இதழ் 18 - ஜூன் 2010   உரிமைதான் புரட்சியின் எல்லை
கா. ஆறுமுகம் B.E.(Hons) UM, M.I.E.M, P.Eng., B.Juris (UM), CLP, MBA (Strat)
 
 
 
  நேர்காணல்:

இன்று பெண்ணியம் கொச்சைப் படுத்தப்படுகின்றது!
க. பாக்கியம்

பத்தி:

நண்பரின் பரிசு

அ. முத்துலிங்கம்

இயற்கை (3) - வனம்
எம். ரிஷான் ஷெரீப்

கிர்கிஸ்தானில் ஒரு கல்யாண பட்டுப்புடவை
சீ. முத்துசாமி

செம்மொழி மாநாடும் செம்மறி ஆடுகளும் – கலைஞர் தாத்தாவுக்குக் கண்ணீர் விடாத கடிதம்
சு. யுவராஜன்

கட்டுரை:

கல்விக் கடைகள் - வியாபாரம் ஜோர்
நெடுவை தவத்திருமணி

சர்கீ மிக்கைலோவிச் ஐசென்ஸ்டைன் (Sergei Mikhailovich Eisenstein)
சு. காளிதாஸ்

உரிமைதான் புரட்சியின் எல்லை
கா. ஆறுமுகம்

ஒரு சிறுகதை ஒரு நாவல்
கிரகம்

சிங்கப்பூரின் தமிழ்க் கவிதைச் சூழல் (90-களுக்குப் பிறகு)
முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி

சிறுகதை:

குழந்தையின் தாய்
செல்வராஜ் ஜெகதீசன்


இரண்டாவது முகம்
ராம்ப்ரசாத்

தொடர்:


ப‌ல வேடிக்கை ம‌னித‌ர்க‌ள் போல‌ ...6
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...11
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...6
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...8

ஏ. தேவராஜன்

தர்மினி

லதா

ம‌. க‌விதா

பூங்குழலி வீரன்

தினேசுவரி

ரேணுகா


புத்தகப்பார்வை:


மனக்கரையில் "லங்காட் நதிக்கரை"
க. ராஜம்ரஞ்சனி

எதிர்வினை:


இது பாடாவதிகளின் காலம்
சு. யுவராஜன்

"இலக்கிய மோசடி" விவாதத்தில் நான்...
மனஹரன்
     
     
 

(மலேசிய இந்தியர்களின் உரிமைகளை நடைமுறை அரசியல் - சமூக - பொருளாதார அமைப்புமுறை ஒடுக்குகிறது. இதனைப்பற்றிக் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாகக் கருத்துரைத்துவரும் இக்கட்டுரையாசிரியர், தமது ஆய்வினை வெளிப்படுத்தும் நோக்கோடு இதனை இங்கே வழங்குகிறார். ஒடுக்கப்படும் சூழ்நிலையில், இந்தியர்கள் தங்களை ஓர் இனவாதப் பிரிவினராக அடையாளம் கொண்டு மேற்கொள்ளும் போராட்ட உத்திகள் ஒரு வழிமுறையாகுமா? என்ற வினாவுக்கு விடையளிக்க முற்படுகிறார் - ஆசிரியர்)

முன்னுரை

மூன்று முக்கிய இனங்கள் வாழும் மலேசியாவில், கொள்கை அமைப்புமுறை நிலைத்தன்மை (Stability) என்பதை முதன்மைப்படுத்துகிறது. மலாய்க்காரர், சீனர், இந்தியர் என்ற வகையில் பிரிவினைக் கொள்கைகளை அமலாக்கம் செய்யும்போது உண்டாகும் முரண்பாடுகளை அமைதிப்படுத்த சட்டங்களை உருவாக்கி அதன்வழி ஓர் அடக்குமுறை அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. ஓர் அரசாங்கம் அடக்குமுறையின் கீழ் தனது குடிமக்களை வைத்திருக்க முடியுமா? அப்படியென்றால், ஒடுக்கப்படும் மக்களுக்கான நீதி நியாயங்களை யாரால் வழங்க முடியும்?

