இதழ் 18 - ஜூன் 2010   சிங்கப்பூரின் தமிழ்க் கவிதைச் சூழல் (90-களுக்குப் பிறகு)
முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி
 
 
 
  நேர்காணல்:

இன்று பெண்ணியம் கொச்சைப் படுத்தப்படுகின்றது!
க. பாக்கியம்

பத்தி:

நண்பரின் பரிசு

அ. முத்துலிங்கம்

இயற்கை (3) - வனம்
எம். ரிஷான் ஷெரீப்

கிர்கிஸ்தானில் ஒரு கல்யாண பட்டுப்புடவை
சீ. முத்துசாமி

செம்மொழி மாநாடும் செம்மறி ஆடுகளும் – கலைஞர் தாத்தாவுக்குக் கண்ணீர் விடாத கடிதம்
சு. யுவராஜன்

கட்டுரை:

கல்விக் கடைகள் - வியாபாரம் ஜோர்
நெடுவை தவத்திருமணி

சர்கீ மிக்கைலோவிச் ஐசென்ஸ்டைன் (Sergei Mikhailovich Eisenstein)
சு. காளிதாஸ்

உரிமைதான் புரட்சியின் எல்லை
கா. ஆறுமுகம்

ஒரு சிறுகதை ஒரு நாவல்
கிரகம்

சிங்கப்பூரின் தமிழ்க் கவிதைச் சூழல் (90-களுக்குப் பிறகு)
முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி

சிறுகதை:

குழந்தையின் தாய்
செல்வராஜ் ஜெகதீசன்


இரண்டாவது முகம்
ராம்ப்ரசாத்

தொடர்:


ப‌ல வேடிக்கை ம‌னித‌ர்க‌ள் போல‌ ...6
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...11
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...6
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...8

ஏ. தேவராஜன்

தர்மினி

லதா

ம‌. க‌விதா

பூங்குழலி வீரன்

தினேசுவரி

ரேணுகா


புத்தகப்பார்வை:


மனக்கரையில் "லங்காட் நதிக்கரை"
க. ராஜம்ரஞ்சனி

எதிர்வினை:


இது பாடாவதிகளின் காலம்
சு. யுவராஜன்

"இலக்கிய மோசடி" விவாதத்தில் நான்...
மனஹரன்
     
     
 

சிங்கப்பூரின் கவிதைச் சூழல் என்னும் இக்கட்டுரை சிங்கப்பூரில் நல்ல கவிதைகள் எழுதப்பட வேண்டும்; கவிதைத்துறை ஆரோக்கியமாக வளர வேண்டும் என்னும் உயர்ந்த நோக்கிலும், விமர்சன நோக்கிலும் எழுதப்படுகிறது. கவிதையைக் கூட எளிதில் எழுதிவிடலாம். ஆயின், கவிதையைப் பற்றி எழுதுவது மிகவும் அருமையுடைய செயல் என்பது விக்ரமாதித்யனின் கருத்து.

“கவிதை பற்றி எழுதுவது கவிதை எழுதுவதை விடவும் சிரமம். தோன்றி வந்தால் கவிதை எழுதிவிடலாம். கவிதை குறித்து எழுத மிகுந்த உழைப்பு வேண்டியிருக்கிறது. திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும். விஷயங்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். சரியாக எடுத்துச் சொல்ல வேண்டும். இப்படி நிறைய வேலைகள் இருக்கின்றன.” (கவிதை ரசனை ப-15)

சிங்கப்பூர் அரசாங்கம் பொருளியல் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டுத் திறனாளர்களை அதிக அளவில் 1990-களிலும் அதன் பின்னரும் வரவழைத்தது. இத்திறனாளர்களின் வருகையால் சிங்கப்பூரின் தமிழிலக்கியப் படைப்புலகச் சூழல் மாறிவருகின்றது. இத்திறனாளர்கள் வாசிப்பில் தீவிரம் கொண்டவர்களாய் இருப்பதோடு, இவர்களின் மனைவிமார்கள் பட்டதாரிகளாகவும், இல்லத்தரசிகளாகவும் இருக்கும் பட்சத்தில் இவர்களின் வாசிப்புப்பசிக்கு அருமையான விருந்து கொடுக்கும் வகையில் தேசிய நூலகம் திகழ்ந்து கொண்டிருப்பதாலும் திறனாளர்களும், அவர்தம் மனைவிமாரும் எழுத்தாளர்களாக அறிமுகமாயினர். இவர்களைத் தவிர உடலுழைப்புத் தொழிலாளர்களாயும், திறன்மிக்க (skilled) ஊழியர்களாயும் வேலைக்கு அழைத்துவரப்பட்டவர்களும் மிகப் பலர். இவர்கள் வேலை அனுமதிச் சீட்டு (work permit holders) உடையவர்களாய்த் தமிழ்ப் புத்தகங்களின் மீது பெருவிருப்பம் கொண்டவர்களாயும் உள்ளனர். ஆகவே, இவர்களும் ஓய்வு நேரத்தில் வாசிப்பை நேசித்தனர். முன்னர்க் குறிப்பிட்ட நிரந்தரவாசிகள் போலவே வேலை அனுமதிச் சீட்டுப் பெற்றோரும் படைப்பிலக்கிய உலகில் காலடி வைத்தனர்.

இவர்களின் எழுத்துலகப் பிரவேசம் ஒரு புறம் நிகழ, சிங்கப்பூர்ப் படைப்பிலக்கியவாதிகளில் வளர்ந்துவரும் இளந்தலைமுறையைச் சேர்ந்த, நல்ல எதிர்காலம் உண்டு என நம்பப்பட்ட பலரின் இலக்கியத்துறவும் அதே வேளையில் நிகழ்ந்தது. ரெ.பாண்டியன், ராஜசேகர், அமீன், முகமது அலி போன்ற இளங்கவிஞர் பலரும் தமிழ்ப்படைப்பிலக்கியச் சூழலை விட்டு விலகிப் போயினர். இந்நிலையில்தான் புதிய குடியேறிகளான (நிரந்தரவாசிகள், வேலை அனுமதிச் சீட்டு உடையோர்) பலரும் படைப்பிலக்கியச் சூழலில் அறிமுகமாயினர். “ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை” என்பது போலத்தான் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய உலகம் இவர்களை ஏற்றுக் கொண்டுள்ளது.

சிங்கப்பூரின் மற்ற அதிகாரத்துவ மொழிகளுள் சீனமொழிப் பிரிவினர் புதிய குடியேறிகளையும் அவர்களது எழுத்துப் படைப்புகளையும் தங்களது இலக்கிய உலகில் தனிமைப்படுத்தியே வைத்துள்ளனர். மலாய்மொழிப் பிரிவினருக்கு இத்தகைய சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், அவர்களின் மொழியும், மொழிவழிப் பண்பாடும் இயைந்தே செல்கின்றன. பேச்சுமொழியில் இருக்கும் வேறுபாடுகள் (இலக்கியத்தில்) பெரிதும் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. ஆங்கிலம் உலகமொழி என்பதாலும், அம்மொழி கைவரப் பெற்றோரின் பார்வை வித்தியாசமானது என்பதாலும் இத்தகு சிக்கல் இல்லை. சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய உலகம் புதிய குடியேறிகளையும் அரவணைத்துக் கொண்டு ஆதரவளிக்கும் சூழலில்தான் இயங்குகிறது.

