இதழ் 18 - ஜூன் 2010   நேர்காணல் : இன்று பெண்ணியம் கொச்சைப் படுத்தப்படுகின்றது!
க. பாக்கியம்
 
 
 
  நேர்காணல்:

இன்று பெண்ணியம் கொச்சைப் படுத்தப்படுகின்றது!
க. பாக்கியம்

பத்தி:

நண்பரின் பரிசு

அ. முத்துலிங்கம்

இயற்கை (3) - வனம்
எம். ரிஷான் ஷெரீப்

கிர்கிஸ்தானில் ஒரு கல்யாண பட்டுப்புடவை
சீ. முத்துசாமி

செம்மொழி மாநாடும் செம்மறி ஆடுகளும் – கலைஞர் தாத்தாவுக்குக் கண்ணீர் விடாத கடிதம்
சு. யுவராஜன்

கட்டுரை:

கல்விக் கடைகள் - வியாபாரம் ஜோர்
நெடுவை தவத்திருமணி

சர்கீ மிக்கைலோவிச் ஐசென்ஸ்டைன் (Sergei Mikhailovich Eisenstein)
சு. காளிதாஸ்

உரிமைதான் புரட்சியின் எல்லை
கா. ஆறுமுகம்

ஒரு சிறுகதை ஒரு நாவல்
கிரகம்

சிங்கப்பூரின் தமிழ்க் கவிதைச் சூழல் (90-களுக்குப் பிறகு)
முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி

சிறுகதை:

குழந்தையின் தாய்
செல்வராஜ் ஜெகதீசன்


இரண்டாவது முகம்
ராம்ப்ரசாத்

தொடர்:


ப‌ல வேடிக்கை ம‌னித‌ர்க‌ள் போல‌ ...6
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...11
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...6
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...8

ஏ. தேவராஜன்

தர்மினி

லதா

ம‌. க‌விதா

பூங்குழலி வீரன்

தினேசுவரி

ரேணுகா


புத்தகப்பார்வை:


மனக்கரையில் "லங்காட் நதிக்கரை"
க. ராஜம்ரஞ்சனி

எதிர்வினை:


இது பாடாவதிகளின் காலம்
சு. யுவராஜன்

"இலக்கிய மோசடி" விவாதத்தில் நான்...
மனஹரன்
     
     
 

க.பாக்கியம் மலேசிய தமிழ் இலக்கிய உலகின் பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர். இலக்கியம் படைப்பதோடு தனது கருத்துகளை எவ்வகை சர்ச்சை கொண்டதாக இருப்பினும் ஆணித்தரமாகக் கூறுவதில் எப்போதும் தயங்காதவர். அண்மையில் கெடா மாநில எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரை வல்லினம் இதழுக்காக நேர்காணல் செய்தோம்.
- ஆசிரியர்

 

தங்களின் ஆரம்பகால இலக்கிய அனுபவங்களைப் பற்றி கூறுங்கள்?

விபரம் தெரிந்த நாள் முதல், சிறுவர்களுக்கான கதைகளை வாசிப்பதில் எனக்கிருந்த தணியாத ஆர்வம் என்னை விடாது தொடர்ந்தது. பின்னாளில் ரசனைக்கேற்ப இலக்கியக் கூறுகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன.

என்னுள் விளைவு கொண்டிருந்த வாசிப்புப் பழக்கமே என்னை இலக்கிய உலகிற்கு இழுத்துச் செல்லும் ஈர்ப்பு சக்தியாக விளங்கியது என இன்றும் நான் நம்புகின்றேன்.

அன்றைய மலேசிய வானொலி தனது தமிழாற்றலால் தமிழை வளர்ப்பதில் முனைப்பு கொண்டிருந்ததும் (அப்போதைய காலக்கட்டத்தில் பணியாற்றியவர்களில் சிலர் இலக்கியத் தொடர்புடையவர்களாகவும் இருந்தனர்) என்னுள் இலக்கிய வித்துகள் உருவாக காரணமாக இருந்தது. சிறுகதை, கட்டுரை என எனது ஆரம்பக் காலடிகளைப் பதிக்கத் துவங்கினேன். அவ்வகையில் 1967 முதல் எனது இலக்கிய வாழ்க்கை துவங்கியது.

தமிழ்ப் பத்திரிகைகளும் இலக்கியத்தை முன்னெடுப்பதில் மிகத் தீவிரம் கொண்டிருந்தன. பத்திரிகை ஆசிரியர்களும் இலக்கியம் சார்ந்தவர்களாக இருந்தனர். பிரபல இலக்கியவாதிகள் நவீன இலக்கிய சிந்தனையோடு தரமான சிறுகதைகள் உருவாகிக் கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் எனது இலக்கியப் பிரவேசம் நிகழ்ந்தது.