இது போன்ற கேள்விகள் புதிதல்ல. மலேசியாவின் விடுதலைக்கு முன்பு, ஆங்கிலேயரின் அடக்குமுறையின்கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த மலாயாவின் விடுதலை என்பது உலகளாவிய முறையில் உதித்த புதிய அனைத்துலக அரசியல் மாற்றமாகும். ஆங்கிலேயர்களின் வெளியேற்றம் என்பது, ஒரு தவிர்க்க முடியாத நிலைக்கு ஆக்கிரமிப்புக் குடியேற்றங்கள் நெருக்கப்பட்டதன் விளைவாகும். இதன் பின்னணியில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உண்டான மனித உரிமைகள் மீதான விவாதம் முக்கியக் காரணமாக இருந்தது. அப்போது ஆதிக்கம், அடிமைத்தனம், ஆக்கிரமிப்பு, கட்டுப்பாடு என்ற வகையில் மனிதகுலம் அடைபட்டுக் கிடந்தது. அதிலிருந்து விடுபட அமைதிப்போர் முதல் ஆயுதப் போர்வரை நிகழ்ந்தது. போர் என்பதை மனிதனை மனிதனே அழித்துக் கொள்வதாகும். போரை நிறுத்தினால் அமைதி ஏற்படும். அமைதி நிலவினால் போரைத் தவிர்க்கலாம் போன்றவை உலக நாடுகளை மனித உரிமைகள் மீதான விவாதங்களில் ஆழப்படுத்தின.

1948ஆம் ஆண்டு அனைத்துலக மனித உரிமைகள் மீதான பரிந்துரை (பிரகடனம்) (Universal Declaration of Human Rights) ஐக்கிய நாட்டுச் சபையின் அனைத்து உறுப்பிய நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆயுதப் போராட்டமும் வன்முறையும் அற்ற வகையில் முரண்பாட்டுச் சூழ்நிலைகள் மாற்றம் காண வேண்டுமானால் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், எஞ்சியுள்ள ஒரே வழிமுறை, அடக்குமுறைகள் ஆகியவற்றை எதிர்த்துப் புரட்சி செய்வதே என்ற நிர்ப்பந்தத்தைத் தவிர்க்க, மனித உரிமைகளை எவ்வகை அரசின் நீதித்துறையும் கண்டிப்பாக நிலைப்படுத்த வேண்டும் என்ற சொற்றொடர்களைப் பரிந்துரை (பிரகடனம்) முன்னுரை வலியுறுத்துகிறது.

ஆனால், நடைமுறையில் அவ்வாறு நிகழ்வது கடினமாகவே இருந்து வருகிறது. உதாரணமாகப் போஸ்னியா - எர்சோகோவினா (1996), மற்றும் இலங்கை (2009) போன்றவற்றின் முரண்பாடுகள், ஆயுதப்போர் வகையில் முடிவுகளை எட்டும்போது நீதி வெற்றியடைந்தவர்களின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே தீர்மானமாக்கப்படுகிறது.

அரசமைப்புச் சட்டம்

மலேசியாவைப் பொறுத்தமட்டில் உரிமைகள் எனப்படுபவை நமது அரசமைப்புச் சட்டத்தின் (Federal Constitution) கீழ் வரையறுக்கப்பட்டிருப்பினும், அதனை அனைத்துலக மனித உரிமைகளோடு இணைத்துப் பார்க்கையில், சில உடனடி முரண்பாடுகள் தோன்றும்.

அவற்றுள் சில:

1. நாமனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள்.
2. நமது அரசு சமயம் இசுலாம், அதே வேளை மற்ற சமயங்களும் காக்கப்படும்.
3. குடி மக்களாக ஏற்றுக்கொள்ளப்படும் மக்களாக, மலேசியத் தினத்திற்கு முன்புபிறந்தவரும் குடிமகனானவர் திருமணம் செய்து கொண்ட பெண் மற்றும் அரசமைப்புச் சட்டங்களுக்கு உட்பட்ட வகையில் வாழ்கின்றவர்களாவர்.
4. தாய்மொழியில் கல்வி பயில உரிமையுண்டு.
5. மற்ற இனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அதே வேளையில் பூமிபுத்ராக்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பு, உரிமங்கள் பெறுதல் மற்றும் வாணிக வாய்ப்புகளுக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படும்.

மேற்கண்டவற்றை நமது நடைமுறைக் கொள்கையோடு ஒப்பீடு செய்யும்போது நமக்கு அவற்றின் முரண்பாடுகள் தெளிவாகவே தென்படுகின்றன. உதாரணமாக, நாம் அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள், குடியுரிமை என்பது சட்டவரையறையின்கீழ் வழங்கப்பட வேண்டும், நமது சமயம் காக்கப்பட வேண்டும், தாய்மொழிக்கல்வி பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், சிறப்பு உரிமைகளின் அடிப்படையில் பூமிபுத்ராக்களின், குறிப்பாக மலாய்க்காரர்களின் அதிகாரமும் ஆக்கிரமிப்பும் நாம் சமமானவர் அல்லர் என்பதையும், நமது சமயங்கள் மற்றும் தாய்மொழிக்கல்வி இரண்டாம் நிலையில் உள்ளதையும் வாணிகம், பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகள் நமக்கு அளிக்கப்படுவது குறைவாக உள்ளதையும் நம்மால் உணர முடிகிறது.