இவண் நவீனத் தமிழ்ப் படைப்புகளை உருவாக்கி வருவதாகக் கூறும் பலர் தமிழைப் பிழையின்றி எழுதவும், பேசவும் கற்றுக் கொண்டார்களா என்பது சந்தேகமே. பலரும் ஆர்வம் காரணமாகவும், போட்டியில் பரிசு பெறுவதை நோக்கமாகவும் கொண்டு எழுதுகின்றனர் என்பதே உண்மையான நிலவரம். மேலும், இணையப் பெருவெளியும் இவர்களது பிழையான எழுத்துகளைப் பிரசுரிக்கின்றன. ‘கடலில் கரைத்த காயம் போல’ப் புதிய குடியேறிகளின் எழுத்துகள் இணையப்பக்கங்களில் விளம்பர நோக்குடனும், புகழ்பெறும் நோக்குடனும் பிழைமலிந்த, தரமில்லாத வெற்றுப் படைப்புக்களாக உலா வருகின்றன. இவ்வெற்றுப்படைப்புக்களில் மயங்கியோர் இவர்கள் தாம் ‘சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தைத் தாங்கும் தூண்கள்’ எனப் பிரகடனப்படுத்தும் அவலநிலை காணப்படுகின்றது. இத்தகு சூழலில் ‘கடற்கரைச் சோலைக் கவிமாலை’, ‘கவிச்சோலை’ ஆகிய அமைப்புகள் இவர்களுக்குத் தமிழ் இலக்கண வகுப்புகள் நடத்துவதோடு யாப்பிலக்கணமும் கற்பித்து வருவது இதயபூர்வமாகப் பாராட்டப்பட வேண்டிய செயலாகும். குறிப்பாகக் கவிமாலையின் பங்கும் பணியும் விசேஷமாகப் பாராட்டுதற்குரியது. இவ்வமைப்பு மாதாந்திரக் கவிதைப் போட்டி நடத்தியும், கவிஞர்களை உருவாக்கியும், கவிமாலைக் கவிஞர்களை நூல் வெளியிடும் அளவுக்குத் தயார்ப்படுத்தியும் வருகிறது. கவிமாலையில் உள்ள உறுப்பினர்களே கவிச்சோலைக்கும் செல்கின்றனர். மேலும் அங்கு நடத்தப்படும் மாதாந்திரக் கவிதைப் போட்டியிலும் பரிசு பெறுகின்றனர். இந்நிலையைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கும்போது கவிதையும் ‘பணம்பண்ண’ ஒரு கருவியாகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதே வேளையில் புதிய குடியேறிகளுள் ‘கவிஞர்கள்’ பலரும் உருவாகி உள்ளனர்.

கவிமாலையைக் கவிஞரேறு அமலதாசனின் (சிங்கப்பூரர்) ஆதரவோடு தொடங்கிய பிச்சினிக்காடு இளங்கோ (நிரந்தரவாசி), புதுமைத் தேனீ மா.அன்பழகன் (கவிமாலைக்காப்பாளர்) ந.வீ.சத்தியமூர்த்தி, ந.வீ.விசயபாரதி, நெப்போலியன், கோட்டை பிரபு, நீதிபாண்டி என்றழைக்கப்படும் பாண்டித்துரை, செல்வா, காளிமுத்து பாரதி, சி.கருணாகரசு, பாலுமணிமாறன், வை.கலைச்செல்வி, மாதங்கி, மலர்விழி, இளங்கோவன், பனசை நடராஜன், வீரையா என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

பொதுவாகப் புதிய குடியேறிகளான இக்கவிஞர்களை உடலை இந்த நாட்டில் வைத்துக்கொண்டு, உள்ளத்தைத் தாய்நாட்டில் உலவவிட்டடிருப்பவர்கள் என்று வருணிப்பதில் தவறிருக்க முடியாது. இவர்களின் கவிதைகளுடைய பாடுபொருள்கள் தாய்நாட்டு ‘மண்மணம்’ கமழுபவையாக அமைவதால் தான் இந்த முடிவுக்கு வரவேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாகப் ‘பிரம்மா’ என்னும் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் (காளிமுத்து பாரத்தின் அனைத்துக் கவிதைகள், கோட்டை பிரபு, நீதிபதி பாண்டித்துரை , செல்வா ஆகியோர் கவிதைகளில் ஒன்றிரண்டு தவிரப் பெரும்பாலானவை) தாய்நாட்டு மண்ணை மறக்க முடியாத நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றன. ‘கவிச்சோலைக் கவிதைகள்’ என்னும் தொகுப்பில் ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர்’ என்னும் தலைப்பில் இறை மதியழகன் எழுதியுள்ளமை, ‘பண்பாட்டுப் பேரறிஞர் அண்ணா’ என ந.வீ.விசயபாரதி எழுதியுள்ளமை கி.மகேஷ்குமார் ‘அறிஞர் அண்ணா’ என்னும் தலைப்பில் எழுதியுள்ளமை; ‘கவியரசு கண்ணதாசன்’ பற்றிய கவிதைகள், ‘தேடலைச் சுவாசி’ என்னும் தொகுப்பில் உள்ள பல கவிதைகள் ஆகியவற்றை நோக்கப் புதிய குடியேறிகளான இவர்கள் தாய்நாட்டையும், தாய்நாட்டுப் பிரச்சனைகளையும் பாடுவதனை ஒரு பொதுப்போக்காகக் (common trend) கொண்டுள்ளனர். இவ்வகைப் போக்கு உருவாவது இயல்புதான் என்றாலும் திரு.எட்வின் தம்பு அவர்கள் குறிப்பிட்டதைப் போலப் ‘பொருளாதார வளமும் பலமும் குடியேறிகளின் குறிக்கோள்’ என்னும் அடிப்படையில்தான் இக்கவிதைகள் பிறந்துள்ளன. புதிய குடியேறிகளான இவர்கள் தமிழில் கவிதை எழுதிப் பழக சில தலைப்புகள் கொடுக்கப்படுகின்றன. அவற்றுள் பரிசுக்குரியவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை (பெரும்பாலும்) தொகுப்புகளில் இடம்பெறுகின்றன. ஆகவே, தமிழ்நாட்டுப் பின்னணி என்பது இவர்களின் கவிதைகளில் இடம் பெறுவதைத் தவிர்க்க இயலாத போகிறது.

பாடுபொருள்கள் தலைப்புகளாகக் கொடுக்கப்படும்போது கவிதைகளை எழுதுவோர் அத்தலைப்புகளை அணுகும் முறையில் தாய்நாட்டு நினைவும், அந்த மண் சார்ந்த பிரச்சனைகளும் பாடப்படுவதற்கான சூழல் உருவாக்கித் தரப்படுகின்றது என்றே கூறவேண்டும். எனவே, இக்கவிதைகளில் ‘கவித்துவ வறட்சி’ தலைகாட்டுவதையும் காண்கிறோம். மேலும், தலைப்புகளை விளக்குவதே கவிதை என்று கணித்திருப்பதையும் நாம் அவதானிக்க முடிகிறது. சான்றாக வெற்றி, வலிமை, தாய், மகளிர் மாண்பு எனக் கவிதைத் தலைப்புகள் விளக்கங்களாய் அமைகின்றன. கவித்துவம் இல்லாக் ‘கவிதைகள்’ எவ்வாறு நிலைபெறும்? மனங்களிலே தங்காத ‘அந்தச் செய்யுள்களைக்’ (இலக்கணமின்றி எழுதப்படும் உரைவீச்சுக்கு இந்தச் சொற்பிரயோகம் பொருந்தாது) கால வெள்ளம் கரைத்து விடும். கவிச்சோலை, கவிமாலை ஆகியவை ஒரு வேளை ‘தலைப்புகள்’ கொடுக்காமல் கவிதை எழுதச் சொன்னால் ‘கவித்துவ வறட்சி’ மாறுமா? என யோசிக்க வேண்டும்.

மரபுக் கவிதை பாடுவோர் ‘நாடு, மொழி, தலைவர்கள், இயற்கை’ என்னும் விதிகளை மனத்தில் கொண்டு (formulate) பாடுவது போலத்தான் கவிமாலை, கவிச்சோலை போன்றவற்றையும் சொல் விளக்கங்களை, விதிகளைக் கவிதைகளாக்கிப் பாடுகின்றன. இதற்குக் காரணம், முன்னர்க் குறிப்பிட்டது போல ‘தலைப்புகள்’ கொடுத்துக் கவிதை பாடச் சொல்வது என்றும் கூறலாம். கவிதையை வளர்க்க நினைக்கும் இவ்வமைப்புகள் கவிதை எழுதப் பயிற்சியளிக்கின்றன. இப்பயிற்சியில் பரிசுக்குரிய கவிதைகள் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டவை நூலுருப் பெறும்போது மரபுக்கவிதைகளில் காணப்படும் ‘செக்குமாட்டுத்தன்மை’ இயல்பாகவே வந்து விடுகின்றது.

