ஜெகதீசன்


இரண்டாவது முகம்
ராம்ப்ரசாத்

தொடர்:


ப‌ல வேடிக்கை ம‌னித‌ர்க‌ள் போல‌ ...6
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...11
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...6
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...8

ஏ. தேவராஜன்

தர்மினி

லதா

ம‌. க‌விதா

பூங்குழலி வீரன்

தினேசுவரி

ரேணுகா


புத்தகப்பார்வை:


மனக்கரையில் "லங்காட் நதிக்கரை"
க. ராஜம்ரஞ்சனி

எதிர்வினை:


இது பாடாவதிகளின் காலம்
சு. யுவராஜன்

"இலக்கிய மோசடி" விவாதத்தில் நான்...
மனஹரன்
     
     
 

(வல்லினம் இதழ் 17-ல் இலக்கிய மோசடி என்னும் சர்ச்சை குறித்து எழுத்தாளர் கோ. புண்ணியவான் தன்னிலை விளக்கம் ஒன்றை வழங்கியிருந்தார். அந்த விளக்கம் குறித்தும் சர்ச்சை குறித்தும் எழுத்தாளர் சு. யுவராஜனின் எதிர்வினை. - ஆசிரியர்)

படிச்சவன் சூதும் மோசமும் பண்ணினால்,
போவான் போவான் ஐயோவென்று போவான் - பாரதி


நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். திரு.கோ.புண்ணியவான் (கோ.பு) அவர்கள் தன் கடிதத்தில் குறிப்பிடுவதுபோல் ‘உண்மையாகவே’ தவறுதலாக ஏற்கெனவே வெளியிட்ட கதையைப் போட்டிக்கு அனுப்பியிருந்தார் என்றே வைத்துக் கொள்வோம். அவர் தன் தவறை உணர்ந்த அடுத்த கணம் என்ன செய்திருக்க வேண்டும்? தன் தவற்றை உணர்த்த உடனடியாக ஏற்பாட்டு குழுவினருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியிருக்க வேண்டும். அதோடு அக்கடிதத்தை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி தன் நிலையை உடனே விளக்கியிருந்தால் அவரது நம்பகத்தன்மை இன்று பாதுகாக்கப்பட்டிருக்கும்.

ஆனால் அவர் என்ன செய்தார்? ஏற்பாட்டு குழுவினர் விளக்கக் கடிதம் அனுப்பும் வரை மெளனமாக இருந்தார். இப்பிரச்சனைச் சம்பந்தமாக அவரே சொல்வதுபோல் மின்னஞ்சல் பறந்துக் கொண்டிருக்கும்போதும் அமைதியாகவே இருந்தார். ஏன்? எல்லா சலசலப்புகளும் தானே அடங்கிவிடும் என திண்ணமாக நம்புபவர்கள் கடைப்பிடிக்கும் அமைதி அது. ஆனால் இவ்விஷயத்தை வல்லினம் சர்ச்சையாக்கிவிட்டதால் அவருடைய பரிசுத்த ஆவியில் கிளைத்த புண்ணிய வார்த்தைகளைக் கொட்டி ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்திருந்தார்.

அதைப் படித்தபோது எனக்குச் சிலிர்த்துவிட்டது. ஆனால் கடித்தத்தின் மறைப்பொருள் புரிந்தபோது எரிச்சலாக இருந்தது. சரி, என்னைப் போல் பெரியவர்களை மதிக்கத் தெரியாத குதர்க்கவாதிகளுக்கு இப்படி நேர்வது சகஜம்தான். ஆனால் இன்னொரு மூத்த எழுத்தாளரும் அதே மாதிரியான எரிச்சலை என்னோடு பகிர்ந்துக் கொண்டபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் வாகனங்களே இல்லாவிட்டால்தான் சாலையைத் தாண்டுவார். எல்லோரையும் அணைத்துச் செல்லும் நல்ல மனிதர். (அதெப்படி எல்லோரையும் அணைத்துச் செல்ல முடிகிறது என்று அப்பாவியாக ஒருமுறை கேட்டேன். இடது கண்ணை அடித்துக் காட்டினார்.)