இந்த முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பலவகையான அமைதிப் போராட்டங்களும் விவாதங்களும் நடந்துள்ளன. இவை அனைத்துமே, நாம் இனவாரியாகப் பிரிக்கப்பட்ட நிலையில் சிறுபான்மை என்ற இனத்தின் அதிகாரப் பலமற்ற நிலையில் நடந்தன. இதில் அதிகாரம் எனக் குறிப்பிடுவது, நமது நாட்டின் அரசாங்கம் மற்றும் அமலாக்க நடைமுறைகள்தாம். அதிகாரமற்றது என்பது இந்த அரசாங்கம் மற்றும் அமலாக்க நடைமுறைகள் முழுமையாக அம்னோ கட்டுப்பாட்டில் உள்ளதையும் இனவாதத்தால் இயக்கப்படுவதையும் அதில் இந்தியர்களின் ஈடுபாடு அம்னோவின் கட்டுபாட்டுக்குள்ளே அடங்கியே இருக்க வேண்டும் என்பதாகும்.

இந்தியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், போன்ற நாடுகளில் சிறுபான்மை இனம் காக்கப்பட அரசமைப்புச் சட்டம் அவர்களுக்குச் சிறப்பு உரிமைகளை வழங்குகிறது. ஆனால், மலேசிய அரசமைப்புச் சட்டம் அதற்குத் தலைகீழாக இவை போன்ற உரிமைகளைப் பெருபான்மை இனத்திற்கு அளித்துள்ளது. பெரும்பான்மை இனமான மலாய்க்காரர்கள் இதனைப் பூமிபுத்ராக்கள் என்ற முத்திரையின்கீழ் முழுமையான வகையில் பயன்படுத்தி இந்த நாடு என்பதே தங்களுக்கு மட்டுந்தான் சொந்தம் என்ற அளவிற்குக் கொண்டுவந்து விட்டார்கள். இதைக் கட்டுப்படுத்தும் நிலையை அம்னோவின் தலைவர்கள் சிலர் உணர்ந்தாலும், இதிலிருந்து மாறுபட இயலும் என்ற நம்பிக்கை இன்னும் ஆழமாகவில்லை.

இலங்கை அரசாங்கத்தின் பௌத்த சிங்களவாதக் கொள்கையானது சிறுபான்மை இனத்தின் உரிமைகளைப் பறித்ததன் விளைவுதான் ஆயுதப் போராட்டங்களுக்கு வித்திட்டது.

மலேசியாவின் நிலை

உலகளவில் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்ற வேட்கை ஆயுதப் போராட்டத்திற்கு வித்திடாமல் இருக்க வழிமுறைகள் உள்ளனவா என்று பலர் விவாதித்து வருகின்றனர். மலேசியாவின் நிலை ஆயுதப் போராட்டத்திற்கு இட்டுச் செல்லுமா?

"ஒவ்வொருவருக்கும் உணவு கிடைக்குமா?" என்று கேட்டால் "யாரும் பட்டினியில் வாடக்கூடாது" என்றுதான் பதில் சொல்ல இயலும். யாரும் பட்டினியில் வாடவில்லை என்றால், அவர்களுக்கு உணவு கிடைக்கும் நிலை உள்ளது என்று ஏற்றுக் கொள்ளலாம். மலேசியாவில் வாழும் மக்கள் பட்டினியில் வாடவில்லை என்றாலும், அவர்களின் வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனது நேரடி அனுபவம் ஒன்றைச் சொல்ல பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன், 2009-ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் நானும் என் மகளும் இரண்டு நாள்கள் பெர்ஜே (PERJEK) என்ற பூர்வகுடிகள் கிராமத்தில் தங்கினோம். இது பேராக் மாநிலத்தில், சுங்கை சிப்புட் பகுதியில், பகாங் மாநில எல்லை அருகில் உள்ளது. பூர்வகுடிகளின் உடல் வளர்ச்சிபற்றி ஒரு சிறிய ஆய்வை மேற்கொண்டோம். அங்குள்ள 59 குழந்தைகளின் எடையையும் உயரத்தையும் அளவிட்டோம். அவற்றை மலேசிய மக்களின் சராசரி நிலையோடு ஒப்பிட்டு பார்க்கையில், அவர்களது உடல் வளர்ச்சி என்பது மோசமான 10 விழுக்காடு மக்களுக்கு உட்பட்டதாகவே இருந்தது. இந்தியர்களே சிறுபான்மை என்பதால் நாட்டின் வளர்ச்சியில் இருந்து புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது ஒரு புறம் இருக்க, பூமிபுத்ரா என்ற உரிமை முத்திரை பெற்ற பூர்வகுடிகளின் வறுமையும் மோசமாகவே உள்ளது.