‘சிங்கப்பூர்க் கவிஞர்கள்’ எனப் பொதுவாகக் கவிமாலை, கவிச்சோலைக் கவிஞர்களைச் சிலர் அடையாளப்படுத்துகின்றனர். இவ்வடையாளம் ‘வாழிடம் சிங்கப்பூர்’ என்னும் காரணம் பற்றி வந்ததே தவிர வேறு தகுதியாலன்று. ‘சிங்கப்பூர்’ என்னும் நாடு பாடுபொருளாய் அமைவதால் மட்டும் சிங்கப்பூர்க் கவிதை என்று அடையாளப்படுத்துவது கவிதையைக் கேலிப்பொருளாய் மாற்றிவிடும். சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் இக்கவிஞர்கள் சிங்கப்பூரின் விசுவாசிகள். தங்களின் வளமான பொருளியல் வாழ்வுக்கு உதவும் சிங்கப்பூரை வாழ்த்துவதும், வருணிப்பதும் புதிய குடியேறிகள் படைத்த கவிதைகளில் காணப்படும் பொதுப்போக்கு. உதாரணத்துக்கு 1990-இல் சிங்கப்பூரில் குடியேறிய பிச்சினிக்காடு இளங்கோ தொடங்கி மிக அண்மையில் குடியேறிய கவிமாலைக் கவிஞர்கள் பலரின் கவிதைகளைக் கூறலாம். ‘கூடி வாழ்த்தும் குயில்கள்’ என்னும் பெயரில் வெளியான தேசிய தினக் கவிதைகளின் தொகுப்பினைச் சொல்லலாம். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், சிங்கப்பூரின் 35-ஆம் தேசிய தினத்தை ஒட்டி நடத்திய கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதைகளுள் ஓரிருவரைத் தவிர எஞ்சியோர் அனைவருமே சிங்கப்பூரின் நிரந்தரவாசிகள் என்பது கவனிக்கத்தக்கது. ந.வீ.விசயபாரதி ‘திரவியதேசம்’ எனச் சிங்கப்பூரின் பெருமையை நன்றியுணர்வோடு நூலுக்குத் தலைப்பாக்கி மகிழ்கிறார். ந.வீ.சத்தியமூர்த்தி ‘தூரத்து மின்னல்’ என்னும் கவிதைத் தொகுப்பில் ‘சிங்கப்பூரின் பெருமை’ ‘சமநீதி பூமி சிங்கப்பூர்’, ‘சிங்கப்பூரின் வளர்ச்சி’ ஆகிய கவிதைகளில் தன் நன்றியுணர்வைப் புலப்படுத்துகிறார். மலர்விழி இளங்கோவன் ‘ஒரு பெண்ணாகச்’ சிங்கப்பூரை உருவகித்து அதன் வளர்ச்சியைக் கண்டு பிரமிக்கிறார். இன்று இவர் இந்தியாவிற்குத் திரும்பிவிட்டார். இவரைப் போன்று பலரும் இங்கு இருக்கும் வரை சிங்கப்பூரின் துதிபாடுவர். இது குடியேறிகளின் இயல்பே!

‘அடையாளம்’ என்பதனைக் குடியுரிமை சார்ந்த விஷயமாகவே பலரும் கருதுகிறார்கள். சிங்கப்பூர்க் கவிதையின் தனித்துவ அடையாளம் என்பது குடியுரிமை பற்றியது மட்டுமன்று; அதற்கு அப்பாலும் சிங்கப்பூரியர் என்ற உணர்வோடு, சிங்கப்பூரின் நுணுக்கமான சமூகப் பிரச்சனைகளை உள்வாங்கிக் கொண்டு ஆத்மார்த்தமாப் பாடுவதாகும். இது கவிதைக்கு மட்டுமின்றி எல்லாப் படைப்பிலக்கியங்களுக்கும் பொருந்துவதாகும். அண்மையில் ‘சொல்வனம்’ என்னும் இணைய இதழில் மலேசியாவில் பிறந்து வளர்ந்த ‘அசல்’ மலேசியக் குடிமகனான கே.பாலமுருகன் என்னும் இளம் எழுத்தாளர் ‘அடையாளச் சிக்கல்’ என்னும் பிரச்சனையை ‘ஜெயந்தி சங்கர் (நிரந்தரவாசி- சிங்கப்பூர்’ பற்றிய பேட்டியில் பூதாகரமான பிரச்சனை போன்று சித்தரிந்திருந்தார். சிங்கப்பூரின் கவிதைச் சூழல் என்னும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரை (மௌனம் கவிதை இதழ், மலேசியா) வாசித்து விட்டு அக்கட்டுரையில் நான் குறிப்பிட்ட எனது கருத்துகளை அப்பேட்டியில் தனது கருத்துகளாக ‘வாந்தி’ எடுத்திருந்தார். அவர் ஜெயந்திசங்கரைப் புகழ்வதற்காக எடுத்துக் கொண்ட ‘அடையாளச் சிக்கல்’ என்னும் கருவி அவருடைய இயல்பை எனக்கு உணர்த்தியது. மலேசியப் பின்னணியோடு எழுதும் கே.பாலமுருகன் சுயசிந்தனை இல்லாதவர் என்பதும், மற்றவர் கருத்துகளை அப்படியே தனதாக்கிக் கூறும் கருத்துத் திருடர் என்பதும் எனக்கு வெட்ட வெளிச்சமாயின. இவருடைய படைப்புகளில் வெளிப்படும் ‘மலேசியர்’ என்ற உணர்வும், ‘மலேசியப் பின்னணியும்’ போல இவருடைய நண்பர் குழாத்தைச் சேர்ந்த சிங்கப்பூரில் வாழும் பாண்டித்துரை (நீதிப்பாண்டி), ஜெயந்திசங்கர் முதலியவர்களின் படைப்புகளில் சிங்கப்பூர் பின்னணி இழையோடுகிறதா? என ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். புகழ் பெறுவதற்குரிய கருவியன்று சிங்கப்பூரிய அடையாளம். அது முன்னர்க் குறிப்பிட்டபடி உயிரோடும், உணர்வோடும் (ஏன், ஆத்மார்த்தமானதுங்கூட) ஊடாடும் தேசிய உணர்வு. இதுவே சிங்கப்பூர்ப் படைப்பினைத் தனித்துவம் பெற்றதாகக் காட்டும். கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவின், ‘வியர்வைத் தாவரங்கள்’ என்னும் நூல் வெளியீட்டின் போது சிறப்புரையாற்றிய கவிஞர் வைரமுத்து பிச்சினிக் காடு இளங்கோவிற்கு விடுத்த வேண்டுகோளை இங்குச் சுட்டுவது பொருந்தும். தமிழகப் பின்னணியில் கவிதை பாடுவதை விட்டுவிட்டுச் சிங்கப்பூர்ப் பின்னணியில் கவிதைகள் படைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனைக் கவிமாலை, கவிச்சோலைக் கவிஞர்கள் நினைவில் நிறுத்த வேண்டும். ஆயின், இ•து அவ்வளவு எளிதானதன்று. இ•து இரசவாதம் போன்றது.

‘தூரத்து மின்னல்’ என்னும் கவிதைத் தொகுப்புக்கு அணிந்துரை வழங்கியுள்ள புதுமைத் தேனீ மா.அன்பழகன்,

“வார்த்தைப் பின்னலில்
சிலந்தி வலையாக
நம்மைச் சிக்க வைத்து விடுகிறார்”

எனப் பாராட்டுமுகமாக எழுதியுள்ளார். ஆயின், இவ்வரிகள் என்னுள் மாற்றுச் சிந்தனையைத் தோற்றுவித்தன. சொற்களை வலிந்து தேடி கவிதை செய்வது, பாடுபொருள் விவரிப்பு, உணர்ச்சியற்ற வெறும் சொல்விளையாட்டுகள் கொண்டு அமைவது எனச் செயற்கையாகச் சிலந்தி வலையாகப் பின்னப்பட்டவைதான் ந.வீ.சத்தியமூர்த்தியின் கவிதைகள். இவருடைய யாப்புப்புலமையில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. இவர் ந.வீ.விசயபாரதி, பிச்சினிக்காடு இளங்கோ போல யாப்பிலக்கணப் புலமை உடையவர். அதனாலோ என்னவோ செய்நேர்த்தி இல்லாமல் கவிதைகள் செய்திருக்கிறார். இவர் ‘தூசுப் பிரச்சனை’ பற்றி ‘ஐம்பது ஆண்டுகள் ஐம்பது கவிதைகள்’ என்னும் தொகுப்பில் கவிதை எழுதியிருந்தார். அத்தொகுப்பில் உள்ள, 50 ஆண்டுகால வாழ்க்கையினைப் பிரதிபலிக்கும் பிற மொழிக் கவிதைகள் அமைய, தமிழில் ஓரிரு கவிதைகள் தவிர எஞ்சியவை சிங்கப்பூர் வாழ்வை ‘அச்சு அசலாகக்’ காட்டியுள்ளனவா என்பது சந்தேகமே! தூசுப் பிரச்சனை சிங்கப்பூருக்கு மட்டும் உரியதன்று. அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேசியா போன்றவற்றுக்கும் உரிய பிரச்சனைதானே? மேலும், ‘தூசு’ என்னும் சொல்லின் இரு வேறு பொருள்படப் பாடியுள்ளார் ந.வீ.சத்தியமூர்த்தி.