கோ.பு. அவர்களின் கடிதத்தின் சாராம்சமே நான் என்ன கொலைக் குற்றமா இழைத்து விட்டேன், இல்லை சாமிவேலுவைப் போல மைக்கா பங்குகளை ஏப்பமா விட்டேன் அல்லது எழுத்தாளர் சங்கத் தலைவரைப் போல தனக்கு வேண்டியவர்களுக்கே விருதுகளை பட்டுவாடா செய்தேனா என கேட்பது போல் இருக்கிறது.. அவருடைய கேள்வி நியாயமானதுதானே? போகிற போக்கில் எழுத்தாளன்தான் இந்நாட்டில் சுரண்டப்படுகிறான் என்ற யாருக்குமே தெரியாத உண்மையை சபைக்குக் கொண்டு வந்திருக்கிறார். திறந்த மனதோடு அவரது கேள்விகளை எதிர்கொள்வோம்.

சத்தியமாக நீங்கள் கொலைக் குற்றம் செய்யவில்லை. ஆனால் இப்போது ஆறுதல் பரிசு பெற்ற யாரோ ஒருவர் மூன்றாவது பரிசு பெறுவதிலிருந்து தவறியிருப்பது உங்களுடைய so called சிறு தவறினால் என்பதைச் சொல்வது என் கடமையாகிறது. இதுவெல்லாம பெரிய விடயமா என நினைப்பவர்களுக்கு ஒரு சம்பவத்தை மீண்டும் நினைவு கூர்வது நல்லது.

சிறு வயதிலிருந்தே வாசிப்பு பழக்கம் இருந்தாலும் என்னை ஒரு எழுத்தாளனாக எப்போதும் உணர்ந்ததில்லை. மலாயாப் பல்கலைக்கழகத்தில் இரண்டம் ஆண்டில் பயிலும்போது போகிறபோக்கில் சிவா பெரியண்ணனின் வார்த்தை என்னை எழுதத் தூண்டியது. ஒன்று எழுதலாம் என உட்கார்ந்தது காலையில் விடியும்போது கையில் இரண்டு கதை இருந்தது. ஒன்றை பேரவை கதையின் மாணவப் பிரிவிற்கும் இன்னொன்றை பொது பிரிவிற்கும் அனுப்பினேன். இரண்டுமே பாடாவதி கதைகள்.

பேரவை கதையின் பொது தன்மைகேற்ப பாடாவதிக் கதைகளுக்குதான் முதல் பரிசு கிடைக்கும் என்பது எழுதப்படாத விதி.(ஏன் என்பதைப் பிறகு சொல்கிறேன்). என்னுடைய கதைக்கும் முதல் பரிசு கிடைத்தபோது நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை. இருப்பினும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததும் உண்மை. என்னைத் தொடர்ந்து எழுத அப்பரிசு உதவியது என்பதை இங்கு முக்கியமாக நினைக்கிறேன். ஆனால் கோ.பு அவர்களின் கடிதத்தில் அந்த வருத்தமெல்லாம் கிஞ்சிற்றும் இல்லை. தான் 13/14 தடவை பரிசு வாங்கினால் மட்டும் போதும் என நினைப்பவரின் அலட்சியம் மட்டுமே தெரிகிறது.