பூர்வகுடிகளுக்கென்று பலவகைத் திட்டங்களை அரசாங்கம் கொண்டிருந்தாலும், அவர்களது உடல் வளர்ச்சி மிகவும் பின்தங்கியுள்ளது; அரசாங்கத் திட்டங்கள் அவர்களைச் சரியாகச் சென்றடையவில்லை என்பதையே இது காட்டுகிறது.

நிலைமை இப்படியிருக்கையில், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர், பூமிபுத்ரா சிறப்புச் சலுகைகள் அரசமைப்புச் சட்டவிதி 153இன் கீழ் உள்ளதால், பூமிபுத்ராக்கள் தொடர்ந்து அவற்றைப் பெறுவது அவசியம் எனக் கோடி காட்டியுள்ளார். (The Straits Times, 13.12.2009). இது பூமிபுத்ராக்களின் உரிமை என்கிறார்; நடைமுறை உண்மை. பூமிபுத்ராக்களாக இருக்கும் பூர்வகுடிகளை இன்னமும் மோசமான வளர்ச்சியில் வைத்திருப்பது, இந்தப் பூமிபுத்ரா சிறப்புரிமை அமலாக்கத்தைத் தொடர்ந்து நடத்த உதாரணம் காட்டத்தான் என்கிறார் முனைவர் கோலின் நிக்கலஸ் (Centre for Orang Asli Concern) தலைவர்.

மேலும், அரசியல் வலிமையையும், அதன்வழி பொருளாதார வலிமையும் பெற்றுள்ள அரசியல் கட்சியான அம்னோ தனது நிலையைத் தொடர்ந்து தற்காத்துக் கொள்ள, மலாய் - இசுலாம் என்ற இனவாத - மதவாத பிரிவினையைத் தொடர்ந்து ஆழப்படுத்தி வருகிறது. அம்னோவைக் குறை கூறுபவர்கள் மலாய் இனத் துரோகிகள் எனவும் மலாய்க்காரர்கள் இசுலாமியர்களாக இருப்பதால், இசுலாம் என்ற மதத்தின்வழி மலாய்க்காரர்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் முழங்குகின்றனர். இவை போன்ற விவாதங்களை அம்னோவின் உத்துசான் மலேசியா நாளிதழ்களில் காணலாம். எனவே, அரசாங்கத்தை அமைப்பவர்கள், தங்களது இன - மதவாதக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு பெரும்பான்மை இனம் அல்லது மதம் என்ற அடிப்படையில் அரசாங்கத்தைக் கைப்பற்றி அதுதான் சனநாயகம் என்றும், அதன் கொள்கைகள்தாம் அரசாங்கம் என்றும் நடைமுறைப்படுத்துவது முரண்பாட்டுச் சூழலுக்கு வித்திட்டு வருகிறது.

மனித உரிமைகள்

அமைதி என்பது முரண்பாடற்றச் சூழல். அமைதியும் வளமும் அடக்குமுறையால் உருவாக்க முடியாது. முரண்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதை ஒரு வகைப்படுத்தி புரட்சி என்கிறோம்.

இது ஆயுதமற்றதாகத் தோன்றி, அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ஆயுதங்களையும் அடக்குமுறைகளையும் பயன்படுத்த துவங்கும்போது ஆயுதப் போராட்டமாகவும் வெடிக்கும்.

உதாரணமாகப் பள்ளிக்கூடங்கள் கட்டினால் கல்வி புகட்டலாம்; அறிவாற்றல் பெருகும்; நாடு வளர்ச்சியடையும். இல்லாவிட்டால் ஏற்றத்தாழ்வுகளையும் குற்றச்செயல்களையும் உண்டாக்கும். குற்றவாளிகளைத் தண்டிப்பதன் வழி குற்றங்களைக் குறைக்க இயலும் என்ற வழிமுறை அதிகமான சிறைச்சாலைகளையே உருவாக்கும். நமக்குத் தேவை பள்ளிக்கூடமா? சிறைச்சாலையா?

இன்று உலக நாடுகள் அனைத்துமே ஆயுதப் போராட்டம் வழி முரண்பாடுகளைத் தீர்ப்பது கடினம் என்றும், அதைத் தவிர்க்க மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் நடைமுறைப்படுத்தவும் வேண்டும் எனக் கோருகின்றனர். மனித உரிமைகள் பற்றிப் புரிந்துகொள்ள, கேள்வி - பதில் தொனியில் சில விளக்கங்களைத் தந்துள்ளேன்.

மனித உரிமைகள் என்றால் என்ன?

ஒரு நாடு எப்படித் தனது நாட்டில் வாழும் மக்களை நடத்த வேண்டும் என்று அனைத்துலக ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தன்மைகள், நடைமுறைகள் மற்றும் கோட்பாடுகளே மனித உரிமைகள் எனப்படும்.

அவை எப்படி இயங்குகின்றன?

மனித உரிமைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று அரசாங்கம் எதைச் செய்யக்கூடாது என்பது. மற்றொன்று எதையெதைச் செய்ய வேண்டும் என்பது.