ந.வீ.விசயபாரதி, பிச்சினிக்காடு இளங்கோ ஆகியோரும் சொற்களைக் கொண்டே விளையாடுகிறார்கள். எடுத்துக் காட்டாகக் கீழே உள்ள கவிதைகளைக் காண்க:

“கணினி எனும்
காரிகை
ஒரு மேனகை” (இரவின் நரை, 21-30)

“புண்படுத்தியைதப்
பயன்படுத்தியதாய்ப்
பக்குவப்பட்டேன்
பண்பாடு கற்றேன் (மேலது, 4-13)

கவி ‘தை’ வாழ்த்து (முதல் ஓசை, ப-108) எனப் பல கவிதைகளை ஓசைக்கு முக்கியத்துவம் தந்து சொற்களைக் கொண்டு கவிதை செய்திருக்கிறார். இவரது மொழிப்பற்றுப் பாராட்டுக்குரியது. இவருடைய கற்பனையின் சாட்சியாய்,

“என்
குறுகிய, நீண்ட காலக்
கடனுக்கெல்லாம்
வட்டி கேட்காத
வள்ளல் நீ”

“எனக்குக்
கடவுச் சீட்டும்
பயணச் சீட்டும் நீதான்” (இரவின் நரை ப-11)

என “மொழி” என்னும் கவிதை திகழ்கிறது. இவர் எட்டுக் கவிதை நூல்களை எழுதியிருந்தாலும் இவர் ‘கவிஞன்’ என்னும் அந்தஸ்தை எட்டியது “நானும் நானும்” என்னும் நூல் வழியே என்பது என் கருத்து. இயற்கையின்பால் ஈடில்லாக் காதலும் தாவரங்கள்பால் தணியாத காதலும் கொண்ட இவர் மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீனக்கவிதை எனும் தளங்களில் இயங்குகிறார். கவிதை பற்றி எழுதும் இவர், ‘எது கவிதை’ என்னும் தலைப்பில்

“கவிதையெனில்- அது
கவிதையெனில்- புதுக்
கருத்தைத் தாங்கி வரவேண்டும

கவிதையெனில்- வெல்லக்
கவிதையெனில்- வெல்லும்
சிந்தனை அழகைத் தர வேண்டும்”

(முதல் ஓசை , ப-25)

என ஊருக்கு உபதேசம் செய்யும் இவரது கவிதைத் தொகுப்புகளில் ‘நானும் நானும் ’ என்னும் தொகுப்பு இவரது சிந்தனை வீச்சும், அனுபவப் பரப்பும் வெளிப்படும் வித்தியாசமான தொகுப்பாக அமைகிறது. இவரது பரிணாம வளர்ச்சியைக் காட்டுவதோடு இவரது கவிதைப்பரப்பின் பரிமாணங்களையும் வெளிக்கொணர்கிறது. ‘நவீனம்’ என்னும் தலைப்பில் எழுதப்பட்ட இவரது கவிதை வளரத் துடிக்கும் கவிஞர்களுக்கு ஏற்ற ஆலோசனையாகும்.

சிங்கப்பூர் வாழ்க்கையின் புறத்தோற்றங்களைப் பாடுவதே புதிய குடியேறிகளாக உள்ள கவிஞர்களின் பொருண்மையாய் அமைகிறது. இதுவும் இவர்களிடையே நிலவும் பொதுப்போக்கு. இந்நிலைக்குக் காரணம் என்ன என ஆராய்ந்தால் நமக்கு விடையாகக் கிடைப்பது இவர்களின் மனோபாவமே முக்கியக் காரணம் என்பதுதான். பிச்சினிக்காடு இளங்கோ சிங்கப்பூரை வருணிக்கையில் ‘விமானங்களின் வேடந்தாங்கல்’ (இரவின் நரை, ப-104) எனப் பாடுகிறார். ஆனால், இக்கவிஞர்களோ சிங்கப்பூரில் சில காலம் வாழும் வேடந்தாங்கல் பறவைகள் என்றே எனக்குத் தோன்றுகிறது. வளமான வாழ்வுக்காக வந்தவர்கள் தேவையான பணத்தைச் சேர்த்துக் கொண்டு மீண்டும் தாயகம் திரும்புவர். (சான்றாகச் சுப்ரமணியம் ரமேஷ், ஓ.கே.மகேஸ்வரி முதலானோரைக் கூறலாம். இவர்கள் கவிமாலையைச் சேர்ந்தவர்கள் அல்லர்.)

இவர்கள் முனைவர் அரசு குறிப்பிடுவது போலத் “தப்பிக்கும் மனநிலையோர் என்பதால் நமக்கேன் இந்த வம்பு என ஒதுங்கிக் கொள்வர்” (முன்னுரை, சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்- ஆழமும் அகலமும்).

கருணாகரசுவின் கவிதைகளில் ஓரளவு கவித்துவக் கூறுகள் இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக மழையை வருணிக்கும் அவர்,

“உழுதவன் கண்ணீரை
அழதே துடைக்கிறது
வானம்” (தேடலைச் சுவாசி ப-73)

எனவும், பாரதி என்னும் மாபெருங் கவிஞனை,
“அன்று இருண்டு கிடந்த
பெண்ணியத்திற்காக
எண்ணெயே இல்லாமல்
எரிந்த விளக்கு”

என உருவகப்படுத்தியும் பாடியுள்ளார். இவருடைய கவிதைகளில் உணர்வுப் பெருக்கின் எதிரொலியைச் செவிமடுக்கலாம். ‘ஊருவிட்டு ஊருவந்து’ என்னும் கவிதையில் நாடு விட்டு நாடு வந்து நலம் சிறிதும் அடையாமல் உழைக்கும் ஊழியர்களின் ஏக்கப் பெருமூச்சும், அவலக்குரலும் ஒலிக்கின்றன. “என் மடியில் பொறந்ததுக்கு” என்னும் கவிதை கிராமியப் பின்னணியில் (ஒப்பாரிப் பாடல் போல்) முதியோர் கொடுமையைப் பாடுகிறது. இவர் குறுங்கவிதைகளில் பெருவிருப்புடையவர் என்பதைப் பல ‘ஹைக்கூ’ கவிதைகள் வாயிலாக உணரலாம். இன்னும் நிறைய கவிதைகள் படிக்கப் படிக்க இவரது கவிமனம் செழுமைப்பட வாய்ப்புள்ளது.

பாண்டித்துரை உரைநடையில் தெளிவாக எழுதுவதில்லை. இவரது குழப்பம் படிப்பவர்களையும் குழப்பும். தொடக்கத்தில் அளவுக்கதிகமான பிழைகளோடு இணையப் பக்கங்களில் எழுதி வந்துள்ளார். கவிமாலை இலக்கண வகுப்பு இவருக்குத் தமிழை ஓரளவு பிழையின்றி எழுத உதவியுள்ளது. ஆனாலும், இவரிடம் சிந்தனைத் தெளிவு இல்லாத காரணத்தால் கவிதைகளில் இருண்மை நிலவுகிறது. இதற்குச் சான்றாகத் தலைப்பில்லாக் கவிதைகளைக் கூறலாம்.

“தலைப்பினைத் தேடுங்கள்
கிடைக்கக்கூடும்
உங்களிடமிருந்தும்” (பிரம்மா, ப-30)

இவரது கவிதைகளில் முரண்பாடுகள் உள்ளன. ஒரு கவிதை,
“மனிதர்களை
எனக்குப் பிடிப்பதில்லை
அப்பன்னா நீ யாரு
நானா
ஆறு அறிவு மிருகம்
தேடிக் கொண்டிருக்கிறேன்” (பிரம்மா, ப-32)

என மனிதனை வெறுக்கிறது.