அப்புறம் திருமதிகள் பாக்கியம் மற்றும் பாவை அவர்களின் கருத்துகளில் பெரும்பாலும் எனக்கு உடன்பாடே. உங்களைப் பற்றி ஆபாசமாக எழுதப்பட்ட அந்தக் கட்டுரையை எனக்கு வாசிக்க கிடைக்கவில்லை. வாசித்தாலும் அத்தகைய தீவிர எழுத்துக்கள் எனக்குப் புரியுமா? என்ற பயம் வேறு அலைக்கழிக்கிறது. சில மாதங்களுக்கு முன் ஒரு மூத்த எழுத்தாளர் என்னை ‘ரெளடி’ (இன்னும் வேறு வார்த்தைகள் இருந்தாலும் வல்லினம் போன்ற நடுத்தர இதழ்கள் அதை தாங்காது எனபதால் வேண்டாம்) என்று திட்டியதிலிருந்தே என் சித்தம் கொஞ்சம் கலங்கி போய் தீவிர எழுத்துக்கள் எதுவும் சரியாக புரிய மாட்டேன் என்கிறது. இப்போது கூட கோ.பு அவர்களின் தீவிர கடிதத்தை தோழியின் விளக்கத்தில்தான் ஒருவாறு புரிந்துக் கொண்டேன்.

உங்களின் அத்தனை கருத்துக்களையும் நான் உடன்படுவதோடு வழிமொழியவும் செய்கிறேன். ஆனால் கோ.பு அவர்கள் பேரவை கதையில் நீதிபதிகளிடம் பேரம் பேசி பரிசு வாங்குவதாக நீங்கள் எழுதுவது தவறு என்பேன். நாட்டில் நடக்கும் மற்ற போட்டிகள் முக்கியமாக இராஜேந்திரன் முன்னேற்றக் கழகம் நடத்தும் எந்த போட்டியிலும் எனக்கு நம்பிக்கை இருந்ததுமில்லை. நான் அவர் ஏற்பாடு செய்யும் போட்டிகளுக்கு கதைகளை அனுப்பியதும் இல்லை. ஆனால் பேரவை கதைகள் அத்தகையதன்று. நீதிபதிகளுக்கு வெறும் எண் குறிக்கப்பட்ட கதை பிரதிகளே தரப்படும். நீதிபதிகளின் முடிவை எண்களின் அடிப்படையில் பேரவை கதைகளின் இயக்குனரிடம் அறிவிப்பர். விழாவில் பரிசுகள் அறிவிக்கும்படும்வரை வெற்றியாளர்களை அறிந்த ஒரே நபர் பேரவை கதைகளின் இயக்குனர் மட்டுமே. எனக்கு திரு.சபாபதி மீது பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் நீதிபதிகளின் முடிவு விடயத்தில் அவரது நேர்மை நிச்சயம் மெச்சத்தக்கது.

பிறகு எப்படி ஒருவரே பல தடவை பரிசு பெறுகிறார் என கேட்கிறீர்களா? நான் மேலே சொன்னது போலத்தான். திரு.சபாபதி அவர்களுக்கு நேர்மை இருக்கும் அளவிற்குத் தொடர்ந்து மாறி வரும் நவீன இலக்கியத்தின் நுண்ணுணர்வோ, ஆளுமையோ இல்லாதவர். அவர் அப்பாவியாக சொன்ன கருத்துக்களையெல்லாம் பார்த்து நம் நாட்டின் முக்கியமான எந்த எழுத்தாளரும் பேரவை கதைகளின் பக்கமே வருவதில்லை. திரு. சபாபதி மட்டுமல்ல இந்திய ஆய்வியக் துறையில் உள்ள எந்த பேராசிரியருக்கும் நவீன இலக்கியத்தில் (மொத்தமாக தமிழிலக்கியம் என்றும் வைத்துக் கொள்ளலாம்) உள்ளார்ந்த விருப்பம் நிச்சயம் இல்லை. இவர்கள் நீதிபதிகளாக இருக்கும்வரை பாடாவதி கதைகள்தான் முன்னிலை பெறும் என்பதை என்னால் ஆணித்தரமாக சொல்ல முடியும். ஆதாரம் வேண்டுமென்றால் பேரவை கதைகள் முன்னுரையைப் படித்துப் பாருங்கள்.