அரசாங்கம் எதைச் செய்யக்கூடாது?

மனிதர்கள் அடிமைகளோ, விலங்குகளோ அல்லர். அவர்களுக்குப் பாதுகாப்பு, சுயசிந்தனை, பொதுநலம், பொதுப் பங்கெடுப்பு, பேசுவது, ஒன்று கூடுவது, கருத்துரைப்பது போன்றவற்றில் தடையின்றி ஈடுபட இயல்பான நிலைகள் இருக்க வேண்டும். இவற்றை மாபெரும் மக்களின் அரசியல் உரிமைகள் எனலாம் (Civil and Political Rights). இதில் உள்ள சுதந்திர தன்மைகளைக் கட்டுப்படுத்தவோ, அதில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யவோ, துன்புறுத்தவோ, ஆபத்து விளைவிக்கவோ தனது அதிகாரத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்தக்கூடாது.

அரசாங்கம் எதைச் செய்ய வேண்டும்?

சமூக, பொருளாதார, பண்பாட்டு உரிமைகள் என்பவை (Social, Economic and Cultural Rights) சமூக நலன் மற்றும் குடிமக்கள் சுமூகமாக வாழ்வதற்கான நிலைமையை அரசாங்கம் உண்டாக்க வேண்டும் எனக் கோருகின்றன. வேலை வாய்ப்பு, தரமான வாழ்க்கை, கல்வி, சமயம், சுகாதாரம் மற்றும் பண்பாட்டு வாழ்க்கையைக் குடிமக்கள் பெற அரசங்கம் ஆவன செய்ய வேண்டும்.

இவை போன்ற உரிமைகளை யார் யார் எப்போது வழங்கினார்கள்?

இந்த உரிமைகளின் அடிப்படைக் கூறுகள் 1948இல் உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட "அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம்" என்ற சாசனத்தில் உள்ளன. இவை மேலும் ஐக்கிய நாட்டுச் சபையின் பல்வேறு ஆணைகளாலும் ஒப்பந்தங்களாலும் மேலும் உறுதிச் செய்யப்பட்டன.

இந்த உரிமைகளின் அடிப்படைத் தன்மை என்ன?

சமத்துவமாகவும், பாகுபாடற்ற நிலையில் வாழ்வதுமாகும். (Right to equality and the principle of non-discrimination)

உரிமைகள் அத்துமீறல்

இந்த உரிமைகளை யாரால் பறிக்க முடியும்?

மனித உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது.

நமக்கு உரிமைகள் இல்லை என்பதை எப்படி விளக்குவது?

மனித உரிமைகள் என்பது ஒருவர் மனிதர் என்பதாலே அவரிடம் உள்ள பிரிக்க முடியாத, இயல்பான, அனைத்துலக விதிகள். இவற்றை வேண்டாம், இல்லை என்று யாராலும் மறுக்கவோ தடுக்கவோ இயலாது. உரிமைகள் இல்லையென்பதைவிட, உரிமைகளைப் பின்பற்றவோ நடைமுறைப்படுத்தவோ தவறிவிட்டார்கள் எனக் குற்றம் சாட்டலாம். இதைத்தான் உரிமைகள் அத்துமீறல் என்கிறோம்.

உரிமைகள் அங்கீகரித்து அதை முறையாக நடைமுறைப்படுத்தி பாதுகாக்க வேண்டும். அப்படிச் செய்ய இயலாதபோது உரிமை அத்துமீறல் நிகழ்கிறது.

குழந்தைகளின் கல்வி அடிப்படை உரிமை. (ஏன் இப்படிச் சொல்கிறோம் என்பதை தனியே விளக்கியுள்ளேன்). அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் பள்ளிக்கூட வசதியைச் செய்து தருவது அரசாங்கத்தின் பொறுப்பு. அதைச் செய்ய தவறும்போது அது ஓர் உரிமை அத்துமீறல்.

முரண்பாடுகளும் இணக்க முடிவும்

இது போன்ற உரிமை அத்துமீறல்கள்தாம் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்றன. இந்த அத்துமீறல்கள் ஓர் இனத்தையோ சமயத்தையோ அடிப்படையாகக் கொண்டு நிகழும்போது, அந்த இனத்தாருக்கும் அல்லது அம்மதத்தாருக்கும் அரசாங்கத்திற்கும் இடையே முரண்பாடுகள் (conflict) தோன்றுகின்றன. இவை ஆயுதப் போராட்டங்கள்வரை இட்டுச் செல்லும் தன்மை கொண்டவை. மேலும், முரண்பாடுகளுக்கான இணக்க முடிவு (conflict resolution) என்பதும் மனித உரிமைகள் என்பதும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.