ஆரம்பம் முதலே எனது கதைகளும், கட்டுரைகளும் பரிசுகள் பெற்றது என்னை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது எனலாம். அதே சமயத்தில் அந்தக் காலக்கட்டத்தில் பெயர் போட்டுக் கொண்டிருந்த பிரபல இலக்கியவாதிகளுக்கு ஈடு கொடுத்து எழுத வேண்டுமென்ற உந்துதலால் தீவிர வாசிப்பும் இலக்கிய பயிற்சிகளும் தொடர்ந்தன.

ஒரே வாரத்தில் மூன்று பத்திரிகைகளிலும் (தமிழ் நேசன், தமிழ் மலர், தமிழ் முரசு) எனது கதைகள் இடம் பெற்றதும் அவ்வாறு காண்பதில் ஏற்படும் ஆர்வத்தில் மேலும் தீவிரமாக விடாமல் எழுதுவதும், இடையிடையே வானொலியில் எனது பெயரைக் கேட்பதுமாக எனது இலக்கிய உற்சாகம் எல்லையைக் கடந்திருந்த காலம் அது.

எழுபதுகளில் மலேசிய இலக்கிய உலகில் முன்னணி வகித்துக் கொண்டிருந்த கடாரத் தமிழிலக்கியவாதிகளான திரு. எம். ஏ. இளஞ்செல்வன், திரு. சீ. முத்துசாமி போன்றோருடன் ஏற்பட்ட ஆரோக்கியமான இலக்கிய சர்ச்சைகளும் அவர்கள் அளித்த ஊக்கமும் என்னை மேலும் ஆழமாக ஈடுபாடு கொள்ள வைத்தது.

பின்னாளில் நாங்கள் இணைந்து உருவாக்கிய கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம் எனது தரமான இலக்கிய வளர்ச்சிக்கு உரமாக அமைந்தது.

எனது பெயரை வானொலியில் கேட்பதிலும், பத்திரிகைகளில் காண்பதிலும் பேரார்வம் கொண்டிருந்த எனது அன்பிற்குரிய அன்னையார் அவர்கள் எனது இலக்கிய வாழ்க்கையின் பின்புல சக்தியாக விளங்கினார் என்பது எனது இலக்கியப் பதிவுகளில் முக்கியமானதும், முதன்மையானதுமாகும்.

தாங்கள் எழுதத் தொடங்கிய காலத்தில் உள்ள இலக்கிய சூழல் பற்றி கூறுங்கள்?

அன்றைய இலக்கிய உலகம் (எழுபதுகள்) மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. எழுத்துலகில் பெரும்புரட்சி நடந்து கொண்டிருந்தது என்று கூட சொல்லலாம். அந்த காலக்கட்டத்தில் சிறந்த இலக்கியவாதிகளாக பலர் உருவாகியிருந்தனர்.

இலக்கியம் ஒரு புது தளத்தில் பயணித்திருந்தது. நவீன உத்திகளோடு கூடிய இலக்கியத்தரம் அன்று உச்சத்தில் இருந்தது. இலக்கியவாதிகளிடையே ஆரோக்கியமான போட்டிகளும் உருவாகியிருந்த காலம் அது. நானா... நீயா... என்ற பலப்பரிட்சை அருமையானதொரு இலக்கியத் தரத்தை முன்னெடுப்பதாக இருந்தது.

அன்றைய நவீன இலக்கிய எழுத்தாளர்களான அமரர் திரு. எம். எ. இளஞ்செல்வன், திரு. சீ. முத்துச்சாமி, திரு. ரெ. கார்த்திகேசு, திரு. மு. அன்புச்செல்வன், திரு. சை. பீர்முகம்மது, ந. மகேஸ்வரி, பாவை போன்றோர் (விரிவஞ்சி இன்னும் பல பிரபல இலக்கியவாதிகளின் பெயர்கள் விடுபட்டுள்ளன. அவர்கள் மன்னிக்க...) முன்னணியில் இருந்தனர். அவர்கள் காலத்தில் நானும் இலக்கியத் துறையில் ஈடுபட்டிருந்தேன் என்பது பெருமைக்குரியதாக நினைவில் பதிந்துள்ளது.