அப்படியானால் பேரவை கதைகளின் முக்கியத்துவத்தை நான் மறுக்கிறேனா? நிச்சயம் இல்லை. இப்போது உள்ள சூழ்நிலை நீடிக்கும் பட்சத்தில் புதிதாக எழுத வருபவர்களுக்குப் பேரவை கதைகளின் இருப்பு மேலும் எழுத தன்முனைப்பை வழங்க உதவும். ஆனால் நல்ல எழுத்துகள் நிச்சயம் அங்கு அவமானத்தைதான் சுமக்க நேரிடும். பேரவை கதை ஏற்பாட்டாளர்கள் இங்கு ஒரு விசயத்தில் உடனடி கவனம் செலுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. பேரவைக்கதைகளின் நீதிபதிகளாக இதுகாறும் செயல்பட்டவந்த பேராசிரியர்களை தனிப்பட்ட முறையில் ஓரளவு அறிந்தவன் என்ற வகையில், அவர்களின் தன்னலமற்ற கடின உழைப்பு இப்போட்டி நிகழ்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளதை நான் மறுப்பதற்கில்லை. ஆனால், ஒரே தலைவரின் 30 ஆண்டுகால தலைமைத்துவத்தில் மலேசியாவின் மூத்த இந்தியக் கட்சியின் இன்றைய நிலையையும், ஒரே கூட்டணியின் 50 ஆண்டுகால ஆட்சியில் மலேசிய மக்களிடையே சில காலமாக ஏற்பட்டுள்ள அதிருப்தியையும் நாம் இங்கு பேரவைக்கதைகள் போட்டியில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பின்னடைவுகளோடு பொருத்தி பார்ப்பது அவசியம் என்றே நினைக்கிறேன். ஒரே நபர் அல்லது ஒரே குழு மிக நீண்ட காலத்திற்கு முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருப்பது மாற்று கருத்து அல்லது சிந்தனைப்போக்குக்கு சற்றும் உகந்தது அல்ல. பேரவைக்கதைகள் நீதிபதிகள் குழுவும் இதற்கு விதிவிலக்கல்ல. மாற்றம் நிகழ வேண்டும். அதுவரை தன் எழுத்தில் மீது மதிப்பு உள்ளவர்களும் அவமானத்தை விரும்பாதவர்களும் அங்கிருந்து ஒதுங்கியிருப்பதுதான் இப்போதைக்கான ஒரே வழி.

பின்குறிப்பு:

இப்படி நான் எழுதுவது சம்பந்தப்பட்டவர்களுக்குக் கோபத்தையும் வருத்தத்தையும் அளிக்கலாம். அதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. சமுதாயம் உங்களுக்கு வழங்கியிருக்கிற மரியாதையான இடத்திற்கும் பதவிக்கும் உரிய பணியினை நீங்கள் அனைவரும் ஆற்றியிருக்கிறீர்களா என தனிமையில் உங்கள் மனசாட்சியிடம்(இன்னும் இருந்தால்) கேட்டுப்பாருங்கள். மெளனம் சந்தர்ப்பவாதத்திற்கும் முதுகு சொறிந்து விடுவதற்கும் அதிகாரத்தின் வாலை உருவி விடுவதற்குமான கருவியாய் மாறி வெகுநாளாகிறது. அண்மையில் ‘Letter from Iwo Jimo’ என்ற திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில் இரண்டாம் உலகப் போரில் ஈடுப்பட்டிருக்கும் அமெரிக்க சிப்பாய்க்கு அவன் அம்மா எழுதிய கடித்தத்தை ஒரு ஜப்பானிய தளபதி எடுத்து வாசிக்கிறான். அந்த கடிதம் இப்படி முடிகிறது. ‘சரியான செயலைச் செய்வதற்கு எப்போதும் தயங்காதே, அது சரி என்பதே அதை செய்வதற்கான தார்மீகத்தை வழங்குகிறது.’ உங்களுக்கும் அதையே வழி மொழிகிறேன்.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768