நமது அரசாங்கம் பல வேளைகளில் எடுக்கும் முடிவுகளை நாம் இணக்க முடிவுகளாக ஏற்றுக் கொள்கிறோம். உதாரணமாக, ஒரு தமிழ்ப்பள்ளியில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறையை நீக்க, ஓர் அமைச்சர் திடீரென வருகை புரிவார். பத்திரிகை செய்தியில் "பள்ளியின் பிரச்சனை தீர்ந்தது, அமைச்சர் ரிம 100,000 வழங்கினார். நான்கு தற்காலிக வகுப்பறைகள் கட்டப்படும் என உறுதியளித்தார்" போன்ற வாசகங்களை நாம் காண்போம்.

இது பள்ளியின் இடப்பற்றாக்குறையைத் தீர்க்கும் இணக்க முடிவாக ஏற்றுக்கொள்ள இயலுமா?

இதே போன்ற பிரச்னைகளை மற்ற பள்ளிகளில் தீர்க்கும் வகையில், அதே அமைச்சர் அங்கும் சென்று இதையே செய்வாரா? அல்லது, பொதுமக்கள் (Public) இது போன்ற முரண்பாட்டுச் சூழ்நிலையில் தெரிவாரா; போராட்டம் வரை வந்தால்தான் அமைச்சர் வருவரோ?

எனவே, இணக்க முடிவு என்பதை ஒரு தனிப்பட்ட வகையில் அதிகாரம் கொண்டுள்ள ஓர் அரசியல்வாதியோ அல்லது அரசாங்க அதிகாரியோ வழங்க இயலாது. அது போன்ற முடிவைத்தான் நாம் ஏக போக முடிவு என்கிறோம். எனவே, ஏக போக முடிவின் வழி (அதிகாரம் வழி உருவாகும் முடிவு) முரண்பாடுகளைத் தீர்க்க வழிமுறைகள் உண்டானாலும் அவற்றை இணைக்கும் முடிவுகளாகக் கருத இயலா.

ஓர் அமைச்சர், தேர்தல் காலங்களில் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு ஆங்காங்கே பல இலட்ச ரிங்கிட்டை வாரி வழங்கி, சில பிரச்னைகளைத் தீர்ப்பதன் வழி முரண்பாடுகளுக்கான முடிவை அடைய இயலாது.

அடிப்படையில் உள்ள உரிமைகளின் உருவாக்கும், அவற்றின் வெளிப்பாடு, அவற்றின் தீர்வை முறைப்படுத்தாமல் இணக்கமுடிவை உருவாக்க இயலாது. எனவே, முரண்பாடுகளைக் களைய இயலாது. ஏக போக முடிவுகள் தற்காலிகமானவை. அவை முரண்பாடுகளை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குக் கொண்டு செல்லுமே ஒழிய, உரிமை சார்ந்த இணக்க முடிவை அளிக்காது.

இப்போது நான்கு வகுப்பறையை அமைச்சர்களின் வழி பெற்றுக்கொண்ட பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை உண்டாகும். சிற்றுண்டிச்சாலையில் இடப்பற்றாக்குறை வசதிகளற்ற கழிவறை இப்படியாகப் பிரச்சனைகள் தொடர்ந்து மீண்டும் முரண்பாடுகள் தோன்றும்.

எனவே, மனித உரிமைகளுக்கும் இணக்க முடிவுகளுக்கும் உள்ள தொடர்பைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் முரண்பாடுகளைக் களைய இயலாது.

ஒரு பள்ளியில் இடப் பற்றாக்குறையால் மாணவர்களை அதிகரிக்க இயலவில்லை. அதனால், மாணவர்கள் தமிழ்க்கல்வி பயிலும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதிகாரம் உள்ள ஒருவர், நான்கு வகுப்பறைகளைக் கட்டுகிறார். தற்காலிகமாகத் தீர்வு பிறக்கிறது, மாணவர்கள் தமிழ்க்கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறுகின்றனர். பிரச்சனை தீர்ந்து விட்டதா? மீண்டும் இன்னொரு பள்ளியில் அதே நிலை! இப்படியாகத் தொடரும் நிலை உண்டானால், தீர்வு என்பது எப்படி அமைய வேண்டும்?

முரண்பாட்டுச் சூழலும் உரிமை அத்துமீறல்களும்

நீரில் மிதக்கும் பனிக்கட்டியைப் பார்த்திருப்போம். அதில் ஒரு சிறு பகுதிதான் நீருக்கு வெளியே தெரியும். அதன் பெரும் பகுதி நீர் மட்டத்திற்கு அடியில்தான் இருக்கும். இதனை யூகத்தில் கொண்டு நாம் வெளிப்படையாகக் காணும் வன்முறை முரண்பாடுகளுக்கும் நமது கண்களுக்கும் புலப்படாத உரிமை அத்துமீறல்களையும் இந்தக் கட்டுரையில் புரிந்து கொள்ள முற்படுவோம்.