ஆனால், இவரின் மற்றொரு கவிதையோ,

“நான்
உறவுகளை
மனிதமாகவே பார்க்கிறேன்
அவர்களுக்குக் கிடைத்த
கௌரவமே உறவு” (பிரம்மா, ப-33)

என உறவுகளை மதிக்கிறது. ஏன் இந்த முரண்பாடு? விக்ரமாதித்யன் கூறுவது போலத் (கவிதை இரசனை, ப-25) தனிமனிதனின் மன உளைச்சல்களே கவிதை என்னும் பெயரில் வெளியாகின்றனவோ?

பாலு மணிமாறன் ‘அலையில் பார்த்த முகம்’ என்னும் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். அவரது கவிதைகளில் பெரும்பாலானவை உரைநடையை உடைத்துப் போட்டு எழுதப்பட்டவை. வறட்டுக் கவிதைகளாகவே உள்ளன. ‘பார்ப்பதற்கு மட்டுமான டைரிகள்’ (அலையில் பார்த்த முகம், ப-34) என்னும் கவிதை எழுதமுடியவில்லையே; ஒரு நாள் முழுவதும் ஓயாத வேலையாக உள்ளதே என்னும் ஏக்கத்தைப் புலப்படுத்துகிறது. இவர் எழுத்துத்துறையில் ஆர்வம் மிக்கவர் என்பதாலே இக்கவிதை இவரது உணர்வுப்பூர்வமான வெளியீடு எனலாம். ‘அலையில் பார்த்த முகத்தில்’ முரண் அமைந்திருக்கிறது.

“துவைத்து மிளிர்கிறது துணி
துவைத்த ராணியோ
தோப்பில் அழுக்காகிறாள்”

‘இடைவெளி என்பதே இனிய விஷயம்’ (ப 30-31) என்னும் இவரது எழுத்தில் கற்பனையும் அவ்வப்போது தலைகாட்டுகிறது. சான்றாகக் ‘கதவின் சில ஜன்னல்கள்’ என்னும் கவிதையில் காதலியின் நினைவு அடிக்கடி வருவதை (ஒரு பெண் பயணியின் நினைவு)

“சில நிமிடங்களுக்கு ஒருமுறை
வந்து போகும்
எம்.ஆர்.டி.ரயிலென
வந்து போகும் உன் நினைவுகள்” (ப-39)

எனக் கற்பனையாக - சாதாரண நிகழ்வைக் காட்டும் இயல்புக் கற்பனையாக எழுதுகிறார்.

இவரது கவிதைகளும் சிங்கப்பூரின் புறக்காட்சிகளை வருணிக்கத் தவறுவதிலில்லை. இதற்குச் சான்றாக ‘மத்தியப் பறவைகள்’ என்னும் கவிதை திகழ்கிறது. ‘நடை பழகும் காலை’ என்னும் இக்கவிதையிலும் சிங்கப்பூர்ப் பதிவு இடம்பெறுகிறது. இவற்றின் ஊடாகப் பாலு மணிமாறனின் மனிதநேய உணர்வும் வெளிப்படுகிறது. பரிசுச்சீட்டுகளை நம்புபவர்கள் பதவி ஆசை கொண்ட மனிதர்கள் எனப் பலருக்கும் (பக்-48,49) மத்தியில் வாழ்க்கையை நகர்த்த வேண்டியுள்ளதை ‘நகர்வுகள்’ கவிதையில் காட்டுகிறார்.

சுருங்கச் சொன்னால் பாலுமணிமாறனின் “அவனது கவிதைகள்” என்னும் தலைப்பில் அவர் எழுதியிருப்பது போன்று எப்படியோ தொடங்கி எப்படியோ முடிகின்றன. ‘குழந்தை மாதிரி நிர்வாணமாய்ச் சிரிக்கும்’ வெள்ளைக் கவிதைகளாக உள்ளன. சில கவிதைகள் ‘சோம்பேறிக் கவிதைகளாய்’, பெண்பற்றிய- காதலி பற்றிய ‘காமுகிக் கவிதைகளாய்’ அமைகின்றன. நவீனக் கவிதை எழுதும் பாலு மணிமாறன் போன்றோர் கையாளும் சொற்பிரயோகங்களைக் கவனித்தால் இவர்கள் தமிழிலக்கணம் தெரியாதவர்கள் என்பதும், நவீனக்கர்த்தாக்கள் என்னும் ‘ஹோதாவில்’ புதிய, மயக்கந்தரும் சொல்லாட்சிகளை உருவாக்கும் சிருஷ்டிகர்த்தாக்களாகவும் உள்ளனர். எடுத்துக்காட்டாகக் ‘காமுகன்’ என்னும் ஆண்பாற்சொல்லுக்கு இணையாகக் ‘காமுகி’ என்னும் சொல்லைப் பெண்பாற்சொல்லாக உருவாக்குகிறார். இது போன்று ‘கவிதாயினி’ எனக் கவிதை எழுதும் பெண்ணையும், ‘எழுத்தாளினி’ என்று பெண் எழுத்தாளரையும் ‘நவீனகவிஞர்கள்’ அழைக்கின்றனர்.

சிங்கப்பூரின் நிரந்தரவாசிகள் அல்லது புதிய குடியேறிகள் அனைவருமே சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் பற்றிய அக்கறையோ அல்லது அதைப்பற்றிய உயர்ந்த எண்ணங்களோ இல்லாதவர்கள். இவர்கள் தமிழகத்திலிருந்து வந்திருப்பதால் தமிழக இலக்கியம் பற்றிய சிந்தனையால் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள். தமிழக இலக்கியச் சூழலில் கடைநிலை எழுத்தாளர் என்ற தகுதிகூட இவர்களுக்குக் கிடைப்பது கடினமே. இவர்களின் இலக்கிய உணர்வு எப்படிப்பட்டது? ‘நுணலும் தன் வாயால் கெடுவது போல’ பாலுமணிமாறனின் “இங்கு இப்படியாக இலக்கியம்” என்னும் கவிதை இவர்களின் இலக்கிய உணர்வைக் கேலி செய்கிறது.

“எங்கே போய்விடும் இலக்கியம்
பேசலாமே பின்னொரு நாள்”

பாலுமணிமாறனும் இவ்விலக்கியக் குடும்பத்தில் ஒருவர்தான்!

சுருங்கக்கூறின், பாலுமணிமாறனும் கவிதை எழுதிப் பார்க்கிறார். கவித்துவம் என்றாவது ஒரு நாள் கைக்கூடும் என நம்புவோம்.

ரமேஷ் சுப்பிரமணியன் ‘சித்திரம் கரையும் வெளி’ என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர். தமிழகத்திலிருந்து வந்து சிங்கையில் சில ஆண்டுகள் வாழ்ந்து மீண்டும் தமிழகம் சென்றுவிட்டார். தீவிர வாசகரான இவர் ஓவியம், சிறுகதை, நிழற்படம் எனப் பல வழிகளிலும் தன் ஆர்வத்தை வெளிப்படுத்துபவர்.

இவர் இணையத்தளங்களிலும் பல படைப்புகளை வெளியிட்டுள்ளார். காலச்சுவடு இதழில் இவர் லதாவின் ‘பாம்புக்காட்டில் ஒரு தாழை’ என்னும் நூல் பற்றி எழுதும்போது சிங்கைத் தமிழ்ச் சமுதாயத்தின் ஆன்மசாரம் பற்றி சிலாகிக்கிறார்.அவர்

“பல இன சமூகங்கள் வாழும் சிங்கையில் தன் இடம் என்பதற்கான தேடலும், அதில் தன் பலங்களாக எவற்றைக் கொள்ள வேண்டும், எவற்றைத் தள்ள வேண்டும் என்பதில், தன் முரண்பாடுகள் இயைய தன்னை இணக்கமாகப் பொருத்திக் கொள்ள முயலும் முயற்சியிலுமாக அதன் ஆன்மா இருக்கிறது”