இலக்கிய வரலாற்றில் ‘எழுபதுகள் ஒரு இலக்கியப் பொற்காலம்’ என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தமிழ் நாளேடுகளான தமிழ் முரசு, தமிழ் நேசன், தமிழ் மலர், தமிழ் ஓசை, வானம்பாடி போன்றவை இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளன. அன்றைய பத்திரிகையாசிரியர்கள் இலக்கியத்தில் ஈடுபாடுடையவர்களாக விளங்கியதும் முக்கியமானதொரு காரணமாகும்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக திரு. முருகு சுப்பிரமணியன் அவர்களும் அதற்குப்பின் திரு. எம். துரைராஜ் அவர்கள் பணியாற்றிய போதும், அவருக்கும் பின் பொறுப்பேற்ற திரு. ஆதிகுமணன் அவர்கள் காலத்திலும் மலேசியத் தமிழலக்கியம் ஒரு உன்னத தளத்தில் நடைப்பயின்றது.

காரணம், அவர்கள் மூவரும் இலக்கியவாதிகள் என்பதும், இலக்கியத் துறையில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்ததாலும் தம் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த சங்கத்தின் சக்திகளை முழுமையாகப் பயன்படுத்தி, மலேசிய இலக்கியத்தை வென்றெடுப்பதில் முழுமூச்சாகச் செயல்பட்டிருந்தனர் என்பதும் நிலைத்து நிற்கும் இலக்கிய வரலாறுகள் ஆகும்.

இக்கால கட்டத்தில் கடாரத் தமிழிலக்கிய வளர்ச்சி, மலேசியத் தமிழிலக்கிய வரலாற்றில் முன்னணி வகித்திருக்கும் காலத்தால் பதிவு செய்யப்பட்ட வரலாறாகும்.

திரு. எம். ஏ. இளஞ்செல்வன், திரு. சீ. முத்துசாமி, திரு. எ. சகாதேவன், திரு. கண்ணையா ஆறுமுகம், திருமதி ச. சுந்தரம்பாள் ஆகியோருடன் நானும் இணைந்து கெடா மாநில எழுத்தாளர் இயக்கத்தை உருவாக்கியதும், அந்த இயக்கத்தின் வழி இலக்கிய தரத்தை முன்னெடுப்பதற்கான தொடர்ந்த முயற்சிகளும், இளந்தலைமுறை இலக்கியவாதிகளுக்கான வழிகாட்டி கருத்தரங்குகளும் இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமாகக் குறிப்பிடத்தக்கப் பதிவுகளாகும்.

அக்காலக்கட்டத்தில் கெடா மாநில எழுத்தாளர் இயக்கத்துடன் அணுக்கமான தொடர்பு கொண்டிருந்த மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான திரு. எம். துரைராஜ், திரு. ஆதிகுமணன் அளித்த உற்சாகமும், ஊக்குவிப்பும், தமிழகத்தின் அன்றைய முன்னணி இலக்கியவாதிகளின் வருகைகளும் கடாரத் தமிழிலக்கியத் தளத்தில் புதியதோர் பரிமாணத்தை தோற்றுவிக்க பெரிதும் உந்து சக்தியாக விளங்கியதும் என்னால் மறக்க முடியாத நினைவுகளாகும்.

அக்காலக் கட்டத்தில் பெண்கள் இலக்கிய வெளியில் ஈடுபட சாதகம் அல்லது பாதகமாக அமைந்தவை எவை?

தங்களது இரண்டாவது கேள்விக்கான பதிலில் இக்கேள்விக்கான விடை உள்ளடங்கியுள்ளது.

அன்றைய இலக்கிய வெளி பெண்களுக்கு உற்சாகமளிப்பதாக இருந்தது. அதில் ஈடுபாடு கொண்ட பெண்களின் பட்டியல் மிக நீளமானது. அவர்களின் சிலர் இன்றளவும் விண்மீன்களாக ஒளிவீசிக் கொண்டிருக்கின்றனர். ஆணிலக்கியவாதிகளோடு சமதரத்தில் அவர்கள் இலக்கியத் துறையில் ஈடுபட்டிருந்தனர்.

எப்போதும் இல்லாத அளவு பெண்ணிலக்கியவாதிகளின் பிரவேசம் அதிகரித்த காலமது. ஆண் இலக்கியவாதி, பெண் இலக்கியவாதி என முரண்பட்ட தளம் உருவாகாத ஆரோக்கியமான, இலக்கிய நாகரிகமிக்க காலம் அது.

இன்று போல் அன்றில்லை... அதுவொரு கனாக்காலம். நினைவின் பதிவு அது.

தாங்கள் இலக்கியம் மட்டும் அல்லாமல் இயக்கங்களிலும் ஈடுபாடு காட்டி வருகிறீர்கள். இது உங்கள் எழுத்துச் செயல்பாட்டை பாதிக்கவில்லையா?