காண்பவை:

வன்முறை கொண்ட பாதிப்புகள்.

ஈனமான சொற்களைப் பயன்படுத்துதல் - Keling

எதற்கெடுத்தாலும் கைது செய்தல்

விசாரணையின்றிச் சிறையிலிடுதல் - ISA

பொதுக்கூட்டங்களுக்குத் தடை விதித்தல்

அவமானத்துடன் மட்டமாக நடத்தப்படுதல்

சொல்லாலும் செயலாலும் துன்புறுத்துதல் - Cow head

சுட்டுக் கொல்லுதல் அல்லது அடித்துக் கொல்லுதல் - குகன்

தகவல்களை வெளியிட மறுத்தல் - OSA

எதற்கெடுத்தாலும் பயமுறுத்துதல் - M 13

சிறுபான்மையினரை ஓரங்கட்டுதல்

சமய வளர்ச்சியைத் தடை செய்தல்

நாட்டின் வளத்தை சமநிலையற்ற சமநிலையற்ற வகையில் பயன்படுத்துதல்

வேலை வாய்ப்புகளில் புறக்கணிப்பு

தேசியக் கொள்கைகளில் ஒதுக்கப்படுதல்

கல்விக்கான வாய்ப்பினைக் குறைத்தல்

வாணிக வாய்ப்புகளில் புறக்கணிப்பு

காணாதவை:

மனித உரிமை அத்துமீறல்கள்

இந்தப் பனிக்கட்டி வரைபடத்தில் நீர் மட்டதிற்கு அடியில் உள்ள பனிப் பாறையால்தான் நீரளவின் மேலே அல்லது வெளியே தெரியும் பனிக்கட்டியைக் காட்டமுடிகிறது. ஒரு பகுதி தெரிகிறது. மற்றொரு பகுதி தெரியாது. ஆனால், இந்த இரண்டும் ஒன்றே. இரண்டிற்கும் தொடர்பு உண்டு. வெளியே தெரியும் பனிக்கட்டி குறைய வேண்டுமானால், உள்ளே இருக்கும் பனிப்பாறை கரைய வேண்டும். நீர்மட்டத்திற்கு மேலே தெரியும் பனிக்கட்டி மனித உரிமை அத்துமீறல்களால் ஏற்படும் பாதிப்புகளைக் காட்டுகின்றன. இந்தப் பாதிப்புகளை நாம் வன்முறையிலான முரண்பாடுகள் அல்லது முரண்பாடுகள் எனலாம் (violent conflict or conflict). மேலே இருக்கும் பனிக்கட்டியைக் காண்பதுபோல, இந்தப் பாதிப்புகளைப் பார்க்கலாம், உணரலாம். இதில் காவல்துறையின் அளவுக்கதிகமான அதிகாரத் துஷ்பிரயோகம், அரசியல் தலைவர்களின் அடக்குமுறையான அதிகாரம், சுட்டுக் கொல்லப்படுதல், அடித்துத் துன்பப்படுத்துதல், செய்திகளைக் கட்டுப்படுத்துதல், கோயில்களை உடைப்பது, பள்ளி மாணவர்களை இழிவாக நடத்துவது - இப்படியாக அமையும்.

நீர்மட்டத்திற்கு கீழே உள்ள பனிப்பாறை, மேற்கண்ட பாதிப்புகளை உண்டாக்கும் மனித உரிமை அத்துமீறல்களைக் குறிக்கின்றது. இகது ஒரு நடைமுறை அரசாங்கமும் அதனை நடத்தும் நிர்வாகமும் மேற்கொண்டு வரும் அமலாக்கத்தில் உள்ள உரிமைக்குப் புறம்பானவற்றைக் காட்டுகிறது. அமைச்சரவை, நீதிமன்றம், காவல்துறை, பல்வேறு அமைச்சுகள், மாநில அரசாங்கம், மாநகராட்சி மன்றங்கள் - இப்படியாக ஓர் ஒட்டுமொத்த அரசாங்கத்தின் ஒவ்வோர் அங்கத்திலும் ஆழமாகத் திணிக்கப்பட்டுள்ள கருத்தாண்மை உரிமை அத்துமீறல்களை உண்டாக்குகின்றன. உதாரணமாக , இந்தியர்கள் சிறுபான்மை என்பதால் , தாய்மொழியில் தொடக்கக் கல்வியைப் பயில்வது அரசமைப்புச் சட்டத்தின்கீழ் (உறுப்பு 12&152) உரிமை என்று குறிப்பிடப்பட்டிருந்தும், தமிழ்ப்பள்ளிக்கான ஒதுக்கீடு, நிலம், ஆசிரியர்ப் பயிற்சி, தளவாடப் பொருட்கள் போன்றவை முறையாகக் கிடைப்பதில்லை.