என எழுதுகிறார். சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் ஆன்மா சிங்கைப் படைப்புகளில் வெளிப்பட வேண்டும் என்னும் கருத்து அவருடைய கட்டுரையில் தொனிக்கிறது. மற்றவர்களின் கவிதை பற்றிக் கருத்துரைக்கும் இவர் சிங்கப்பூரில் வாழ்ந்த காலத்தில்தான் தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அந்நூலில் சிங்கப்பூர்ப் பின்னணி அமையவில்லை. இவரது கவிதைத் தொகுப்பின் ஆன்மசாரமும் வேறாக அமைந்துள்ளது. இவர் இருமுறை தங்கமுனை விருதுப்போட்டியில் கவிதைக்கெனப் பரிசுகள் பெற்றிருந்தாலும் (2003- ஆறுதல் பரிசு; 2005- மூன்றாம் பரிசு) சிங்கப்பூர்ப் பின்னணியில் கவிதைகள் படைத்ததற்குச் சான்றுகள் இல.தமிழகத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர்களைப் புத்தகச் சந்தையில் (புத்தகக் கண்காட்சியில்) சந்தித்து அவர்களோடு நிழற்படம் எடுத்துக் கொண்டு அதனை u tube-இல் வெளியிட்டு உலக அளவில் பிரபலமாகும் முயற்சியில் ரமேஷ் சுப்ரமணியம் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிகிறது. மேலும், ஜெயந்தி சங்கரும் ஒரே பேட்டியை, ஒரே கட்டுரையைப் பல இணையத் தளங்களிலும் வெளியிட்டு உலக அளவில் பிரபலமாவதற்காகப் பல தளங்களிலும் புகைப்படங்களைப் பிரசுரிக்கச் செய்து ‘பிரமப் பிரயத்தனம்’ செய்து கொண்டிருக்கிறார். இவற்றையெல்லாம் நோக்கச் சிங்கப்பூரில் வாழ்ந்தவர்கள் அல்லது வாழ்ந்து வருபவர்கள் என்ற அடையாளம் இவர்கள் புகழடைவதற்கு ஒரு சாதனம். இவர்களைப் போன்று பல புதிய குடியேறிகளுக்கும் சிங்கப்பூர் புகழடைய ஒரு கருவியாக உள்ளது. புதிய குடியேறிகளிடம் காணப்படும் பொது இயல்பு இ•து என்பதனால் இவர்களின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள கவிதை எழுதுவது, கதை எழுதுவது என்பன கருவியாக அமைகின்றன.

தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தமிழ் ஆசிரியர்களும் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர். கோவி.மாசிலாமணியின் ‘மௌன முழக்கம், ‘மனித நிறங்கள்’ ஆகியவை மரபுக்கவிதை நூல்கள். தமிழகப் பின்னணியில் பாடப்பட்டவை. கவிஞர் அனுபமா என்னும் புனைபெயரில் கவிதை எழுதும் தி.சேதுராமலிங்கம் ‘கருணை வள்ளல் கலைஞர்’ என்னும் நூலை வெளியிட்டுள்ளார். இதுவும் தமிழக அரசியல் தலைவரைப் பாடுவதாகும். ‘வட்ட நிலா’ என்னும் சிறுவர் கவிதைத் தொகுப்பு இரா. சுப்பிரமணியன் என்னும் ஆசிரியரால் வெளியிடப்பட்டது.

நவீனகவிதை எழுதும் புதிய குடியேறிகளுள் ஒரு சிலர் மரபுக்கவிதை எழுதுவதிலும் வல்லவர்கள். முன்னர்க் குறிப்பிட்டப்படி ந.வீ.சத்தியமூர்த்தி, ந.வீ.விசயபாரதி, கருணாகரசு, பிச்சினிக்காடு இளங்கோ போன்றோரைக் கூறலாம். சிங்கைத் தமிழ்க்கிறுக்கன் என்பவர் ‘செந்தில்வேல் சதகம்’ என்னும் நூலைப் பாடியுள்ளார். இது தமிழகப் பின்னணி கொண்டது. இந்நூலின் ஆசிரியர் தமிழகத்திலிருந்து வந்தவர். ஆயின், அவர் பெயருக்கு முன் ‘சிங்கை’ என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டிருப்பது முரணாக உள்ளது. சதகம் என்பது சிற்றிலக்கிய வகை. அறம் வலியுறுத்தும் நோக்கில் பாடப்படுவது. நவீன யுகத்திலும், நவீன கவிதை எழுதுவோர் மிகுதியாகும் சூழலிலும் பழைமையின்பால் தமிழ்க்கிறுக்கனின் கவனம் திரும்பியிருப்பதும் ஒரு முரண்தான்.

‘அகக்கண் திறப்போம்’ என்னும் நூலை எழுதிய சித.அருணாசலம் உரைநடையை உடைத்துப் போட்டுக் கவிதை என்ற பெயரில் எழுதியுள்ளார். இவர் கவிதை என்றால் என்ன? கவித்துவக் கூறுகள் யாவை? உரைநடைக்கும் கவிதைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை? என்பது பற்றி நிறையவே தெரிந்துகொள்ள வேண்டும். புத்தகம்/ நூல் வெளியிட அவருக்கு உரிமை இருக்கிறது என்றாலும் தன்னுடைய எழுத்துகளைக் ‘கவிதை’ என இவர் மயங்கி நூல் வெளியிட்டிருப்பது கவிதையை அவமதிப்பது போல உள்ளது. பிறதுறை சார்ந்த இவர் தமிழை நேசிப்பதோடு கவிதையைச் சுவாசிக்கக் கற்றுக் கொள்ளவும் வேண்டும்.

சிங்கை, மலேசிய நாளிதழ்களின் வாயிலாகவும் இணையப் பக்கங்கள் வாயிலாகவும் கவிஞரான திரு.ரஜீத் ‘பன்னீர்த்துளிகள்’ என்னும் கவிதை நூலை வெளியிட்டுள்ளார். இவர் தங்கமுனை விருதுப்போட்டியில் (2007) பரிசு பெற்றவர். இவருடைய கவிதைகள் கவிச்சோலை, கவிமாலை போன்ற அமைப்புகள் நடத்திய நிகழ்ச்சிகளில் வாசிக்கப்பட்டவை; பரிசும் பெற்றவை. இவருடைய கவிதைகள் செய்தித்தாளில் வெளிவந்த செய்திகள், சிங்கப்பூரில் நடைபெறும் நிகழ்வுகள் என்பன போன்றவற்றைக் கருப்பொருளாகக் கொண்டவை; தமிழகப் பின்னணி கொண்டவை. மனிதநேய உணர்வு இவரிடம் காணப்பட்டாலும் இவரது கவிதைகள் உரைநடையின் செல்வாக்குமிக்கவை; இவற்றை உரைவீச்சு என்று வருணிப்பதிலும் தவறில்லை. ஆகவே, இவருடைய கவிதைகளை வாசிக்கும்போது உரைநடையை வாசிக்கும் உணர்வே ஏற்படுகிறது. கவித்துவக் கூறுகள் காணாமற் போனமையால் கவிதை ஒன்று கூட நெஞ்சில் நிற்கவில்லை. அறிவியில் துறையில் கல்வி கற்ற இவர் தமிழ் மீது கொண்டுள்ள பற்றுப் பாராட்டுக்குரியது. எனவே, இவர் புகழ் அடைவதற்கும், தமிழ்ச்சமூகத்தில் அந்தஸ்து பெறுவதற்கும் தமிழும், தமிழ்க்கவிதையும் கைக்கொடுக்கும் கருவிகள் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமே இல்லை.

மாதங்கி, மலர்விழி இளங்கோவன், இன்பா என்றழைக்கப்படும் பேரின்பம் எனப் பலர் கவிதைத் துறையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கவிமாலை என்னும் அமைப்பால் கவிஞர்களாக உருவாக்கப்பட்டவர்கள். இயற்கையில் தோன்றும் கவிதை உணர்வுக்கும், செயற்கையாக உருவாக்கப்படும் கவிதை உணர்வுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. புதிய குடியேறிகளுள் பலரும் உருவாக்கப்பட்ட கவிஞர்களே. ஆகவே கவிதையைச் செய்ய முடிந்திருக்கிறதே தவிர கவிதையை வடிக்க இயலவில்லை. மலர்விழி, மாதங்கி, இன்பா போன்றோரும் இவ்வகைப்பாட்டினுள் அடங்குவர். இவர்கள் பல வகையான போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளை வெல்வது வழக்கம்.