எழுத்து எனது சுவாசம். நான் தலைமையேற்றிருக்கும் இயக்கம் எனது ஆன்மா.

இரண்டுமே வெவ்வேறு தளங்களில் நான் பயணிக்கத் துணைபுரிகின்றன. என்றாலும் களம் ஒன்றே.

இரண்டுமே இலக்கியம் சார்ந்தே இயங்குகின்றன. வாழ்வியலில் இலக்கியம் போல, ஆன்மீகத் துறையிலும் இலக்கியம் உண்டு. வாழ்வியலைக் கதைகளாகவும், கட்டுரைகளாகவும் வடிவமைப்பதைப் போல, ஆன்மிகமும் அதன் களத்தில் கதைகளாகவும், கட்டுரைகளாகவும், இன்னபிற இலக்கிய வடிவங்களாகவும் உருப்பெறுகின்றது.

கருப்பொருள் வேறாயினும் இலக்கிய வடிவம் ஒன்றே.

எனவே, இயக்க ஈடுபாடு எனது இலக்கிய வளர்ச்சியை முன்னெடுப்பதில் பெரிதும் உறுதுணையாக விளங்குகின்றது. எனது இயக்க ஈடுபாட்டின் வழி எனது இலக்கியத் தொடர்பு நெடுந்தூரம் பயணித்து தமிழக சன்மார்க்க ஏடுகளில் கதைகளாகவும், கட்டுரைகளாகவும் பிரசுரிக்கப்பட்டு பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளன. இதுவும் எனது இலக்கியப் பதிவுகளில் மிக முக்கியமானதுதான்.

பெண்ணியம் என்று சொல்லப்படுவதைத் தாங்கள் எவ்வாறு புரிந்து கொள்கிறீர்கள்?

பாரதியார், பாரதிதாசன் காலத்திற்கு முன்பே அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவரும், அதற்கு முந்திய தொல்காப்பியம், வரையில் பெண்ணியம் பேசப்பட்டதாக அறிய வருகின்றது.

இடைப்பட்ட காலத்தில் பல அறிஞர் பெருமக்களால் பெண்ணியம் பேசப்பட்டுள்ளது. (அண்மையில் தமிழ் நேசன் ஞாயிறு பதிப்பில் எனது 'திருக்குறளில் பெண்ணியம்’ என்ற தலைப்பில் இருவாரக்கட்டுரை இடம் பெற்றிருந்தது)

‘பெண்ணியம்’ என்பதற்கு இன்றைய பொருள் வேறு. அன்றைய பொருள் வேறு.

பாரதி பேசியுள்ள ‘பெண்ணியம்’ கேளுங்கள்... ‘பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன், மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதாறிவைக் கெடுத்தார்...’

மூடர்களால் (சுயநலமிகளான சில ஆண்களால்) அழிக்கப்பட்ட ஞானத்தை (சுய அறிவை) மீட்டெடுத்து அறிவு சார்ந்த வழியில் பெண்களுக்குரிய பிறப்புரிமைகளுடன், பெண்மைக்கு இயற்கை வழங்கிய இயல்பு மாறாமல் வாழ்வதும் தான் மேற்கண்ட பெருமக்கள் ‘பெண்ணியம்’ என்பதற்கு வழங்கிய பொருளாகும்.

‘நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்... என்ற பாரதியின் அடுத்த வரிகள் ஆழ்ந்த சிந்தனைக்குரியது.

நாட்டையும், வீட்டையும் ஆளும் பெண்களுக்கு ‘ஆளுமை’ உணர்வு வேண்டும். கயமைக் குணம் படைத்தவர்களின் இலக்கணமான தலைகுனிவும், அச்சமும் பெண்களின் அடையாளமல்ல என்பது பாரதியின் வாதம்.

பெண் விடுதலைக்கு தன் எழுது கோலையே ஆயுதமாக ஏந்தியவன் பாரதி. அவனின் வழிகாட்டலே பெண்ணியத்தின் அடிப்படை.

இயற்கை பெண்களுக்கு வழங்கியுள்ள, ‘மேலாதிக்கம்’ பற்றிய உண்மைப் பொருளை அறியாமல் போனதே இன்று பெண்கள் ஏந்தியுள்ள (பெண்ணியம் எனும்) போர்க் கொடியாகும்.

யாரிடம்... எதற்காக இந்த கையேந்தல்...? போராட்டம் என்பது பற்றிய சிந்தனை எழுமானால் அறிவு சார்ந்த, நெறிசார்ந்த, பிறப்பு உரிமை சார்ந்த சுதந்திர வாழ்க்கையை கையேந்தாமல் (ஆண்களிடம்) அமைத்துக் கொள்ளத் தடையேதுமில்லை.