இது போலவே, மலேசியர்கள் ஒவ்வொருவரும் தங்களது சமயத்தைப் பேணவும் வளர்க்கவும் உரிமையுள்ளதை அரசமைப்புச் சட்டம் (உறுப்பு 11) கொண்டிருப்பினும், முறையான நிதி ஒதுக்கீடும், நில ஒதுக்கீடும் ஆலயங்களுக்கு வழங்கப்படுவதில்லை.

கல்வி, வேலை வாய்ப்பு, வாணிக வாய்ப்பு இவையெல்லாம் அனைவருக்கும் இன - மத வேறுபாடற்ற நிலையில் வழங்கப்படுவதில்லை. இதில் மிகவும் மோசமான நிலையில் தள்ளப்படுகின்றவர்கள் இந்தியர்களும் வறுமையில் உள்ளவர்களுந்தாம்.

நமது அரசமைப்பு உறுப்பு 153இல் கீழ் பூமிபுத்ராக்களுக்குச் சிறப்புச் சலுகை தர வேண்டும் என்று கூறுகிறது. அதே வேளை, இதனால் மற்றத் தரப்பினரது நியாயமான தேவைகள் (legitimate interests) பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. இந்த 153வது விதியை முழுமையாகப் பின்பற்ற அரசாங்கமும் அதன் சாதனங்களும் தவறின. இது மாபெரும் உரிமை அத்துமீறலாகும்.

இறுதியாக நடைமுறையில் நாம் காண்பது இந்தியர்கள் என்ற இனம் ஒதுக்கப்பட்ட சமுதாயமாக உருவாகியுள்ளது. இது, இன்றைய அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய நிலைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலை பார்வைக்கு நேரிடையாகப் புலப்படாது. இதுவே வன்முறையிலான எதிர்வினை வளர்ச்சிக்கு வித்திடுகின்றது.

இந்த முரண்பாட்டுச் சூழலும் உரிமை அத்துமீறல்களும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை. உரிமை அத்துமீறல் முரண்பாடுகளை உருவாக்கும் அதேவேளையில், ஒரு சர்வசாதாரணமான அத்துமீறல் நாளடைவில் கொள்கையளவில் உருவாக்கம் கண்டு நடைமுறையாவதும் உண்டு.

உதாரணமாகத் தமிழ்மொழியை இடைநிலைப் பள்ளிகளில் பயில உரிமை உண்டு. அதைத் தேர்வுநிலைகளில் ஒப்புதல் தர மறுப்பதால் அதன் முக்கியத்துவம் குறைக்கப்படுகிறது. நாளடைவில் பள்ளிகள் அந்தப் பாடங்களைப் பயில அனுமதிக்க தயங்குவதால் மாணவர்களுக்குத் தமிழ்மொழியை ஒரு பாடமாக வழங்கப்படுவதில்லை. பிறகு, அது பாடமாகவே உருவாகுவதில்லை.

முடிவுரை

இந்தப் பனிக்கட்டி ஒப்பீட்டின் அலசலில், நமது சிந்தனையை உறுத்துவது எப்படி, எதனால் உரிமை அத்துமீறல்கள் முரண்பாடுகளையும் வன்முறைப் பாதிப்புகளையும் விளைவிக்கின்றன என்பதாகும்.

இது மனித உரிமைகளுக்கும், அடிப்படை மனிதத் தேவைகளுக்கும் தொடர்புடையது. ஒரு மனிதன் உயிர்வாழ உடை, உணவு, இருப்பிடம், பாதுகாப்பு அவசியமாகின்றன. இவற்றோடு மொழி, கலை, சமயம், பண்பாடு போன்றவை அவனது அடையாளத்தை நிலைநிறுத்தி சுயமதிப்பும் மரியாதையும் கொண்ட மனிதராக உருவாக்குகிறது. இவையெல்லாம் அடிப்படைத் தேவைகளாக உருவாகும்போது, உரிமை எனப்படுவது இவற்றை அடைய உருவாக்கப்படும் வழிமுறைகளேயாகும்.

ஏதாவது உரிமை மீறப்படும்போது அதற்குரிய தேவை பூர்த்தியாவதில்லை. அந்தத் தேவை மனிதர்களை வன்முறை முரண்பாடுகளுக்கு உள்ளாக்குகிறது. போராட்ட உத்திகள் வழிமுறையாகின்றன.

மனிதர்கள் சுய மதிப்புடன், மானம் மரியாதையுடன் வாழ, அவர்கள் தங்களது தேவைகளை அடிப்படைத் தேவைகளாகக் கருதுகிறார்கள். அடிப்படைத் தேவைகளைக் பேரம் பேச இயலாது என்பது மனித உரிமையின் நடைமுறையாகும்.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768