‘கருவறைப் பூக்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பை மலர்விழி இளங்கோவன் 2008-இல் வெளியிட்டார். சிங்கப்பூரில் சில ஆண்டுகள் வாழ்ந்த பின்னர், தமிழகத்திற்குத் திரும்பிவிட்டார் மலர்விழி. தனது அனுபவப் பரப்புக்கு எட்டியவற்றை எளிமையான மொழியில் கவிதைகளாக்கியுள்ளார் மலர்விழி. புதுமைத்தேனீ, உதுமான்கனி எனத் தனக்கு வேண்டப்பட்டவர்களையும் கவிதையில் வாழவைத்துள்ளார். தமிழகத்தை விட்டு வந்து இந்நாட்டில் வாழ்வதன் மூலம் தங்களை அன்னியமானவர்களாக எண்ணி வருந்தும் வருத்தம், புலம்பெயர் வாழ்வின் வேதனைகள் புதிய குடியேறிகளின் கவிதைகளில் காணப்படுவது ஒரு பொதுத்தன்மை என்றே கூறவேண்டும். பலர் அன்னியமாதலை, அதன் இரணங்களைக் கவிதைகளில் புலம்பித் தீர்ப்பர். சிலர் ஓரிரு கவிதைகளில் சொல்லி முடிப்பர். ஆக, எல்லாருடைய கவிதைகளின் பொருண்மையும் நாடுவிட்டு நாடு வந்து வாழ்தலைத் தவறாமல் பேசும். மலர்விழியின் கவிதை ஒன்று,

“நாற்று முதிர்ந்து
நாளாகி
நாடுமாற்றி நடவு செய்தாலும்
வேற்று மண் பதிந்து
விருப்புடனே வேர்பிடித்து
வியத்தகு மகசூல் தரும்
அவசிய வாழ்வில்
ஆணிவேர் தொலைத்த
அதிசய ரகம் நாங்கள்”

எனப் பேசுகிறது. உண்மையில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த மக்களின் அவலக்குரல் அவர்களின் கவிதைகளில் உரக்க ஒலிப்பது போல் புதிய குடியேறிகளின் வாழ்விலோ, பொருளியல் நிலையிலோ (வேலை அனுமதிச்சீட்டுப் பெற்றோர் தவிர) துன்பம் இல்லாததாலும், ஓரளவு வளமான வாழ்க்கையை இவர்களுக்கு வாய்த்திருப்பதாலும் புலம்பெயர்தலின் வேதனைகளை உணர்ந்து பாடமுடிவதில்லை. மேலும், மலர்விழி பாடியுள்ள புலம்பெயர்தல் பெண்களின் புகுந்த வீட்டு வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கவும் இடந்தருகிறது. பிறந்த வீடு விட்டுப் புகுந்த வீடு செல்லும் பெண்களின் வாழ்க்கை ‘சுயம்’ (ஆணிவேர்) இழப்பதாகவும் அமைகிறது அல்லவா?

மாதங்கியின் கவிதைத்தொகுப்பு “நாளை பிறந்து இன்று வந்தவள்”. தலைப்புப் புதுமையானது; அதே வேளையில் இலக்கிணநோக்கில் பார்க்கும்போது ‘காலவழு’ என்று மரபிலக்கியவாதிகள் குறைகூற இடந்தருவது. நவீனக்கவிதை எழுதுபவர்கள் இலக்கணவேர்களை உதறியவர்கள்; இலக்கணம் என்னும் வேரும் விழுதும் வேண்டாம் எனக் கருதுபவர்கள். ஆகவே புதுமை, நவீனம் என்னும் பெயரால் இப்படித் தலைப்பிடுவதோடு கவிதையும் எழுதுவர். மாதங்கி தன் கவிதைத்தொகுப்புக்கு ‘மரபுடைத்தல்’ என்னும் பின்நவீனத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் ‘நாளை பிறந்து இன்று வந்தவள்’ எனப் பெயர் சூட்டியுள்ளார்.

கவிதை எழுதுவோர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் உண்டு. சிலர் புகழுக்கும், வேறுசிலர் பணத்துக்கும், இன்னும் சிலர் விளம்பரப்படுத்திக் கொள்ளவும் எனப் பல நோக்கங்களுக்காகவும் காரணங்களுக்காகவும் கவிதை எழுதுவர். புதிய குடியேறிகளில், தான் பார்த்த வாழ்க்கையைக் கவிதையின் கருப்பொருளாக்குபவர் மாதங்கி. புரியவில்லை; நமக்குச் சாத்தியமாவது, நீ பெரியவனானால்? வேறுபாடு, சஞ்சாரிபாவம், கரைந்ததும் கரையாததும், திகட்டவில்லை, பத்து மணியும் ஆறு மணியும், அவர்கள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்” எனப் பல கவிதைகளில் மாதங்கியின் தாய்மை அனுபவமே விரிகிறது. புதுக்கவிதையில் வடிவச் சோதனை செய்ய ‘விழுந்து விழுந்து’ என்னும் சொற்களை ஒவ்வோர் எழுத்தாகக் கீழே விழுவது போல எழுதும் வழக்கத்தை இவரும் பின்பற்றுகிறார் (பக் 44).

குழந்தைமைப் பருவத்தை நேசிக்கும் மாதங்கி சமீபத்தில் ‘சொல்வனம்’ என்னும் இணைய இதழில் (பிப்ரவரி 14, 2010) ‘கதை சொல்ல வரும் குழந்தை’ என்ற தலைப்பில் கவிதை எழுதியிருந்தார். மேலோட்டமாகப் பார்க்கும்போது குழுந்தை கதை சொல்ல வரும்போது அதனிடம் குறுக்கே எதுவும் பேசாமல் கதையைக் கேள்; அதனை அதன் போக்கில் விட்டுவிடு என்னும் அர்த்தத்தைத் தந்தாலும் அதனை விமர்சனம் செய்யாதே என்னும் தொனியில் எழுதியிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

“நீ இப்போது கதை கேட்பவன்
பத்திரிகை மெய்ப்புப் பார்ப்பவரோ
விடைத்தாள் திருத்தும் ஆசிரியரோ
முதலாளியோ
இல்லை
தவறுகள் உன் கண்ணில்
படப்போவதில்லை
அவை கதைகளின் ஒளியைக்
களவாடுபவை”

இக்கவிதை விமர்சனத்தை விரும்பாதவரின் மனநிலையை எதிரொலிப்பதாக ஆழ்நிலையில் அர்த்தம் தருகிறது. புதிய குடியேறிகள் மட்டுமல்ல; எழுத்தாளர்கள் பலரும் தங்கள் படைப்புகளைப் பற்றிய விமர்சனங்களைத் திறந்த மனத்துடன் ஏற்கும் மனப்பான்மை இல்லாதவர்கள்.

சிங்கப்பூரின் புறவாழ்வைக் காட்டும் கவிதைகளாகத் “தேக்கா வெட்ட வெளியில், தீவு விரைவுச் சாலையில், சிராங்கூன் சாலை வீரமாகாளியம்மன் கோயில், மாதாமகள், தீபாராயா” போன்றவற்றைக் கூறலாம். மாதங்கி இந்தியாவில் வாழ்ந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் எழுதியுள்ளார். அறிவியல் செய்திகளைக் கவிதையாக்கும் போக்கும் மாதங்கியிடம் காணப்படுகிறது. இவருடைய கவிதைகள் ஒரு சிலவற்றில் இருண்மையும் தலைகாட்டும் (வேறொரு வெயில் நாளில் என்னும் கவிதையின் முடிவுப் பகுதி). மாதங்கியின் கவிதைகளில் செய்நேர்த்தித்திறன் இல்லை (craft). இவருடைய கவிதைகள் அனுபவங்களின் விவரிப்பே.

புதுமைத்தேனீ மா. அன்பழகன் திரைப்படத்துறை, கவிதைத்துறை, வியாபாரத்துறை எனப் பல துறைகளில் இயங்குபவர். இவர் 90களின் பிற்பகுதியில் சிங்கை வந்தாலும் இவர் வியாபாரத்துறையின் மூலம் சமூக அந்தஸ்தும், செல்வாக்கும் பெற்றவராக மாறினார். இயல்பாகவே தமிழ்மொழிப் பற்று மிக்கவர். இவருடைய இளமைப் பருவத்தில் தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகத் தொடர்பு இவருடைய நாவன்மைக்கும் நல்ல களமாக அமைந்தது. தமிழ்மொழிப்பற்று மிக்கப் பின்னணி தமிழகத்தில் இவரை நூலாசிரியராக அடையாளப்படுத்தியது. சிங்கை வந்த பின்னும் தமிழ் தந்த அடையாளம் இவரைப் ‘புதுமைத்தேனீ’ என வித்தியாசப்படுத்திக் கொள்ள உதவுகிறது. இவர் தன் வாழ்க்கையோடு தொடர்புடைய அனைத்தையும் குறிப்பாகச் சொற்பொழிவுகள், கவியரங்கக் கவிதைகள், வாழ்த்து மற்றும் இரங்கற் கவிதைகள், நிழற்படங்கள், தன் கிராமத்து வாழ்க்கை எனப் பலவற்றையும் நூல்வடிவில் பதிவு செய்துள்ளார். இவர் மரபுக்கவிதை எழுதுவதோடு உரைவீச்சும் எழுதுவார். நாவல், சிறுகதை, கவிதை எனப் பல தளங்களில் இயங்குகிறார். இவர் கவிமாலையின் காப்பாளர்.