இன்றைய பெண்ணியம் பற்றிய புரிதலில் நேர்ந்த குழப்பங்கள் பெண்ணியத்தை பெருமளவில் கொச்சைப்படுத்தியுள்ளன.

தங்கள் படைப்புகள் அல்லது தங்கள் காலக்கட்டத்தில் இயங்கிய பெண் படைப்பாளிகளின் படைப்புகள் பெண்ணியம் சார்ந்த இயற்றப்பட்டுள்ளதா?

என்னுடைய கதைகள் பெரும்பாலும் பெண்ணியம் சார்ந்தே எழுதப்பட்டது. பெண்களின் அவலநிலை என் கதைக் கருவின் முக்கியக் களம்.

26.3.1972 இல் தமிழ் மலரில் வெளியான ‘கற்பின் விலை...?’ என்ற கதை கடும் விமர்சனத்திற்குரியதாயிற்று. ஒரு பெண்ணிலக்கியவாதியால் இப்படியும் எழுத முடியுமா என்ற கேள்வியும் அன்று பரவலாக எழுந்தது. தோட்டப் பாட்டாளிப் பெண்கள் பால்மரக் காடுகளில் ‘கிராணிமார்களாலும், தண்டல்களாலும்’ இரையாக்கப்படும் கதை அது.

அந்தக் கதை வெளியான மறுநாளே பீடோங் பகுதியிலிருந்து ஒரு தோட்டத்துக் ‘கிராணியார்’ சுங்கை பட்டாணி ஜாலான் இப்ராஹிமில் அமைந்திருந்த ஒரு புத்தகக் கடைக்கு வந்து என்னைப்பற்றி விசாரித்ததாகவும் என் விலாசம் அறிய முற்பட்டதாகவும் பின்னர் நான் அறிய வந்தது என் எழுத்துலக வாழ்க்கையில் ஓர் சுவாரசியமாக பதிவாகும்.

பெரும்பாலும் பெண்களைப் பற்றிய உண்மையான சம்பவங்களே என் கதைகளின் பின்புலம். பெண்களின் உடல், மனவலிகளே என் கதைகளின் வெளிப்பாடு. அவ்வாறான கற்பின் விலை முதல் சம்மாரம் (2003) வரையிலான பல கதைகள் கடும் விமர்சனத்திற்குள்ளாயின என்பது அக்கதைகளுக்கான வெற்றியே.

என்னதான் மங்கையராகப் பிறந்திட மாதவம் செய்திட வேண்டுமென மார் தட்டிக் கொண்டாலும் உலகம் முழுவதும் எல்லாக் காலத்திலும் பெண்மைக்கு அநீதி தான் இழைக்கப்பட்டு வந்துள்ளது. அதன் உச்சக் கட்டம் எது என்பதை நிர்ணயிப்பதில் தான் பிரச்சனை.

மலேசிய உலகில் முன்னணி வகித்த ந. மகேஸ்வரி, பாவை, வே. இராஜேஸ்வரி, சு. கமலா, ஆதிலட்சுமி, எஸ். பி. பாமா, நிர்மலா ராகவன், நிர்மலா பெருமாள், கோமகள், வி. தீனாட்சகி போன்ற இன்னும் பல மூத்த எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில் பெண்ணியம் பேசியுள்ளனரே!

உங்கள் கருத்து இப்படியிருக்க, ஒரு வாசகனாக மலேசிய பெண்களின் படைப்புகள் புதிய சிந்தனைகளைப் புகுத்தவில்லை என்ற கருத்து எனக்கு உண்டு. மேலும் தொடர்ச்சியான உரையாடல்களும் பெண் படைப்பாளிகளிடையே நடைபெறவில்லை. ஏன் இந்த நிலை?

பெண்களின் படைப்புகளில் புதிய சிந்தனை புகுத்தப் படவில்லை என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. பெண் படைப்பாளிகளின் படைப்புகள் முழுமையான வாசிப்புத் தளத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்பது பெண் படைப்பாளிகளிடையே நிலவி வரும் மனக்குறை. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

ஆணாதிக்க பிடியில் இலக்கிய உலகம் சிக்குண்டு கிடப்பதும், பெண்களின் படைப்புகள் புறக்கணிக்கப்படுவதும் இன்றைய கால நிலை. மேலும் தொடர்ச்சியான உரையாடல்களும் பெண் படைப்பாளிகளிடையே நடைபெறவில்லை என்பதும் முற்றிலும் சரியானதல்ல.

பெண் படைப்பாளிகளிடையே உரையாடல்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அடிக்கடி என்றில்லாமல் அவ்வப்போது இலக்கிய உலக சர்ச்சைகள் பற்றிய உரையாடல்கள் பெண்ணிலக்கியவாதிகளிடையே இடம் பெற்று வருகின்றது.

பாவை, மகேஸ்வரி, நான் இன்னும் சிலர் என எங்களிடையே இலக்கிய உரையாடல்கள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதைப் போல மற்றவர்களும் தங்கள் வட்டங்களுள் தொடர்பு கொண்டு இலக்கிய கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டிருக்கின்றனர்.

பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகள் பிரசுரமாகின்றபோது, சம்பந்தப்பட்ட படைப்பாளியை தொடர்பு கொண்டு படைப்பைப்பற்றி விமர்சிப்பதும் அந்தத் தொடர்புகளில் ஒன்று.

பெண் எழுதுக்கான ஒரு தளத்தை தங்களைப் போன்ற இயக்கம் சார்ந்தவர்கள் ஏன் உருவாக்கவில்லை? அதன் மூலம் வலுவான மலேசிய பெண் படைப்பாளிகளின் குரலை ஏன் பதிவு செய்யவில்லை?

இந்தக் கேள்வி எழுப்பப்படாமல் போயிருக்குமானால் காலத்தால் ஒரு வரலாறு களைந்து போயிருக்கும்.

சரியான நேரத்தில் அதனை நினைவு படுத்திய வல்லினத்துக்கு என் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பெண்ணிலக்கியவாதிகளுக்கான ஒரு களம் உருவாக்கப்பட வேண்டும் என்பது எனது நீண்ட கால அவா. அதனை செயல்படுத்துவதற்கு கடந்த 28.05.2002இல் பத்திரிகை அறிக்கையின் வழி பெண் படைப்பாளிகளுடன் தொடர்பு கொண்டேன்.

அதன் விளைவாக 25 பெண்ணிலக்கியவாதிகளுடைய தொடர்பு கிடைத்தது. பெரும்பாலானவர்கள் தனி அமைப்புக்கு இணக்கம் தெரிவித்ததால், அதன் கூட்டம் கடந்த 4.8.2002இல் சுங்கை பட்டாணியில் நடைபெற ஏற்பாடு செய்தேன்.

ஆனால், மூன்று பெண் படைப்பாளிகள் மட்டும் வருகை தர இணங்கினர். மற்றவர்கள் தாங்கள் வர இயலாத நிலையை வருத்தத்தோடு தெரிவித்துக் கொண்டனர். எனவே, முதல் அறிமுகக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டு 2ஆவது அமைப்புக் கூட்டம் கோலாலம்பூரில் நடக்க ஏற்பாடு செய்தேன். அக்கூட்டத்தை ஏற்று நடத்தும் பொறுப்பினை முன்னணி எழுத்தாளர் ந. மகேஸ்வரி அவர்கள் ஏற்றுக் கொண்டு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் நிராமஸ் உணவு விடுதியில் 18 பெண் படைப்பாளிகள் ஒன்றிணைந்து இலக்கிய அமைப்பு பற்றி நல்லதொரு முடிவெடுத்தோம். பெண்ணிலக்கியவாதிகளின் ஆர்வம் அளவு கடந்திருந்தது.

ந. மகேசுவரி அவர்களைத் தலைவராகவும் என்னை செயலாளராகவும் கொண்ட தற்காலிக செயலவை ஒன்றும் தேர்ந்தெடுக்கப்பட்டது. தொடர்ந்த முயற்சிகளில் கால, தூர தடைகளும் குடும்பப் பின்னணிகளும் குறுக்கிட்டு அந்த முயற்சி முன்னெடுக்கப்பட இயலாமல் போனது.

அண்மையில் சை. பீர் முகம்மது, மற்றும் கோ. புண்ணியவான் போன்றோரோடு ஏற்பட்ட இலக்கிய விவாதத்தின் சாரம் என்ன? இது போன்ற விவாதங்களைத் தாங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?

“நமது நாட்டில் நடத்தப்படும் இலக்கியப் போட்டிகளில் ‘நீதியுடன் நீதி’ வழங்கப்படாமல் ஒரு சார்பு நிலையில் நடத்தப்படுகிறது....!” - க. பாக்கியம்.

“மலேசியப் பெண் எழுத்தாளர்களின் படைப்பில் ஒரு மலட்டுத்தன்மை தெரிகிறது. அவர்களுக்கு ஒழுங்காக ஒரு கதையும் எழுதத் தெரியவில்லை. அடுக்களையில் முட்டை பொரிப்பதற்கும் கோழி சம்பல் செய்வதற்குமே அவர்கள் லாயக்கு என்று சை.பீர்முகம்மது எங்களை வறுத்துக் கொண்டிருக்கிறார்”. - பாவை.