புதிய குடியேறிகள் இணையப் பெருவெளியில் கவிதைகள் எழுதுகின்றனர். இவர்களைப் புகழ்ந்து பேசுபவர்கள் சிங்கப்பூரில் கிடைக்கும் பண்டம் அல்லது பொருள்களுக்காகவும், வேறு ஏதேனும் வாய்ப்புகள் சிங்கப்பூரில் கிடைக்குமா என்னும் எதிர்ப்பார்ப்புடனும் புகழ்வதுண்டு. இன்னும் சிலருக்குத் தமிழக அமைப்புகளோடும் தொடர்பு உள்ளது. இத்தொடர்பைப் பயன்படுத்திப் புகழ் பெறுவதோடு விருதும் பெறுகின்றனர். இணையப் புகழில் மயங்கியுள்ள இவர்கள் தம்மை மிக உயர்வாக எண்ணிப் பெருமிதம் அடைவதோடு ஒரு வித மாயையில் மிதக்கின்றனர் என்று கூறுவது தவறாகாது. மேலும், இவர்களில் சிலர் தமிழ்நாட்டு அங்கீகாரத்தைப் பெறுவதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் தங்கள் சொந்த பந்தங்களையும், உற்றார் உறவினர்களையும் கூட்டி நூல் வெளியிட்டுப் பணம் குவிக்கின்றனர். இன்னும் சிலர் தங்கள் நூல்கள் தேசிய நூலகத்தில் இடம்பெறவேண்டும் என்னும் நோக்குடன் மட்டும் நூல்களை விற்கின்றனர். நூல் வெளியீடு நடத்தப்படாததால் இவர்களின் நூல்களைப் பற்றிய விவரம் தெரிவதில்லை.

புதிய குடியேறிகளில் தமிழாசிரியர்களாகப் பணிபுரிவோர் வெளியிடும் நூல்கள் கல்வியமைச்சுப்பணியின் ஒரு கூறாக (Performance bonus) எனப்படும் பணி ஊக்குவிப்புத் தொகை பெறுவதற்காக வெளியிடப்படுகின்றன. இவர்களின் நோக்கம் பணம் பெறுவதாக மட்டுமே இருப்பதால் நூல்களின் தரம் பற்றியோ, பொருண்மை பற்றியோ கவலைப்படாத போக்கும் நிலவுகிறது.

சிங்கப்பூர் எல்லாருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் நாடு என்பதால் ‘திரவிய தேசத்தை’ நன்றாகவே பயன்படுத்திக் கொள்கின்றனர் புதிய குடியேறிகள். இவர்களின் நாட்டுப்பற்று இவர்கள் பிறந்த இந்தியமண்ணின் மீதுதான்! மேலும், சிங்கப்பூரில் பணிப்பெண்ணாக வேலை பார்த்தவர்களும் வேலை பார்ப்பவர்களும் கூட கவிஞர்களாகியுள்ளனர். ஞானப்பிரகாசம் மோனிக்கா என்பவர் ‘நிஜத்தின் நிழல்கள்’ என்னும் நூலையும், ச.மீனாட்சி என்பவருடன் இணைந்து ‘நிசப்த ராகங்கள்’ என்னும் நூலையும் வெளியிட்டுள்ளார். இவற்றிலும் இந்நாட்டுப் பின்னணி இடம்பெறவில்லை. தற்போது கவிமாலை என்னும் அமைப்பிலுள்ள ‘பிஷான் கலா’ என்பவரும் கவிதை என்ற பெயரில் ஏதோ எழுதுகிறார்.

புதிய குடியேறிகளின் கவிதைகளில் சில தங்கமுனை விருதுப் போட்டியில் பரிசுகளைப் பெற்றிருக்கின்றன.

பிச்சினிக்காடு இளங்கோ
நெப்போலியன் - 2001

இந்திரஜித், சுப்ரமணியன்
ரமேஷ் - 2003

சுப்ரமணியன் ரமேஷ் - 2005

ந.வீ.சத்தியமூர்த்தி
மலர்விழி இளங்கோவன் - 2007

ரஜீத் - 2009

பரிசு பெற்றிருக்கும் இக்கவிதைகளை நோக்கப் போட்டிக்கு அனுப்பப்பட்ட கவிதைகளில் இவை பரிசு பெறுவதற்குத் தகுதி உடையவை என நடுவர்களால் தீர்மானிக்கப்பட்ட இக்கவிதைகள் படைப்பின் உச்சங்கள் என்றெல்லாம் கருதிவிடத்தக்கவை அல்ல; இவர்களுக்குக் கிடைத்த அங்கீகாரங்கள் என்று கொள்ளத்தக்கனவும் அல்ல. இவர்கள் கவிதை எழுதவேண்டும் என்று கொண்டிருக்கும் ஆர்வத்தைப் பாராட்டலாம். அண்மையில் 2009-இல் நடைபெற்ற தங்கமுனை விருதுப் போட்டி பற்றி கருத்துரைத்த, அப்போட்டியின் நடுவர்களுள் ஒருவராகப் பணியாற்றிய க.து.மு.இக்பால் கூறியபடி, “இவர்கள் செல்ல வேண்டிய தூரம் நிரம்ப இருக்கிறது” என்னும் கருத்தை இவண் நினைவு கூர்வது மிகப் பொருத்தமானது.

தங்கமுனை விருதுப்போட்டிகளில் சமீப காலமாகப் போட்டியில் பங்கேற்போர் பற்றிய விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. அதாவது எவர் ஒருவர் எத்துறையில் நூல் வெளியிட்டிருப்பினும், அவர்கள் போட்டியில் பங்கேற்க இயலாது. இதனால், புதிய திறமைகளை இனங்காண முடியும் எனப் போட்டியின் ஏற்பாட்டாளர்கள் கருதினர். மற்ற மொழிகளில் திறமையுடையவர்கள் அடையாளம் காணப்பட தமிழ்மொழியில் ஆர்வலர்கள் மட்டுமே அடையாளம் காணப்படுகின்றனர்.

புதிய குடியேறிகளில் சிலர் பரிசுகளைப் பெறும் நோக்குடன் பதவியிலிருப்பவர்களையும், பரிசு பெறுவதற்குத் துணைபுரியப் பாலமாகி நிற்பவர்களையும் காக்கை பிடித்துக் கொண்டும், அவர்களை வால் பிடித்துக் கொண்டும் கேவலமாக நடந்து கொள்வதையும் சிங்கப்பூர்ச் சூழலில் புதிதாகக் காணமுடிகின்றன. இந்திய மண்ணில் இவை சகஜம். சிங்கப்பூருக்கு இது புதுவரவா? என்ற ஐயமே எழுகிறது. விருந்து சாப்பிட்டால் விருது பெறலாம் என்ற நம்பிக்கையும் சிலரிடம் முளைவிட்டுள்ளது. விருது, பரிசு, பாராட்டு என்பன எல்லாம் தகுதி அடிப்படையில் தானாகவே வரும் என்ற எண்ணம் இப்படிப்பட்ட சுயநலக்காரர்கள் சிந்தனையில் ஏன் உதிக்கவில்லை? ‘எங்குப் பார்த்தாலும் எனது படைப்புகளே’ இடம்பெற வேண்டும் என்ற சுயநலந்தானே இழிநிலைக்குத் தள்ளுகிறது? இந்தச் சூழலில் தமிழ்க்கவிதை வளரவேண்டிய பரிதாப நிலையே இங்கு உள்ளது. உண்மையில் தமிழ்க்கவிதை மீது காதலுடையார் “காக்க! காக்க! கவிதையைக் காக்க!” என்று கடவுளிடம் மன்றாட வேண்டியதுதான்!

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768