மேற்கண்ட எங்கள் இருவரின் கருத்துகளும் உங்கள் குரல் மற்றும் அநங்கம் இதழில் வெளியானவை.

அநங்கம் சிற்றிதழில் (மே/2009) எங்களின் கருத்து தொடர்பான கோ. புண்ணியவான் மற்றும் சை. பீர்முகம்மது அவர்களின் எதிர்வினையின் மிகச் சுருக்கமான சாரம் கீழ் வருமாறு...

கோ. புண்ணியவான்

“தங்களின் படைப்புகள் ஆண்களால் சீண்டப்படுவதில்லை என்ற ஆதங்கம் பரிசுகள் வாங்கும் போது மட்டும் எழுவதில்லை என்பது வியப்பான விஷயமாகவே இருக்கின்றது. ஆண்கள் தானே நீதிபதிகளாய் இருந்து உங்கள் படைப்புகளை தேர்வு செய்கிறார்கள்.”

“தமிழகச் சிற்றிதழ்களைப் படித்து அதன் நகல் எழுத்தாளர்களாக உங்களது இலக்கிய உணர்வும், தன்மானமும் இடந்தரவில்லையென்கிறீர்கள்”.

“இலக்கியத்துக்கு முக்காடிட்டு, முகம் மறைத்து, கையுறை காலுறை அணிந்து, கற்பினைக் காத்து, களங்கம் உடைக்காது நீங்கள் எழுதிக் கொண்டே இருங்கள்.”

“ஆண்கள் மட்டும்தான் பரிசுக்குப் பேரம் பேசலாம் என்ற சட்டவிதி ஒன்றுமில்லை. நீங்களும் ரெஸ்டாரண்டுகளுக்கு வரலாம். சாப்பிடும் சாக்கில் பேரம் பேசலாம். இன்னொன்று உங்களுக்கு மட்டும் இரகசியமாய்... பெண்களிடம் பேயே இறங்குமாம். உங்கள் பேரம் பேசலில் ஆண்கள் நீதிபதியை எளிதில் கவர்ந்து விட முடியாதா என்ன? இன்னமும் உலகம் புரியாத ஆளாக இருக்கிறீர்களே...!”

சை. பீர் முகம்மது

“சகோதரிகள் க. பாக்கியமும், பாவையும் இப்படி வெளிப்படையாக வெளியே வந்து எழுதுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே உங்கள் குரலில் என்னை நன்றாக ‘நசுக்கி’ இருந்தார்கள். நான் பதிலே எழுதவில்லை. காரணம் எனக்கு ஏற்பட்ட உச்சக்கட்ட கோபத்தைக் கொட்டினால் அவர்களால் தாங்க முடியாது.

“வீட்டில் மூன்று நிலைகள் உள்ளன. பின்கட்டு, நடுக்கட்டு, முன்கட்டு. மலேசியப் பெண் படைப்பாளிகள் பின்கட்டான சமையலறை, நடுக்கட்டான படுக்கையறை வரைதான் சிந்திக்கிறார்கள். முன்கட்டுப் பகுதியில்தான் வெளிவாசல் இருக்கிறது அதற்கு அப்பால் உலகம் பரந்து விரிந்துள்ளது...”

“உங்கள் மனதில் அந்தப் பிரமிட் வடிவமும், முக்கோணமும் மட்டுமே நவீனமென்று பதிந்து விட்டால் அதற்கு நாங்களா பொறுப்பு. முதலில் அந்தப் ‘பொக்கிஷத்தை’ மூடி வைத்து விட்டு உலகை விரிந்து பாருங்கள்...”

இதைத்தான் உங்கள் குளியலறையை விட்டு வெளியே வாருங்கள் என்று சொல்லாமல், சற்றே நாகரிகமாக ‘கோழிச் சம்பல்’ ‘முட்டைப் பொரியல்’ என்று நாகரிகமாகச் சொன்னேன். என் எழுத்தில் ‘பூ’ பற்றி எழுதியிருந்தால் அது பூவைப் பற்றியது அல்ல. ‘பூ’வுக்கு வேறு அர்த்தங்களில் அப்படிச் சொல்லியிருப்பேன். ஆழமான தேடலும் வாசிப்பும் உள்ளவர்களுக்கு அது புரியும்...!”

இலக்கியமும், இலக்கியம் சார்ந்த கருத்துகளும் பொது விமர்சனங்களுக்குரியதே!

இலக்கிய சர்ச்சைகளில் கருத்துச் சுதந்திரம் என்ற பேரால் தனி மனித ஒழுக்க வரம்புகளில் அத்து மீறி அநாகரிக வார்த்தைகளைப் பயன்படுத்துவதை எவ்வாறு சகித்துக்கொள்வது.

கருத்துப் போருக்கு எழுதுகோல் தானே ஆயுதம்? சாக்கடை நீரால் அர்ச்சிப்பதற்கும் பேரா இலக்கிய விவாதம்?

பெண்களின் ஒழுக்க வரம்புகளை மீறி விமர்சிக்கும் இவர்கள் பெண்ணியவாதிகளாம். இவர்களே வலிந்து செய்து கொண்ட பதிவு அது. இவர்களின் இரட்டை வேடத்தைக் கலைக்க இவர்களே தங்களது உண்மையான முகத்தை இலக்கிய வெளியில் பதிவு செய்தது ஆடு, புலி வேடமிட்ட கதைதான்.

ஆண் எங்கிருந்தாலும் ஆண்தான். பெண்களை அடிமை கொள்வதும், அவர்களின் திறன்களை அடித்து நொறுக்கி மூலையில் கிடத்துவதும், அவனுள்ளே பன்னெடுங்காலமாக உள்ள இரத்தத்தோடு கலந்துறையும் வக்கிர உணர்வு அது.

வீட்டில் பெண்ணை அடிமைப்படுத்தும் குணம் வெளியில் மட்டும் மாறிவிடுமா என்ன? வெளியில் தன் இயல்பு முகத்திற்கு ‘பெண்ணியவாதி’ என்ற முகமூடி அணிந்து எழுதுகோல் ஏந்தினாலும் மேடையில் ஏறினாலும் அவன் உணர்வால் ‘வெறும்’ ஆண் தான்.

பாரதி ஒரு கவிஞன் மட்டுமல்ல. அவன் காலம் கடந்த மகா ஞானி. அவன் வாக்கு மண்ணில் கடைசி ஆண் வாழும் வரை நிலைத்திருக்கும். இதற்கு விதிவிலக்கான ஆண்கள் இருக்கலாம். அவர்கள் எந்த முகப்பூச்சும் பூசிக் கொண்டு போலித்தனம் இல்லாமல் பெண்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் இயல்பாக கைகோர்ப்பவர்களாக இருப்பார்கள்.

இதனை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்ற தங்களின் வினாவிற்கு என் பதில்...

மூலையில் உட்கார்ந்து முக்காடிட்டு ஒப்பாரியா வைக்க முடியும். இந்தப் பிதற்றல்களையெல்லாம் ‘விரல் நுனி தூசியாக’ உதறி விட்டு அடுத்த வேலைகள் அதிகமிருக்கிறதே அதனைக் கவனிக்க வேண்டாமா?

இப்போது தாங்கள் கெடா மாநில எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். இதற்கு முந்தைய சங்கத்தின் செயல்பாடுகளை எவ்வாறு நோக்குகிறீர்கள்?

கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம் உருவாக்கப்பட்டு திரு. எம். ஏ. இளஞ்செல்வன் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்ற அன்றைய காலக்கட்டத்தில் அவரது செயலவையில் பணியாற்றியுள்ளேன்.

அக்காலக் கட்டத்தில் இலக்கிய வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மலேசிய இலக்கிய உலகில் கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம் முன்னணி வகித்த காலமது. நவீன இலக்கியத் தளம் இங்கிருந்தே பயணித்தது என்பது வரலாறு.

பின்னாளில் அடுத்தடுத்த தலைமைத்துவ மாற்றத்திற்கு வழிவிட்டு, திரு. எம். ஏ. இளஞ்செல்வன், திரு. சீ. முத்துச்சாமி, நான் உட்பட செயலவையை விட்டு விலகினோம்.

ஒரு நீண்ட இலக்கிய வனவாசத்திற்குப் பிறகு (ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்குப் பிறகு) கடந்த 2006இல் திரு. சீ. முத்துச்சாமி தலைமைப் பொறுப்பேற்க இயக்கத்தில் மறு பிரவேசம் செய்தேன். கடந்த 38ஆவது பொதுக்கூட்டத்தில் (29.3.2010) நான் கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

2006ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி ‘யாமறியோம் பராபரமே!”

அந்தந்த செயலவையில் இடம் பெற்றிருந்த உறுப்பினர்களுக்கே அது வெளிச்சம்.

 
   

நேர்காணல் : ம‌. ந‌வீன்
 
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768